நாகேந்திர பாரதி/இயக்குனர் ஜெயபாரதி அவர்களின் ‘ அம்மாவுக்கு ஒரு புடவை

இன்றைய கதை புதிது நிகழ்வில் பேசிய சிறுகதை மதிப்புரை
நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே .
எழுத்தாளர் , இயக்குனர் ஜெயபாரதி அவர்களின் ‘ அம்மாவுக்கு ஒரு புடவை ‘ என்ற சிறுகதையைப் பற்றிய எனது கருத்துரை .

பொருட்காட்சி மைதானத்தில் நுழைந்து சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் மனவோட்டம் , பாசத்தோடும் , ஆசையோடும், தன்னிரக்கத்தோடும் அலைவதை எழுத்தில் வடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். ஒரு நியூ வேவ் படம் பார்ப்பது போன்ற உணர்வு .

சுருக்கமாக அவன் எண்ணங்களைப் பற்றி .

முதலில் அந்தப் பொருட்காட்சியில் உலவும் மனிதர்களின் முகங்கள், எண்ணங்கள் பற்றிய இவனது கற்பனை. நல்லதும் கெட்டதுமாக . திடீர் என்று தானும் அவர்களைப் போல் ஒருவன்தான் என்ற வெளிச்சம் ஏற்பட்டு அதில் இருந்து விடுபட மருந்து மாத்திரை சாப்பிட ஆசைப்பட்டு திரும்பவும் அந்த மருந்தின் வேகம் குறைந்ததும் மாறித்தான் போய் விடுவோம் என்ற விரக்தி நிலைக்குத் திரும்புவது .

அடுத்து ஒரு அரசியல்வாதி, அவருக்குப் பாதுகாப்பாய் போலீஸ், தொடரும் தொண்டர் அல்லது தோழர் . இவர்களை பற்றிய கிண்டல் . இந்த அரசியல்வாதிகள் பேச்சில் மயங்கி , ஒரு இன்டெர்வியுவில் ‘ என் அப்பா, அம்மா பிராமணர்கள், நான் மனிதன்’ என்று தன்னை அறிமுகம் செய்து வேலை கிடைக்காத விடலைப் பருவ உணர்ச்சி வேக ஞாபகம்.

அடுத்தது பானி பூரி விற்கும் இடம். அந்த இடத்தின் வருணனை. அப்படியே கண் முன் கொண்டு வந்து விடுகிறார் கடையை. படித்து ரசியுங்கள். அதே நேரம், அவன் , பானி பூரியின் நடுவே கட்டை விரலால் ஓட்டை போடும் போது , தன் அம்மா, மொட்டை மாடியில், தனக்கும் , தனது சகோதர சகோதரிகளுக்கும் புளியோதரை, சாம்பார் சாதம் , தயிர் சாதம் கொடுக்கும் காட்சியில் தயிர் சாதத்தின் நடுவில் அம்மா கட்டை விரலில் ஓட்டை போட்டு நடுவே குழம்பு ஊற்றும் காட்சி. வட நாட்டு, தென் நாட்டு சாப்பாட்டு முறையில் உள்ள ஒற்றுமையை உணரும் இடம் .

அப்போது தான் தன் சேலையைக் கிழித்து தங்கைகளுக்கு தாவணி பாவாடை தைக்கச் சொன்ன அம்மாவின் பேச்சு ஞாபகம் வந்து அம்மாவுக்குப் புடைவை வாங்க வேண்டும் என்ற நினைப்பு வருகிறது நாயகனுக்கு ..

அடுத்து பொருட்காட்சிக்குள் உள்ள புடைவைக் கடைக்குள் நுழைய , சேலை சம்பந்தப் பட்ட சில கிளுகிளுப்பான உணர்வுகளை அந்தக் கடையில் உள்ள சேலை கட்டியுள்ள பொம்மையும் , அங்குள்ள பெண்களும் கிளப்பி விட சேலை வாங்காமல் , வெளியே வந்து ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும் ஒரு இடத்திற்குப் போகிறான். அங்கே நடக்கின்ற ஆபாச நடனங்கள் பற்றிய வருணனையும் அங்கு இருப்பவர்களின் எண்ணங்கள் பற்றிய வருணனையும் தொடர்கிறது .

