ஜெயதேவன் கவிதை

நான் இன்னும் இருக்கிறேன்
உங்களோடு என்றும் இருப்பேன்
ஆயினும் ஒரு வனத்தின் தனிமரமாய்
வானின் தனிப்பறவையாய்
இப்போது

சில நாள் எனக்கே அந்நியனாய் இருக்கின்றேன்
சில நாள் நீர்க்குமிழியாய்
தோன்றி நானே உடைகிறேன்

உறக்கம் போன இரவுகள்
என் பகலை இருளாக்குகிறது
பகலோ இரவாய்

ஒரு காட்டுக்கோழியாய்
திரிந்தவன்
ஏதோ ஒரு மாய பஞ்சாரத்தில்
அடைபட்ட கோழியாய் இப்போது

மனதில் உங்கள் பிம்பங்கள்
அரை பிம்பங்களாய்…
நான் இங்கே உங்களோடு இருந்தது ஞாபகச் சிலந்தி வலையாய்
திடீடென அறுபட்டு தொங்குகிறேன் காற்றில்

நான் உங்களை விட்டு விலகினேன்
ஏன் உங்களை காண அஞ்சுகிறேன்
நீங்கள் வேறுலகு சஞ்சாரியாய்
நான் வேறுலகு சஞ்சாரியாய்

உங்கள் வீட்டு கதவுகளை திறக்கிறேன்
நீங்கள் யார் எனத் தெரிகிறது
ஆனாலும் இதன் முன் பார்த்த நீங்கள் இல்லை இப்போது
இல்லை….நான் வேறு நானாகி விட்டதாலும் இருக்கலாம்

இறைவனின் தோட்டத்தில் ஓர் அமைதி மலரை வேண்டி இறைஞ்சுகிறேன்
அவன் மீண்டும் நெருஞ்சி கனிகளையே நீட்டுகிறான்
முள் தைத்த காலில் மேலும் முள்

என் மொழி எங்கே என் கவிதை எங்கே
என் சொற்களை எப்படி இழந்தேன்
எதுவும் நினைவில்லை

உங்கள் பாடல் கேட்கிறது
எனக்கான பாடலாக அது இல்லை
வீணையை எடுத்து விறகுக்குள் ஒளித்தது போல்
ஒளித்திருக்கிறது என்காலம்

சில பொழுது இடுகாட்டுக் கனவு
சில பொழுது பிரபஞ்ச கனவு
நான் இப்போது கனவாளனா
கவிஞனா என விடைதேடி
நிற்கிறேன் காலத்திடம்

மீண்டு வருவேன் என்று தெரியும்
இந்த மழைக்காலத்திலும்
என் மழை தனியாய் உங்களுக்கு தெரியும்

சில கால வனவாசம்
இதன் காரணம் மனமா உடல்
இரண்டுமா
பெளதிகமும் ரசாயனமும்
இருவேறு படிமம்
ஆயினும் பிரித்து ஆய்ந்தால்
இரண்டும் வேறாகவும்
சமயத்தில் ஒன்றாகவும்

விரைவில் உங்கள் கைப்பற்றி நடப்பேன்
அதுவரை அதுவரை என் கைகளை மறக்காதிருங்கள்
என் பாதங்கள் மீண்டும்
இல்லம் வரும் போது
அதே பழைய பாதங்களோடு
அதே பழைய பாடல்களோடு வருவேன்

இறைவன் தன்னிடம் அழைக்க நினைக்கிறான்
நான் அவனை இங்கே அழைக்கிறேன்
இந்த போராட்டத்தில்
உங்கள் நேசனாகிய நான்
உங்கள் நேசனாகவே வருவேன்

காலமும் நானும் ஒரு விளிம்பில் நிற்கிறோம்
அது என்னை தள்ளி விட நினைக்கிறது
நான் காலத்தை தள்ளிவிட நினைக்கிறேன்
இறுதியில் நானே காலம்
என்னும் அரூபியாய்
உங்களோடு ஸ்தூலமாய் வருவேன்

இந்த நீண்ட கவிதை நான் எழுதவில்லை
எனக்குள் எவனோ எழுதி உங் களுக்கு தந்துள்ளான்
காலதீதமாய் உங்களுக்கான கவியை என் மொழியை விரைவில் எழுதுவேன்

தூரத்தில் மணி ஒலி கேட்கிறது
அது என்னை எழுப்பும் மணி
புதிய விடியலோடு உங்களை எழுப்ப வருவேன்

அது வரை அதுவரை அமைதி புறாவின் சிறகுகளை கேட்டுள்ளேன்
தரும்….புதிய சிறகுகளை தரும்
அப்போது உங்கள் கூட்டு புறாவாய் அமர்வேன்
உங்கள் தோளில்