ஷைலஜா/இருளின் நிறங்கள்




ஒரு நாளில்லை இரண்டு நாளில்லை ஆறுமாதமாய் உடம்பெல்லாம் அரிக்கிறது. கிராமத்தைவிட்டு பெரியவர் தாமோதரனுடன் இங்கு வந்து மாதக்கணக்காகிவிட்டாலும்,வீட்டில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

அவ்வப்போது தொலைக்காட்சியில் மாளவிகா ஆடிக்கொண்டே பாடும்’ கருப்புதான் எனக்குப்பிடிச்சகலரு’ கேட்கும்போது மட்டும் அரிப்பு நிற்கிறது. மனசு மகிழ்ந்துபோகிறது. மற்ற பொழுதெல்லாம் என்னைக்குடைந்தெடுக்கிறவர்களிடமிருந்து எனக்கு யார் விடுதலை கொடுக்கப்போகிறார்கள்?

காத்திருக்கிறேன்.

வெளியே மழை வரப்போவதற்கான அறிகுறியாய் மண்வாசனை அடிக்கிறது.

பள்ளிக்கூடம் கிளம்பத் தயாரானாள் வர்ஷாகுட்டி.

“குடை எடுத்துக்கோ வர்ஷு” என அவள் அம்மா பானு கூவினாள்.
“எடுத்துக்கிட்டேன் பர்ப்பிள்கலர்குடை என்னோடதும்மா.”

“சரி சரி அந்த ப்ளூ கலர் குடையை எனக்கு வச்சிடு”

“நானும் ஆபீஸ் கிளம்பறேன்பானு..ஆமா பானு உனக்கு மார்க்கெட்போய் காய்கறிவாங்கணுமா போறவழில ட்ராப் பண்ணட்டுமா? மழை பலமாய்வரும்னு டிவில இப்போ சொன்னாங்க”

“வேண்டாங்க..நான் ட்ரஸ் பண்ணிக்கிளம்ப நேரமாகும்..மழை வந்தா அந்த ஜப்பான் குடை இருக்கே.. உங்கப்பாக்கு டயபடீஸ்.. கோதுமக்கஞ்சி செய்துகொடுக்காம நகரமுடியாது ஹ்ம்ம்”

அலுப்புடன் கூறிய பானு உள்ளே போய் கஞ்சிடம்ளரை ஹால் மூலைக்கட்டிலில் படுத்திருந்த தாமோதரனின் அருகில் இருந்த ஸ்டூல்மீது லொட் என வைத்தாள்.

பிறகு வண்ணக்குடை ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

தாமோதரன் கண்கள் கலங்கினாலும் கஞ்சியைஏறெடுத்தும்பார்க்கவில்லை

அவரைப்போல் கூடத்து மூலை சுவர் ஓரத்தில் ஒடுங்கி இருந்த என்னை வாஞ்சையுடன் பார்த்தார்.
மெல்ல நடந்துவந்து கையிலெடுத்தார்.கதவை சார்த்திக்கொண்டு
வாசல்பக்கம் வந்து என்னைப்பிரித்தார்

. என்னை அரித்துக்கொண்டிருந்த சின்னசின்னபூச்சிகள் என்னிடமிருந்து விலகிப்பறந்தன. அம்மாடி! எனக்குள் காற்று புகுந்துகொண்டது. வெளி உலகப்பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டன!

என் கழுத்துப்பகுதியை அழுத்தி என்னை விரித்தார்.

“அடப்பாவமே பொத்தலாயிட்டியே! எனது கல்யாண காசியாத்திரையின்போது எத்தனை கம்பீரமாய் இருந்தாய் ! என்னைப்போல் உன்னையும் யாரும் வீட்டில் சரியாய் கவனிப்பதில்லை. ஆனாலும் என் வெண்கொற்றக்குடை நீதான்..” என சொல்லி சிரித்தார்.

எனக்குப்பெருமையாய் இருந்தது. சாலைக்குவந்தவர், தூரத்து பஸ் நிறுத்தத்தில் வண்ணக்குடைகளுடன் பலர் பஸ்ஸுக்குக்காத்திருக்க பொத்தல் கருப்புக்குடையுடன் தாமோதரன் சாலையில் நிற்பதை பலர் வேடிக்கைபார்த்தனர்.

திடீரென வானம் இருட்டிக்கொண்டுவந்தது.

தாமோதரன் என் மேனியை இறுகப்பற்றிக்கொண்டு வீட்டுக்குவந்துவிட்டார் .வராண்டாவில் என்னை விரித்துவைத்தார்.

வீட்டில் இருள் சூழ்ந்திருக்க மின்சாரமும் பறிபோயிருந்தது. வர்ஷாவை அழைத்துக்கொண்டு வந்த பானு ”நல்லவேளை ஸ்கூல் லீவ் விட்டாங்க.போன் வந்ததோ நேரே போகமுடிஞ்சுதோ… கோரமழை…ரோடே இருட்டா இருக்கு” என்று புலம்பியபடி வேகமாய் வீடுவந்தவள் இரண்டு வண்ணக்குடைகளை என் அருகில் விரித்துவைத்தாள்.

அடுத்து வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை..
பானு”இருங்க .காம்பவுண்ட் வாசல்ல காரை நிறுத்திட்டு மழையில் நடந்துவராதீங்க இதோ குடையோட வரேன்..டார்ச் லைட் எங்கே சனியன் தேடறப்போ கிடைக்காது..” என்று உள்ளிருந்தே கூச்சல்போட்டாள். தட்டுதடுமாறி வராண்டாவிற்குவந்து என்னை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைகிறாள்.

இருட்டில் எல்லா நிறமும் கருப்புதானே!

One Comment on “ஷைலஜா/இருளின் நிறங்கள்”

Comments are closed.