ஒரு கணம் சனனம் – குகன்

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் -57

முன் குறிப்பு :

இதுவரை ஐம்பது கவிதைகளுக்கு மேலே என்னோட கவிதைகளே போட்டாச்சு.அமேசான் இல் ரெண்டு மின்புத்தகங்கள் போடுற அளவு சேர்ந்தாச்சு . இன்னைக்கி அழகியசிங்கர் ஆடியோவில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எனக்குப் பிடித்த மற்ற கவிஞர்கள் கவிதைகளும் சொல்லலாம்னு தோணுச்சு .

இது நமது குழும கவிஞர் வலம்புரி லேனா அவர்களின் மதுமலர் இலக்கியச் சிற்றிதழ் ஆண்டு மலர் 2023 இதழில் வெளிவந்துள்ள கவிஞர் குகன் அவர்களின் கவிதை

ஒரு கவிதை மனம் எதைத் தேடுகிறது
எந்தத் தருணத்தில் கவிதைகள் ஊடுருவத் தொடங்குகிறது
நடுநிசித் தனிமையில், பெரும் மனிதத் திரள் மத்தியில்
சன்னலோர தேநீரின் மெய்சிலிர்ப்பில்
சில இரகசிய சொற்களில்
கதகதப்பான நினைவுகளில்
சிலரின் வெறுமைப் பார்வையில்
தூங்கவிடாத பொறாமையில்
அணைக்க முயன்று கடந்த கோபத்தில்
எல்லாவற்றையும் நகைத்துக் கடக்கும் நிதானத்தில்
பாதுகாப்பான கம்பளி சூட்டில்
பணமில்லா எரிச்சலில்
மதிய நேர நீண்ட தெருக்களில்
ஒரு கேமராவின் ஷட்டர் சத்தத்தில்
அணைந்த விளக்கின் மென்கருகல் வாசனையில்
சோகத்தில், மோகத்தில், ஆறுதலில்
ஆற்றாமையில்
எல்லா நிலைகளிலும்
எல்லாத் தருணங்களிலும்
கசிந்து கொண்டே இருக்கிறது கவிதை
கடந்து கொண்டே இருக்கிறது காலம்

———————குகன்

பின் குறிப்பு

நமது சொல் புதிது குழுவில் இந்த இணைய காலக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதை வாசிக்க வாசிக்க எனது கவிதைத் திறன் கூடுவதை என்னால் உணர முடிகிறது . பதினைந்து வயதில் இருந்தே கவிதை எழுத ஆரம்பித்து, கவிதையில் பொன்விழா கண்டு , எழுபது கவிதை மின்புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டு, பல பிரபல பத்திரிகைகளில் வெளிவந்திருந்தாலும், நமது அழகியசிங்கரின் சொல் புதிது குழும இந்த இணைய காலக் கவியரங்கில் கலந்து கொண்டு கவிதை வாசிக்க முற்படும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லவேண்டும், வித்தியாசமாகவாவும் இருக்க வேண்டும் என்ற சவாலான எண்ணம் என் கவிதைத் திறனைக் கூட்டுவதை உணர்கிறேன்.

பழைய கவிஞர்கள், புதிய கவிஞர்கள் அனைவருக்குமே இந்த உணர்வு பொதுவானது என்றே நினைக்கிறேன். அனைவரும் தினசரி கலந்து கொண்டு கவிதை வாசித்து பயன் பெறலாம். அழகியசிங்கருக்கு நன்றி – நாகேந்திர பாரதி