எஸ் வி வேணுகோபாலன்/போலிகளுக்குக் காத்திருத்தல்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே
இலக்கு வைத்திருந்தனர்
விரட்டி விட வேண்டும்
ஆட்டம் காட்டும்
எல்லோரையும் என்று!

தங்கள் விதி அறிய வந்த நாள் முதல்
தங்களை மெல்ல மெல்ல
சிதைத்துக் கொண்டே வந்தனர்
அவர்களும்

பலரும் மூட்டை முடிச்சோடு
இடத்தைக் காலி செய்து விட்டுப் போகச்
சிலர் மிச்ச சொச்சம்
வைத்துப் போயிருந்தனர்

இப்போது நடந்து கொண்டிருக்கிறது
ஈவிரக்கத்தோடு ஓர்
அப்புறப்படுத்தல் …
வம்பு செய்யாத ஒன்றிரண்டு ஆட்களையும் கூடச்
சேர்த்து
வெளியேற்றம்

மொத்த மைதானமும்
காலியாகும்

களம் பின்னர்
பதப்பட்டுப் பக்குவப் படவிட்டுக்
குடி வர இருக்கின்றனர்
அதே இடத்தில்
போலியான மனிதர்கள்

காத்திருக்கிறேன்
இருக்கும் கொஞ்ச நஞ்சம்
உண்மைப் பற்களைக்
கடித்துக் கொண்டு –
போலியானவர்களை வரவேற்க!

9 Comments on “எஸ் வி வேணுகோபாலன்/போலிகளுக்குக் காத்திருத்தல்”

  1. நல்ல கவிதை. மனதை தைக்கும் உண்மைகள் போலிகளை வரவேற்க காத்திருக்கிறது என்பது நல்ல வரிகள்.

    1. “மனிதனின் கெட்ட செய்கைகளுக்கு சோம்பேறிதனமும் மூடநம்பிக்கைளும் காரணமாகும்,
      மனிதனின் நல்ல செய்கைகளுக்கு சுறுசுறுப்பும் புத்திசாலிதனமும் காரணமாகும்” என்ற சொற்றொடர்கள் லியோ டால்ஸ்டாயின் “போரும் அமைதியும் ” நாவலில் வருகிற கருத்து.
      ஆனால் இன்றைய காலத்தில் சுறுப்பாகவும் புத்திசாலிதனமாகவும் போலிகள் பல அமைப்புகளுக்குள் களமாட வந்துவிடுகிறார்கள்.

  2. அப்புறப்படுத்தப்பட்டவர்களின் வரிசையில் அப்பாவி பிஞ்சுகளும் கூட …. அப்புறப்படுத்துவதென்பது வெறும் துரத்தல் மட்டுமல்ல; அழித்தொழிப்பதுவும் ஆகும். அம்பலப்பட்டாலும், அசிங்கப்பட்டாலும் ஆதிக்க அரவணைப்பில் கொக்கரிக்கும் இவர்களை நற நற பற்களின் மூலம் கடித்துக் குதறுவோம்.

  3. சோவியத் விழுந்து முப்பத்தைந்து வருஷங்கள் ஆகிவிட்டன. ரஷ்யாவை இப்போது யாரும் காறித்துப்புகிறார்கள். சீனா மட்டும் சாத்தியமே இல்லாமல் முப்பது வருடங்களில் காட்டு வளர்ச்சி கண்டிருக்கிறது.

    இது எதனைப் போதிக்கிறது என்று பெரும்பாலும் புரிய மாட்டேன் என்கிறது.

    ஒரு மனிதன் தன் அறிவைத் திறமையாக உபயோகித்து நிறைய சம்பாதிக்கிறான். அதன் உபரியை அவன் என்ன செய்ய வேண்டும்? அவனளவு சம்பாதிக்கத் திறமை இல்லாத சக மனிதர்களுக்கு அதைப் பகிர்ந்து கொடுத்து விட வேண்டுமா? அப்படியானால், திண்ணைத் தூங்கிகளாகவும், பொறுப்பாக வேலைசெய்யாது சட்டம் பேசியே காலம் கழிக்கும் பல்துறைக் கனவான்களும் இதில் பலனடைந்து விடுவார்களே?

