நாகேந்திர பாரதி/வயற் காலம்

அழகியசிங்கரின் சொல் புதிது குழும இணைய காலக் கவியரங்கம் – 51


—————-
வெட்டைப் பரப்பாய்
வெயிலில் காய்ந்து
வேர்த்தது ஒரு காலம்

இருட்டினில் அடைந்திடும்
ஆட்டுப் புழுக்கையின்
உரத்தில் ஒரு காலம்

மழையினில் இளகி
வாசனை பரப்பி
குழம்பிய தொரு காலம்

சள புள சகதியில்
உழவன் ஏரினால்
குத்திய தொரு காலம்

தூவிய விதையினால்
துருத்திய நாற்றினால்
வருந்திய தொரு காலம்

தாங்கிய பசுநெல்
வீங்கிய நெற்கதிர்
சாய்ந்தது ஒரு காலம்

அரிவாள் வீச்சால்
அடிவரை அறுபட
வலித்தது ஒரு காலம்

போரடி மாடுகள்
நெல்லைப் படப்பாய்
மிதித்தது ஒரு காலம்

பொறுமையும் பூமியும்
ஒன்றாய்ச் சொல்லிப்
புண்ணாய் வயற் காலம்

———

One Comment on “நாகேந்திர பாரதி/வயற் காலம்”

Comments are closed.