ஆர்க்கே/வேடிக்கை மனிதரைப்போல்…!

சுற்றிலும் அடர்வாய்
சதிவலைப் பின்னல்

நீர்ச்சுழல்கள்போல்
பகைவர்தம் கூட்டம் -எங்கும் சொல்லொணா துயரலைப்பாய்ச்சல்–ஈங்கிவற்றால்
வீழ்வேனென்றே நினைத்தாயோ?

புதிரான விரிதலில்
எதிரே காலப்பாதை.
புரியாத மொழியதனில்
காற்றிலாடும் ஞானப்பாடம்

சரியான வழிகாட்டிடும்
குருவரம் இல்லாநிலை-
ஈங்கிவற்றால்
வீழ்வேனென்றே நினைத்தாயோ?

அவை யாவும்
வேடிக்கை மனிதர்தம்
வாடிக்கை வாழ்க்கையன்றோ?

பிறப்பும் இறப்பும்
வருதேதி நேரம் சொல்லியா நிகழ்கிறது?
வானமும் மேகமும்
மழையை தனக்கெனவா ஒளிக்கிறது?

மோனமும் கடிதவமும்
அது தருவரமும் முனைந்த முனிக்கென்றா நிலைக்கிறது?

கானக்குயிலதுவும்
ஆடல்மயிலதுவும்
தமக்கா இசை நடம் புரிகிறது?

ஊருக்காய் விளைக்கின்ற
விவசாயி
பாருக்காய் பாட்டிசைக்கும் யுகக்கவிஞன்
நாருக்குள் தொடுத்தெடுத்த
நல்கமழ் பூமாலைபோல
அவையாவும்
நாட்டுக்காய் பாடுபடும்
நல்மனத்து உயிர்களன்றோ?

எல்லையில் நிற்கும்
வீரப்படை காட்டி நிற்கும்
இமைக்கா நொடிப் பதுகாப்பு
நம் உறக்க உறுதியன்றோ?

அறத்தில் அலங்கரித்து
வாக்கினில் அன்பு வைத்து
நெறிபிறழா நேசம் பகிர்ந்தளித்து
பின்னடைவுத் தடைகள் தாண்டி
பெரும் பாய்ச்சல் முனைப்பென்றெடுத்து
ஒரு நேச தேசத்தை நிலைநிறுத்தி
இங்கெலாம்
நிரந்தரமாய் நிறுவி வைக்கும்வரை
பிற வேடிக்கை மனிதர்போலே
நான் வீழ்ந்துவிடாதிருக்க
சக்தி கொடு மகா காளி.!
—- அன்புடன் ஆர்க்கே.

One Comment on “ஆர்க்கே/வேடிக்கை மனிதரைப்போல்…!”

Comments are closed.