மனுஷ்ய புத்திரன் கவிதை

எல்லோரும் ஊருக்குப் போகிறார்கள்
நகரம் காலியாகிக்கொண்டேயிருக்கிறது
ரயில்கள் நிரம்பி வழிகின்றன
பேருந்துகள் நிரம்பி வழிகின்றன
சாலைகள் நிரம்பி வழிகின்றன
நாளை காலை
இந்த நகரம் ஒரு காலி மைதானமாகிவிடுமா?
கைவிடப்பட்ட நகரமாகிவிடுமா?

மேலும் கூட்டம் கூட்டமாக வெளியேறும்
இவ்வளவு பேரில்
என்னைத் தனியாக விட்டுச் செல்கிறோமே என
ஒருவருக்குகூடவா தோன்றவில்லை?

வெறிசோடிய சாலைகளில்
நான் ஒரு அணிலைபோல
அங்கும் இங்கும்
தனித்தலைவேன்

திரும்பிவரும்போது
நகரத்தை பூட்டிவைத்துவிட்டு
சாவியைத் தேடுவதுபோல
கொஞ்ச நேரம்
உங்களைக் காக்கவைப்பேன்

உங்களையெல்லாம்
ஓரளவு நன்றாகத்தானே பார்த்துக்கொண்டேன்
அப்புறம் ஏன்
இவ்வளவு ஆவேசமாக
வெளியேறிப் போகிறீர்கள்?

10.11.2023
இரவு 11.02