ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம்
நாள் 19.12.23

வளர்க்கும் கிளிக்கொரு
துணையாகப் பொம்மைக்
கிளியொன்றை வாங்கி
வாவென்றாள் மகள்.

கிளியின் நிறத்தைச் சற்றேனும்
ஒட்டியிருக்கவேண்டுமென்று
கடைகடையாய் ஏறியிறங்கிப்
பார்த்த கிளியெதிலுமில்லை
அதற்கான நிறம்..

பரவாயில்லை உருவத்தில்
இருந்தால் போது மென்றாள்..

போதும் தான் போலிருக்கிறது
பொம்மைக் கிளியிடம்
உறவாடிக் களிக்கிறது
உயிர்க்கிளி.