
இன்று மாலை வாசித்த கவிதை.
ஓரிடத்தில் தேடவில்லை,
தொலைத்த
இடமும் ஒன்றல்ல,
பூமிப்பந்தில் உன்
பொறுமையை,
பூக்களிடம் உன் புன்னகையை,
பாதம், கை, மெல்லிதழ்
சிவப்பைத்
திருடிச் சென்ற செக்கர்
வானிடம்
மன்றாடுகிறேன்.
கண்கள் வீசும் அறிவின்
ஒளி
மின்னலிடம்; கேட்பேன்
என்பதால்
அஃது வருவதும் குறைந்து
போனது.
அழகு முகம் அபகரித்த
நிலவுக்கு
தண்டனை
கவிஞர் மனச்சிறை.
குரலோசை கவர்ந்த
குயில்
வருத்தம் தெரிவிக்கிறது.
உன் மூச்சு கலந்தெடுத்த
காற்று
அன்பை அளந்த முகிலையும்
கலைத்து
ஓடும்.
என்னுள் உயிர்த்து, உதிரத்தில்
உருவாகி,
மண்ணில் மலர்ந்த மரகதமே !
யுகம்பல கடந்தாலும்
பயணம்
முடிந்தாலும், நினைவாய்
ஆனாலும்
தொடரும் தேடல்
முடிவுறாது
தேடிக் கொண்டே இருப்பேன்.
உன்னை நான்.
