காசியபன்/முடியாத யாத்திரை

இப்பொழுது
ஒன்றும் நிகழ்வதில்லை.
எங்கும் என்றும் எப்பொழுதும்
என்றும் எங்கும் எப்பொழுதும் போலவே
எங்கள் பழைய வீட்டின்
இருள் அடர்ந்த கூடத்தில்
கற்றூண்கள் பார்த்திருக்க
மின்குழல் வெளிச்சத்தில்
அவளுடைய வெள்ளி மயிர்
(பண்டு கறுப்பாக இருந்தது)
பளபளக்க
எங்கள் மூக்குக் கண்ணாடிகள்வழி
ஒருவரை யொருவர் நோக்கி
இரு நாற்காலிகளில் வீற்றிருக்கின்றோம்
விடியும் முன்னே பால்காரன் வந்துவிட்டான்
காப்பிக்கடை முடிந்தாயிற்று
முற்றம் தெளித்து அவள் கோலமிட்டாள்
காலை ஊர்வலம் தெருவில் செல்கிறது.
கீரைக்காரி, கறிகாய்க்காரி, குரங்காட்டி,
லோஷன், ஸோப்பு விற்கும் விற்பனைப் பெண்
பிக்ஷாம் தேஹி யென்று உபாதான பிராம்மணன்
கந்தஷஷ்டிக்கு பிரிக்கவரும் கூட்டம்
அயர்ன்காரன், அம்மா தாயே
இப்படி இப்படி…
வழக்கம்போல வேலைக்காரியும்
காலதாமதமாக வந்துவிட்டான்.
வீட்டு வேலைகள் முறையாக நடக்கின்றன.
எதிரில் பண்ணையார் வீட்டுச் சுவரின்மேல்
மாமி காக்காய்க்கு சாதம் படைக்கிறாள்.
பித்ருக்கள் கூட்டமாய் வந்து கொத்தி
சென்றபின் வந்த அமைதியில்
எதிர் எதிர் நாற்காலிகளில்
பழைய நினைவுகள் உறுத்த
நாங்கள் இருக்கின்றோம்.
பேச வேண்டியது எல்லாம்
நாற்பது வருஷமாக பேசி முடித்தபின்
கிளிப் பிள்ளைபோல
பேசினதைப் பேசுகிறோம்
பேசுவதற்கு ஒன்றுமில்லை
எனினும் நிசப்தத்தை பயந்து
ஏதோ சொல்கிறாள்.
மூலை வீட்டுப் பெண்ணுக்கு கல்யாணம்
மாப்பிள்ளை பம்பாயில் எஞ்சினியர்
ஓட்டுவீட்டு பாப்பாவுக்கு
இரட்டை குழந்தைகள்
சுகப்பிரசவம் பார்க்கப் போகவேண்டும்.
அம்மிணியின் தங்கை அலமேலு
அப்துல் ரகிமானுடன் ஓடிவிட்டாள்
நடுவகத்து நாணு குடித்து லக்கின்றி
நேற்று நடுத்தெருவில் கிடக்க
காவல்துறை வண்டி இட்டுச் சென்றது
கையாலாகாத அண்ணன் பார்த்து நிற்க.
பின்… பேசுவதற்கு ஒன்றுமில்லை
ஒருவரையொருவர் பார்த்திருக்கிறோம்
இரு நாற்காலிகள் சுமக்க.

காலத்தின் போக்கை
கடிகாரம் கணக்கிடுகிறது
தவிர்க்க முடியாத
குளியல், உணவு, உறக்கம்
உறக்கத்துக்கு சத்ருவாக
மத்தியான ஊர்வலம்.
தபால்காரனை எதிர்பார்க்கும் ஆவல்
(அனேகமாக என்றும் நடைதாண்டி சென்றிடுவான்)
சிலநாள் தவறியென ஒரு கடிதம் எறிவான்
ஏதோ ஒரு மகளுக்கு ஞாபகம் வந்ததுபோலும்.

பேரனின் பரீட்சைத் தேர்வு எண்கள்
பேத்திக்கு நாட்டியத்துக்கு கிடைத்த பரிசு
மாப்பிள்ளை கார் வாங்கப் போகும் பெருமை…
மகனோ எழுதும் வழக்கமே இல்லை
யமனின் ஓலைதான் வரவேண்டும் என்பேன்.
வந்தால்,
நசிகேதக் கேள்விகள் கேட்டால்
திருப்திதரும் விடைகள் கிடைக்குமா?
அசட்டு சிந்தைகள் வரும் போகும்…

ஓய்வெடுத்து படுக்கையில் கிடப்போ மென்றால்
தொலையாத கர்மம் போல
பழக்காரி, கடலைக்காரன், வண்ணான்
ஆனந்தவிகடன் கேட்டுவரும் எதிர்வீட்டு மாமி
அழும் குழந்தையை அதட்டும்
அடுத்தவீட்டு பெண்ணின் அலறல்…
தொல்லைகள், தொந்தரவுகள், இடையூறுகள்
நோக்கமற்ற யாத்திரை நடந்துகொண்டிருக்கிறது.
எதிர்பார்க்க இனி ஒன்றுமில்லை
நாற்காலிகளும் நாங்களும்
ஒன்றையொன்று பார்த்திருக்கிறோம்.

எங்கே போகிறது? போனாலும்
புறப்பட்ட இடத்துக்கே வந்து
இடத்தை இனம் காணமுடியாமல்
மருட்சியில் தவிக்கிறோம்.
யோசனை செய்தால்

எப்படியும்
பார்த்தது பார்த்ததல்ல
நிகழ்வது நிகழ்ந்ததல்ல
சரித்திரம் சக்கிரமல்ல
கண்காணா நெடும்பாதை
இதில் உங்கள் சாதனை என்ன?
கல்வி முடிந்து, வாலிபப் பருவத்தில்
தீரப் புதுஉலகம் படைக்க இறங்கி
தைரியம் இழந்து
லக்ஷ்யங்கள் தடுமாறி
முரண்படும் சமரசங்கள் செய்து,
பின்,
பிள்ளை பெண்கள்
பணம் பண்ணும் வேதனைகள்
சாதாரண வாழ்க்கை
சாதாரணமாக நடந்தது.
மக்களைப் பெற்று
பெரும்வாழ்வு எய்தி
பெருமை யடைந்து
பின்
என் செய்வதென்று துலங்காமல்
பிரமை யடைந்து
தவிக்கும் அவள். நானோ?
நீ? நீ யாரடா?
தீப்பொறி யொன்று உள்ளில் எழ
தேடத் தொடங்கினேன்.
பிரபஞ்சத்தைப் பார்த்து பாடினேன்.
கபடங்கள் அசட்டுத்தனங்கள்
அதிகாரக் கிரகங்களின் சுற்றல்கள்
சிக்கி நாம் அவதிப்படும் வியூகங்கள்
வழியாகத் தேடினேன்.
இருளில் ஒரு ஒளிக்கதிர்
முயற்சி இருந்தது. முடிவு?
இதெல்லாம் ஒரு தப்பித்தல்
என்று சொல்லுகிறது மனசு.
பாலைவனம் முன் பரந்து கிடக்கிறது.
நாற்காலிகளில் நோக்கி இருக்கின்றோம்.
நிகழாத நிகழ்ச்சிகளுக்கு சாட்சி வகித்து.
வருஷகாலத்து வெறும் சிந்தைகள் அரிக்க.