லா.ச.ராமாமிருதம்/எழுதுவது எப்படி?

5.

நம்முடைய தற்போதைய நிலைமை, நாளடைவில் காலப் பதிப்பினாலும், பொருளாதாரம் காரணமாகவும் சில அவசியங்களாலும், பல அனாவசியங்களாலும், மேனாட்டுப் பழக்க வழக்கங் களில் சில, வௌவால் கணக்கில், (அதாவது பறவையினமா, மிருக இனமா, எதில் சேர்ப்பது எனும் வகையில்) நம்மில் வடிந்தும், படிந்தும் போனாலும், நம் வேர்கள் ஆத்மிகத்தில் ஊன்றி ஊறிப் போனவை. நம் மரபு, பண்பு, சிந்தனை, எல்லாம் அவன் சிருஷ்டி, ஓம்சக்தி, ஆகையால் அவனுக்கே (அவளுக்கே) அர்ப்பணம், சரணாதம், தத்வமஸி. இந்த நம்பிக்கைகளின் ஓட்டத்தில் இந்து மக்கள் ஜனித்து, வாழ்ந்து, அந்த வழியில் கலைகளும் ஆசாரங்களும் உருவானவை. அயோத்தியிலிருந்து கங்கைவரை, ராமனின் பாதம் பட்ட பூமி இது. எது தர்மம், எது அதர்மம், எது வாழும் வழி என்பதைத் தெளியவே குருக்ஷேத்ரத்தில் தனியாக யுத்தம் நடந்த நாடு இது. ஒவ்வொரு சம்பவத்திற்கும் அதன் மேனோக்கு மட்டும் அல்ல, அதன் தாத்பர்யம் என்ன? இந்த ரீதியில் வாழ்க்கைக்கே அர்த்தம் என்ன? நான் யார்? என்கிற கேள்விக்குப் பதிலைத் தேடி, இமயமலையின் பனிக்குகைகளிலிருந்து கன்யாகுமரியில் கிழக்கு மலைச்சாரல் குகைகளிலும், இன்னும் தவமிருக்கும் முனிபுங்கவர்கள்; நாடுபூரா, இதே சாக்கிலும், நாணயமாகவும் திரியும் பைராகிகள், மேலும் சங்கரர், புத்தர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், இன்னும் நம் கண்ணுக்குத் தென்படாத மகான்கள், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் எனும் அவர்களுடைய பரமகருணையில் நம் நாடு பதம் கண்டது. கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கோபுரங்களையும் சிற்பங்களையும் வியக்கிறோம். ஆனால், சிற்பி யாரென்று அறியோம். தன் பெயருக்கோ, பெருமைக்கோ, தன் நாமத்தைக்கூடப் பரம்பரைக்கு விட்டுச் செல்லாத அளவுக்குத் தன் கலைக்கே தியாகமான கலைஞர்கள். இது நம் பின்னணி. நம் இலக்கியம் இந்தச் சாயல்களினின்று முற்றிலும் விடுபட முடியாது; இந்தப் பின்னணியை அழிக்கவும் முடியாது. ஏன் விடுபட முயலவேண்டும், ஏன் அழிக்க வேண்டும்? ஆயிரம் நாஸ்திகம் பேசலாம். ஆனால் கோவில்களில் கூட்டம் குறையவில்லை. காலக்ஷேபங்கள் அமோக மாக நடைபெறுகின்றன. அடிப்படையில் மற்ற நாடுகளைக் காட்டிலும் நாம் கதைகளில் ஊறிப்போனவர்கள்; கதை கேட்க விருப்பமானவர்கள். அதற்குரிய அவகாசம் நாம் என்றுமே உள்ளவர்கள். நாம் சௌந்தர்ய உபாசகர்கள்; இந்த முறையில் நம் இலக்கியத்தை நாம் பார்ப்பதும், பேணுவதும், உருவாக்க முயல்வதும் ஒழுங்கு என்று நான் சொல்ல வருவதை ஒப்புக் கொள்வீர்களா? ஓரளவுக்குத் தியாக உணர்ச்சியில்லாமல், எந்தக் கலையும் கைவசப்படாது. அதற்குத் தனி உயிர் உண்டு. அதன் அரூபத்தில் அதை வசப்படுத்திக்கொண்டு, அல்லது அதன் வயமான பின்னர், அந்த அரூபத்தினின்று உருவங்கள் தோன்ற இடமளிக்கும்.

சிறுகதை எழுதுவது எப்படி?