    ஒழுங்காக உழைத்து சம்பாதிப்பவன், அவனால் உருவாக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்காக செலவழிப்பது தானே நியாயம்?

    இல்லை இல்லை, அவன் வீட்டில் வேலை செய்யும் சொற்ப சம்பளம் வாங்கும் மனிதர்களுக்கு அதைப் பகிர்ந்து கொடுத்தே ஆக வேண்டும் என்றால் (அதுவும் சமயங்களில் செய்வது தான். ஆனால், அவைகள் கருணைப்படிகள். சட்டம் கிடையாது) அவனவன் இருப்பதிலேயே சுலபமான சுகமான வேலைகளை தேர்ந்தெடுக்கப் போட்டி போட மாட்டார்கள்?

    அது போகட்டும்.‌ உபரியை சேமித்துக் கொள்ள மட்டும் அனுமதி. ஆனாலும், மனிதனால் மட்டுமே, அதிலும் ஒரு மதத்தினரால் மட்டுமே, முழுக்க முழுக்க உருவாக்கப்பட்ட மரணக் கடவுள் முன்னறிவிப்பின்றி ஒருவனது ஆயுளை முடித்து விடுகிறாரே? அப்போது என்ன செய்வது?

    இறந்து போனவர் விட்டுப் போன சொத்து பத்துகளை சமூகத்திற்குப் பிரித்துக் கொடுத்து விடலாமா? அப்படியானால் யாருக்கு அதைக் கொடுப்பது? கவர்மென்ட் கொடுக்கும் இன்னபிற ‘சம்பளங்களை’ அதே கவர்மென்ட்டுக்குப் பஞ்சப்படியாக, வெறும் நீராகாரம் அருந்தி, திருப்பிக் கொடுக்கும் இளைய தலைமுறைக்குத் திருப்பிக் கொடுக்குமாறு சட்டம் இயற்றலாமா?

    இல்லை, வாரிசுதாரர்களே அவற்றை அனுபவித்துத் தொலையட்டும் என்றால் தராசின் தட்டுகள் ஏறத்தாழத்தானே இருக்கும்?

    அதை எப்படி சமன் செய்வது?

    இல்லாத கடவுளின் அனுக்கிரஹத்தால் எனக்கு இந்தியாவின் நிறைய நகரங்களில் வசிக்கும் பாக்கியம் கிட்டியது.

    அந்த வகையில் நான் பார்த்த மிகவும் வசதிக்குறைவான, அழகில்லாத நகரம் நம் தர்மமிகு நகரம் தான். வேறெந்த நகரமும் கடந்த இருபது ஆண்டுகளில் வேறு லெவலில் வேறு மோஸ்தரில் வளர்ந்து விட்டன. நாம் இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் என்ற அந்தஸ்தை இழந்து மாமாங்கம் ஆகிவிட்டது.

    எனக்குத் தெரிந்து நாற்பது ஆண்டுகளாக ஏதோவொரு ஆர்ட்டீரியல் சாலையிலாவது தீவிரமான மராமத்துப் பணிகள் அனுதினமும் நடப்பது நம்மூரில் மட்டும் தான்.

    கடந்த ஆறு மாதங்களில் நான் இருக்கும் இந்த ஊரில் ஒரு பெரிய சாலையிலாவது மராமத்துப் பணிகளை பார்க்கவில்லை. இந்த ஊர் வேறு நிலையை எட்டிப் பத்தாண்டுகள் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

    இந்த ஊர் மட்டும் அல்ல, பெங்களூர், பூனா, அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்கள் நம்மை வெகுவாகத் தாண்டிச் சென்று விட்டன. மக்கள் தொகையிலும் இந்த நகரங்கள் நம்மைக் கடந்து விட்டன.

