நாகேந்திர பாரதி/கோபுர விரிசல்

இணைய காலக் கவியரங்கம்

ஈசன் நாமமும் ஈர வேட்டியுமாய்
சாமிக்கு அலங்காரம் செய்த
குருக்கள் எங்கே

கண்டா மணி அடித்து
பூஜை நேரம் அறிவித்த
காவற்காரன் எங்கே

ஓதுவார் தேவாரமும்
ஊதுவார் நாதசுரமும்
மேளமும் எங்கே

ஆராதனைக் கென்றே
வரிசையாய் வந்து போகும்
வித வித விளக்குகள் எங்கே

பூஜை முடிந்ததும்
உள்ளங்கை வந்து விழும்
உண்டக்கட்டி எங்கே

சுற்றுப் பிரகாரத்தில்
சுகந்த மணம் வீசும்
மலர்க் கூட்டம் எங்கே

திருப்பணி வேலையில்
கல்லைக் கலையாக்கும்
உளிச்சத்தம் எங்கே

சாயந்திர வேளையில்
சத்தமாய் விளையாடும்
பிள்ளைக் கூட்டம் எங்கே

வானம் பொய்த்ததால்
வள்ளுவர் வாக்குப் போல்
பூஜையும் பொய்த்தது

கோபுர நிலைகளில்
வளரும் செடிகளால்
விரிசலும் வளர்ந்தது

——————————–

One Comment on “நாகேந்திர பாரதி/கோபுர விரிசல்”

Comments are closed.