ஜான் டன்/மொழிபெயர்ப்பு  –   தங்கேஸ்

John Donne (/dʌn/ DUN; 22 January 1572[1] – 31 March 1631)[2] was an English poet and cleric in the Church of England. 

ஜான் டன் 22 ஜனவரி 1572- 31- மார்ச் 1631  ஒரு ஆங்கிலக்கவி சிறந்த மொழிபெயர்ப்பாளர்  அரசியல்வாதி ( எம்பியாக இருந்தவர்) ஒரு மதபோதகர் (பாதிரியார்)அனைத்திற்கும் மேலாக metaphysical poets. ( பௌதீகம் கடந்த  கவிஞர்கள் ) என்ற கவிஞர்கள் குழுவின் முன்னோடி. அவருடைய கவிதைகளில் உணர்வுகளும் காட்சிப்படிமங்களும் முற்றிலும் வேறு பரிமாணங்கள் எடுக்கும். ஆங்கிலத்தில் அத்தனை கவிதை வடிவங்களையும் ( சானட்ஸ் இரங்கற்பா  மதப்பாடல்கள்  ) எழுதி முயற்சித்துப்பார்த்தவர். ஏறத்தாழ ஷேக்ஸ்பியருக்கு எட்டு வயதே இளையவர். பதினேழாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஆளுமை.

ஆனால் வாழும் காலத்தில் பரவலாகக்கூட அறியப்படாதவர். டாக்டர் சாமுவேல் ஜான்சன் இவரை கவிதைகளை கெடுத்ததில் தலையாயவர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

‘’ முரண்பட்ட கருத்துக்களை வலுக்கட்டாயமாக கவிதைகளில் ஒன்றிணைத்தவர்கள் இந்த மெட்டாபிசிகல் கவிஞர்கள் ‘’

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் டிஎஸ் எலியட் தான் இவரின் மேதமையை அடையாளம் கண்டு இவரை வெளிஉலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர். பன்னிரெண்டு குழந்தைகளுக்கு தந்தையான டன் காதல் திருமணம் புரிந்தவர். கடைசிகாலம் வரையிலும் வறுமையிலேயே வாழ்ந்தவர். கடைசி காலங்களில் சிறந்த மதபோதகராக பல்லாயிரக்கணக்கான மக்களின் மத்தியில் மிகப்பிரபலமாக விளங்கியவர். சிறந்த அரசியல்வாதியாக வரமுடியவில்லை. ஆசைப்பட்டபடி நீதிபதியாக வரமுடியவில்லை. ஆனால் பிரசங்க கலை கைவந்தது. கடைசி காலங்களில்  இறைவனைப்பற்றி அருமையான பலகவிதைகள் செய்தவர்  .58 ஆண்டுகளே வாழ்ந்த ஜான் டன் ஆங்கிலக் கவிதைகள் நிலைத்திருக்கும் வரை தானும் நிலைத்திருப்பார்.

1

கவிதைச்சூழல்

இரவு முடிகிறது புதிய விடியல் பிறக்கிறது. இரவு முழுவதும் இணைந்திருந்த காதலியின் முகம் பார்த்த கணம் கவிஞரின் இதயக்கதவுகள் படீரெனத்திறக்கின்றன. உள்ளே நுழைந்தவருக்கு ஆன்மாவின் தரிசனம் கிட்டுகிறது. காதலர்கள் இருவரும் இதற்கு முன்பு இச்சைகளால் நிரப்பப்பட்ட காகிதம் தன்னிச்சையாக காற்றில் பறந்து திரிவது போல காற்றில் பறந்து திரிந்தவர்கள். ஒருவரை ஒருவர் அன்பாக நேசிக்க ஆரம்பித்த விநாடியிலேயே அவர்களின் மாசடைந்த உலகம் மாற்றமடைகிறது .அன்பென்னும் சாவி ஆன்மாவின் புதுஉலகை திறக்கிறது. கவிஞர் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டு காதலை கொண்டாடுகிறார்.

இனி அவரின் கவிதை

The Good-Morrow   

காலை வணக்கம் காதலி

By John Donne 

ஜான் டன்

மெய்யாகவே 

நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகிறேன் அன்பே

நிஐமாகவே நேசிப்பதற்கும் முன்பு

நாம் எவ்வாறு இருந்தோம்?

தாய்ப்பாலை மறந்துவிட்டு 

விசக்காம்புகளை சப்பித்திரியும் 

இரு மழலைகள் போல அல்லவா?

திரும்ப முடியாத இருட்குகையின் ஆழத்தில்

மீளாத்துயிலின் அந்தகாரத்தில்

குறட்டைஒலிகளுக்குள் புதைந்து போயிருந்த

பாவப்பட்ட சீவன்கள் போல அல்லவா?

ஆம் அப்படித்தான்

கடந்த காலங்களில் நான் கொண்ட 

எல்லா இன்பங்களும்

துயிலில்  கண்ட கனவுகள் தானோ

எனில் 

அத்தனை கனவுகளிலும் நான் கண்டதெல்லாம்

உன் சாயல்கள் அன்றி வேறில்லையே ?

2

விடிந்துவிட்டது

விழித்துக்கொண்டன நம் ஆன்மாக்கள்

ஒன்றை ஒன்று அன்பால் ஈர்க்கும் 

அவைகளுக்கு இது இனிய காலையே 

நம் கண்களின் பாவையிலெல்லாம்

அன்பு  தளு தளும்புகின்றது

காணும் காட்சிகளிளெல்லாம் 

பேரன்பின் பிம்பங்களே

நிரம்பி வழிகின்றன

காதலில் நிறைந்திருக்கும் கணம்

இந்த சின்னஞ் சிறிய அறையே

நமக்கு எல்லையற்ற பிரபஞ்சமாக 

விரிந்து கொண்டே செல்கிறது

புதிய உலகை கண்டுபிடிக்க புறப்பட்டவர்கள் 

கடற் பயணம் போகட்டும்

அவர்களை  அடுத்தவர்கள் 

தொடரட்டும்

புவி வரைபடங்களிலெல்லாம்

புதிய புதிய உலகங்கள் தோன்றட்டும்

ஆனால் நம்மிடமிருப்பது ஒரே உலகம் மட்டுமே

அதாவது உன்னிடம் ஒன்று

என்னிடம் ஒன்று

ஆனால் இணையும் போது

அவை  இரண்டும் ஒன்றே

3

என் முகம் உன் கண்களிலும் 

உன் முகம் என் கண்களிலும்

மிதக்கின்றன

கள்ளமற்ற இதயங்கள் இரண்டும் 

கபடற்ற  கண்களில் 

ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன

வடமுனையை மறுதலித்துவிட்டு

மேற்கை மட்டும்இணைத்துக்கொண்டால்

இணையான இரு அரைக்கோளங்கள் தோன்றுமா?

சமநிலை தானே வாழும் கலை

சமநிலையற்றவை யாவும்  இணைந்தால்

இங்கே  சத்தியமாக சாகின்றன

அன்பே

நம் இருவர் நேசமும் சமமானதால்

இருவர் நேசிப்பும் சமமானதால்

நமக்கு சாவென்பதே ஏது 

அல்லது 

நம்மை பிரிப்பதென்பது ஏது ?

 மூலம்       –    ஜான் டன்

 மொழிபெயர்ப்பு  –   தங்கேஸ்