சீன நாட்டுப்புறக் கதை – ‘உண்மை இல்லை’ /தமிழில் அதங்கோடு அனிஷ்குமார்

திருவாளர் கெச்சோம் கதை கேட்பதில் அதிக விருப்பம் உடையவர்.ஆனால் கதை கேட்டு முடித்தவுடன் “இது உண்மையாக இருக்க முடியாது எனக் கூறி கதை சொல்பவரை கதிகலங்க வைத்து விடுவார்.
ஒருநாள் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அந்த கிராமத்து பள்ளி ஆசிரியர் அவ்வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரை அழைத்து எப்படியாவது தனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
‘ஒரே ஒரு நிபந்தனை’.”நான் கதை சொல்லி முடிக்கும் போது நீங்கள் இது உண்மையாக இருக்க முடியாது” என்று கூறக் கூடாது என்றார்.ஒருவேளை நீங்கள் அவ்வாறு கூறினால், எனக்கு உங்கள் வீட்டில் இருந்து ஒரு மூட்டை அரிசியைத் தர வேண்டும் என்று கூறினார்.
திருவாளர் கெச்சோம் நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவில் வாழ்ந்த ஒரு நிலப்பிரபு வைப் பற்றி சொல்லப் போகிறேன்.ஒரு நாள் இந்த கனவான் கவர்னரின் அரண்மனைக்குச் செல்ல தனது பல்லக்கில் ஏறினார்.போகும் வழியில் ஒரு பறவையின் அழுகுரல் கேட்டது. அவர் வெளியே எட்டிப் பார்த்தபோது அந்த பறவை அவரது அங்கியை மண்ணாக்கிவிட்டது.
ஒரு புதிய அங்கியை எடுத்து வருமாறு வேலை ஆளுக்கு கட்டளையிட்டார். அழுக்கான அங்கியைக் கழற்றிவிட்டு புது அங்கியை அணிந்து கொண்டு புறப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு அதே பறவை மீண்டும் அழுதது. இம்முறை பிரபு எட்டிப் பார்த்தபோது அவரது வாளை அழுக்காக்கிவிட்டது. உடனே ஒரு புது வாளைக் கொண்டு வரும்படி வேலை ஆளுக்கு கட்டளையிட்டார். அவனும் உடனடியாக ஒரு புது வாளைக் கொண்டு வந்து கொடுத்தான்.
எக்காரணம் கொண்டும் வெளியே எட்டிப் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்த போது அந்த பறவை மீண்டும் அழுதது. அவரால் வெளியே பார்க்காமல் இருக்க முடியவில்லை இம்முறை அவர் தலையில் மண்ணை இறைத்தபடி பறந்தது.
உடனடியாக ஒரு புதிய தலையைக் கொண்டு வரும்படி வேலையாளுக்கு கட்டளையிட்டார். அவன் புதிய தலையைக் கொண்டு வந்தவுடன் தனது தலையை வாளால் வெட்டினார்…….
ஓ! ‘ இது உண்மையாக இருக்க முடியாது என்று உளறித் தொலைத்தார் திருவாளர் கெச்சோம்.
‘ இல்லை அப்படி இருக்க முடியாது தான்’ என ஒத்துக்கொண்ட ஆசிரியர் நீங்கள் நிபந்தனையை மீறி விட்டீர்கள். நீங்கள் ஒரு மூட்டை அரிசியை எனக்கு தண்டமாகத் தர வேண்டும் என வெற்றி பெற்ற பெருமிதத்துடன் கூறினார்.
‘ அது உண்மையாக இருக்க முடியாது என நான் கூறினேனா?’ எனக் கேட்டார் திருவாளர் கெச்சோம்.