    காரணம் நாகரீகம். இந்தியாவின் ஒவ்வொரு பிரதேசத்திலும் குறைந்த பட்சம் ஒரு நகரம் அதீதமாக முன்னேறுகிறது. முன்னேற்றத்தின் போது அவை அழகுணர்ச்சி ததும்ப முன்னேறுகின்றன. அழகுணர்ச்சியும் சீதோஷ்ணமும் ஒருசேர அமைந்து விட்டால், அது முதலீட்டாளர்களின் புகலிடமாக எளிதில் அமைந்து விடுகிறது.

    கோவையை திருச்சியை ஒத்த நகரங்களான காக்கிநாடா, விஜயவாடா , விசாகப்பட்டினம் அதனிலும் சிறிய பீமாவரம், மீடியம் ரேஞ்ச் நகரங்களான நாக்பூர், ராய்ப்பூர், புவனேஷ்வர், சண்டிகர், கர்னால், ஜெய்ப்பூர், பரோடா, நாசிக், ஹூப்ளி, மைசூர், கொச்சி, கோவா, மொஹாலி, லக்னோ, பாட்னா, ஜாம்ஷெட்பூர், வாரங்கல் என்று எவ்வளவு நகரங்கள் மேற்கத்திய நகரங்களோடு போட்டி போட்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றன?

    நம்மூரில் ஆயிரம் விளக்கு என்று ஒரு பகுதி இருக்கிறது. அதில் வசிப்பவர்கள் யாரும் கடந்த பத்து வருடங்களில் சம்பாதித்து இடங்களை வாங்கி குடி வந்தவர்கள் இல்லை. வாரிசுரிமையாகப் பாட்டன் காலத்திலிருந்து அங்கு வசிப்பவர்கள்.‌அவர்கள் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் விஸ்தீர்ணத்தில் வசிக்கும் மிகப்பெரிய பணக்காரர்களிடமிருந்து மிகமிகப் பின் தங்கியவர்கள். சமூகத்தின் கடைக்கோடிக் கடமைகளை நிறைவேற்றி, அது தரும் சம்பாத்தியத்தில் உழல்பவர்களாக, அன்றாட ஜீவனத்தை, அதற்கான குறைந்த பட்ச உத்தரவாதத்திற்குக் கீழாக வாழ்பவர்கள்.

    இவர்களைப் போல சென்னையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் தலைமுறையாக வசிக்கிறார்கள். நகரத்தின் முக்கியமான கேந்திரங்களில் பெருகியிருக்கும் இவர்களது ஏழ்மை இவர்களையும் நல்ல வாழ்க்கை வாழ விடாமல், நகரத்திற்கும் ஒரு ஏழ்மையான தோற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று அரசு கருதுகிறது என்று எடுத்துக் கொள்வோம்.

    அப்போது அரசு ஒரு யோசனையைக் கொண்டு வருகிறது.

    இவர்களிடமிருந்து இந்த இடங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்கி அதற்கான கணிசமான தொகையை அளிப்பது. இம்மாதிரி இடங்களை நவீன மோஸ்தரில் கட்டி ஏலத்திற்கு விடுவது. ஏற்கனவே இருந்தவர்கள் கையில் கணிசமான பணம் இருப்பதால் வேண்டும் என்றால் இதே இடத்தில் வாங்கிக் கொள்ளலாம். இல்லை என்றால் வேறொரு இடத்தில் வாங்கி, உபரித் தொகையைக் கொண்டு அழகான வாழ்க்கை வாழலாம் என்று தீர்மானிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் எங்கே தவறு இருக்கிறது?

    மும்பை, தில்லி போன்ற நகரங்களில் வெகு காலத்திற்கு முன்பே நடைமுறைப் படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயலாக்கப்பட்ட திட்டம் தானே இது?

