நாகேந்திர பாரதி/தனிமைச் சாலை

இணைய காலக் கவியரங்கம் -29/11/23


————————
ஊரை விட்டுத் தள்ளி
தனியாகச் சாலையொன்று
ஒப்புக்கு அங்கங்கே
ஒத்தைப் பனை மரங்கள்

வெளுப்பான வெயிலோடு
வெறுப்பான வானம்
குறுக்கே துண்டு போடும்
தண்டவாளம் ரெண்டு

தேய்த்துப் போகும் ரெயிலொன்று
சாலையின் தனிமை போக்கும்
மழையொன்று பெய்தாலே
மாறிவிடும் எல்லாமே

சில்லென்ற ஓடை ஒன்று
ஓரத்தில் ஓடி வரும்
செடியொன்று பூத்து வரும்
மணமென்ற சேதி வரும்

மாட்டு வண்டிக் கூட்டம் வரும்
மக்களுக்கு வாழ்வு வரும்
டீக்கடைகள் ஓரம் வரும்
தெருவென்ற பேரும் வரும்

———-