அது சிறுகதையோ, நெடுங்கதையோ, எழுத்தைப் பயிலுவதற்கு ’character விருத்தி செய்துகொள்ள வேண்டும். ஆ, தம்பி! வெகுண்டு எழலில் பயனில்லை. எழுத்தின் சாதகத்துக்கு character இன்றி அமையாதது என்று என்மேல் யாரும் மானநஷ்ட வழக்குப் போட முடியாதவரை, கூரை உச்சிமேல் நின்று அறைகூவி, பறைசாற்றிக்கொண்டிருப்பேன். என் character ஐப்பற்றி என்ன கண்டுவிட்டாய், அது என் சொந்த விஷயம், எழுத்துக்கும் குணத்துக்கும் என்ன சம்பந்தம்? இரண்டாவது கேள்விக்குப் பதில் ‘கிடையாது’ என்பது ஒரு விமரிசன நோக்காகவே திகழ்கிறது. விவாகரத்து, கலியாணத்துக்கு முன்னரே கன்னியிழப்பு, பரீக்ஷா தாம்பத்ய வாழ்க்கை, மதமும் அரசியல்தான்-ஈதெல்லாம் சமுதாய வாழ்க்கையிலேயே சகஜமாகிவிட்ட இடங்களில் எழுத்து வேறு, எழுத்தாளன் வேறு எனும் சௌகரியம் பொருந்தும், ஆனால் நம் பாரம்பர்யம் அப்படி அல்ல. விடிகாலையின் ஆலயமணி, கிளி கீச்சிட்டால் “மீனாக்ஷி”, கருடன் கத்தினால் “கிருஷ்ணா!” மாலையில் கோபுர தரிசனம், சூர்யன், சந்திரன், ஜலம், அக்னி எல்லாமே நம் மூச்சு வாகனத்தில் ஏறிவரும் தெய்வங்கள். எப்பவும் நம் உள்ளுணர்வு தூய்மையையே தேடிக்கொண்டிருக்கிறது. சிறுகதை மூலம் நான் பக்திப் பிரசாரம் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. நம்முடைய ஆத்மிக பரம்பரையின் images  சிறுகதையின் சௌந்தர்ய உபாசனையில் எப்படியெல்லாம் பரிமளிக்க முடியும், பரிணாமம் (dimension) காட்டமுடியும் என்று கோடி காட்டுகிறேன்.

பண்டைக் காலத்தில் ஸங்கீத வித்வான்கள், தங்கள் குரலை எப்படிக் காப்பாற்றி வந்தார்களோ, அது போன்றே, எழுத்து வன்மை தன்னிடமிருப்பதை உணர்ந்துகொண்டபின் முறைப்படி அதையும் காப்பாற்றி ஆகவேண்டும். எழுத்துக்கும் இசைக்கும் என்னால் பேதம் கண்டுபிடிக்க முடியவில்லை. இசைக்குச் சிந்தனையுடன், செவியின் பரிணாமம் துணையிருக்கிறது. எழுத்துக்கு அதுவுமில்லை. சிந்தனையெனும் ஒரே தந்தியில் (செவிக்கும் எட்டாது, கண்ணுக்கும் படாத)-ஒரே தந்தியில் இதயத்தையே மீட்டியாகிறது. இதைவிடப் பேறு உண்டா? ஆகையால் இந்தச் சக்தியைக் காப்பாற்றுவதில் உஷார்கூட என்று எச்சரிப்பதில் என்ன தவறு?

தவிர, character என்று சொல்லிவிட்டாலே சட்டையை முழங்கைவரை தள்ளிக்கொண்டு, கையை முஷ்டித்துக்கொண்டு வர அவசியமில்லை. அந்தச் சொல்லுக்கு நேர் தமிழ் அறியேன் ஆதலின் அதையே உபயோகப்படுத்துகிறேன். நல்லவை, கெட்டவை என்பதோடு மட்டும் இந்த வார்த்தையின் பொருள் வீச்சு நிற்கவில்லை.

நேர்மை, நெறி வழுவாமை, சபலங்களுக்கு இடமாகி, அவைகளை நிறைவேற்றிக்கொள்ள, குறுக்கு வழிகளிலும் சுலபமான உ உத்திகளிலும் இறங்காத திடசித்தம், தன்னம்பிக்கை, அதே சமயத்தில் தன்மேலேயே நிர்த்தாக்ஷண்யம், அர்ச்சுனக்குறி சாயல்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். மனிதாபிமானத்தோடு ஒன்றிப்போகையிலேயே, அதுபற்றி எழுத்தில் வடிக்கும்போது, சொல்லும் விஷய தரிசனத்துக்கு அதனின்று ஒதுங்கி நிற்கப் பயில வேண்டும். உண்மையான கலைஞன் அவன் பேணும் கலைவரை இரக்கமற்றவன். True Artistry is Ruthless. இதை என்னால் என் திருப்திக்கு மொழி பெயர்க்க முடியவில்லை. இதைத்தான் character என்கிறேனோ என்னவோ!

2 Comments on “லா.ச.ராமாமிருதம்/எழுதுவது எப்படி?”

Comments are closed.