    இதனால் நகரமும் அழகு பெறும். பழைய கட்டிடங்களை அவ்வப்போது அகற்றி, புதிதாக காலத்திற்கு ஏற்ப மாறுதல் செய்து வந்தால்தானே நாம் கால ஓட்டத்தில் பங்கு பெற முடியும்?

    நான் ஏழையாகத்தான் இருப்பேன். வேலை கொடுத்தாலும் வர மாட்டேன். (கொங்கு மண்டலம் இதற்கு சான்று). என் வீட்டையும் அழகு படுத்திக் கொள்ள மாட்டேன். நீயும் செய்யக் கூடாது.

    ஐயையோ, அவன் பெரிய படிப்பு படித்து பெரிய பதவியில் இருக்கிறான்.‌ஒரே ஸ்தாபனத்தில் வேலை செய்யும் எங்கள் இருவர் மத்தியிலும் எவ்வளவு வேற்றுமை? இது ஒழிய வேண்டும். அவனுக்கும் எனக்கும் ஒரே சம்பளம் தான் வேண்டும். எங்கள் வாழ்வு முறையும் ஒரே மாதிரி தான் இருக்க வேண்டும்.

    அவன் எதையும் சேமிக்கக் கூடாது. ஒவ்வொரு மாதமும் மீதமிருக்கும் உபரியைப் பிரித்துக் கொடு. இல்லாவிட்டால் அவனது வாழ்க்கைத் தரம் என்னுடையதை விட உயர்ந்து விடும். அவன் நல்ல இடத்தில் வீடு வாங்குவான். இல்லை, நல்லதாக வீடு வாங்குவான். அவனுக்குப் பிறகு அவனது மகன் அதை அனுபவிப்பான். ஆனால், என் மகன் நான் விட்டுச் செல்லும் ஏழ்மையைத் தான் அனுபவிப்பான். அது கூடாது. அவனை விரட்டி என் மகனை அதில் குடியேற்று.

    உண்மையில் அவரவர் வசிக்கும் அவரவர் வீடு அவரவர் உழைப்பல்லவா?

    ஒரு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் ஒருத்தர் தான் கலெக்டர். அவரோடு ஏகப்பட்ட சிப்பந்திகள் வேலை செய்கிறார்கள். ஆனால், அவருக்கு மட்டுமே கடல் போன்ற பங்களா. அவருக்கு சமமாக அருகில் அமர்ந்து வண்டி ஓட்டுபவர் மிகச்சாதாரணமான வீட்டில் ஜாகை.

    இதை எப்படி முரண்பாடு என்று கூற முடியும்?

    இந்த முரண்பாடு இல்லை என்றால் எல்லோருமே சிப்பந்திகளாகத்தானே நீடிக்க விரும்புவார்கள்?

    கடைசியாக ஒரு சந்தேகம்.

    அதெப்படி சீனாவின் ஷாங்காய் பெய்ஜிங் போன்ற நகரங்கள் இப்பேர்பட்ட வளர்ச்சியைக் கண்டன? இந்த நகரத்தில் வாழ்பவர்கள் எல்லோருமே உலகமகா பணக்காரர்களா? ஏன் காலம்காலமாக நமக்கு இங்கே போதிக்கப்படும் சித்தாந்தம் அவர்களுக்குப் போதிக்கப்படுவதில்லை?

    அவர்கள் முதலில் இதில் உழன்று, இது வேலைக்காகாது என்று கண்டுணர்ந்து வேறொரு நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பார்களாயிருக்கும்.

    என்ன, அவர்கள் நம்மூர் சகலைகளை மதித்துத் தாங்கள் அவ்வாறு மாறிவிட்டதை இவர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை போலிருக்கிறது. பாவம்.

  4. அருமை வேனு.. மிகவும் ரசித்தேன்..பல் பிடுங்கப் பட்டதையும் போலி க்குக் காத்திருப்பதையும் இவ்வளவு சுவை பட சொல்ல முடியுமா,?
    பாராட்டுக்கள்..

    ஜெயா சேகர்

Comments are closed.