இதற்கு நடுவில் திரும்பவும் அவனுக்கு அம்மாவுக்கு புடவை வாங்கும் ஞாபகம் வருகிறது . இவன் அடிக்கடி போகும் ஒரு விலைமாது வித்யா பற்றிய விபரங்களைத் தொடர்ந்து அவளிடம் போய் ‘அம்மாவுக்கு என்ன மாதிரி சேலை வாங்கலாம் என்று கேட்கலாமா’ என்று தோன்றுகிறது . ஆனால் அவள் தனக்கு சேலை எடுத்துக் கொடுக்கச் சொல்வாள் என்று தோன்றி அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு தானே எடுக்க முடிவு செய்து இன்னொரு சேலைக் கடைக்குள் நுழைந்து அங்கு சேலை எடுக்கும் சிலரிடம், ‘ஒரு சேலை எடுக்க உதவ முடியுமா ‘ என்று கேட்க , அவர்கள் ‘ ஒய்புக்கா என்று கேட்க , இவன் எண்ணம் ‘ ஜானகி ‘ என்ற பெண்ணைப் பற்றி .

அவளைத் தனது மானசீக மனைவியாக நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறான். இருவருக்கும் ஆறு குழந்தைகளாம் . அவள் சிறு வயதில் இவனால் விரும்பப் பட்டு இவனை நிராகரித்தவள். இவனோ விடாமல் கற்பனையில் அவளை மனைவியாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறான். இப்போது அம்மா பேசிய பேச்சு ஞாபகம் வருகிறது. ‘ வேலைக்குப் போய் மூணு வருஷம் ஆகிறது . ஆசையா ஒரு நூல் புடைவை வாங்கிக் கொடுத்தானா பாரு , அவ்வளவுதான் , புள்ளைங்களுக்கு அம்மா மேல ‘ உடனே அந்த ஜானகி பற்றிய அந்த எண்ணங்களில் இருந்து விடுபட்டு , அம்மாவுக்கு ஒரு புடைவை எடுத்து விடுகிறான்.

இப்போது வித்யா அந்தக் கடைக்கு வேறு ஒரு வாடிக்கையாளனோடு வருகிறாள். இவனைப் பாத்ததும் சுவாதீனமாக ‘ இந்தப் புடவை எனக்கா, அப்புறம் வீட்டுக்கு வந்து கொடு ‘ என்று சொல்ல இவன் ‘ அம்மாவுக்கு ‘ என்றதும் , எரிச்சல் பட்டு . ‘ புள்ளையோடு மனசைப் போலவே இருக்கு இந்தப் புடைவை, நாளைக்கு பொண்டாட்டிக்கு இந்த மாதிரி புடவை வாங்கிட்டுப் போங்க, தலை மயிரைப் பிடிச்சு குலுக்குவா ‘ என்று கிண்டல் செய்து விட்டுப் போகிறாள்.

இவன் பொருட் காட்சியில் இங்கும் அங்குமாக அலைகிறான். இப்போது நாயகன் பற்றிய வருணனை

‘ சேவ் செய்து கொள்ளாத முகம். வற்றிப் போன உதடுகள் , நிலை கொள்ளாத கண்கள் ‘ . எல்லோரும் இவனையே பார்ப்பது போன்ற பிரமை .

திடீர் என்று ஜானகி தன் மனைவி ஆகி இங்கு தன்னோடு வந்திருக்கக்

கூடாதா என்ற ஒரு ஏக்கம். அங்கிருக்கும் போலீஸ் பூத்தில் இருந்து ஒரு அறிவிப்பு. இவன் மனைவி ஜானகி அங்கு இருப்பதாகவும் இவனை அழைப்பதாகவும் ஒரு பிரமை உணர்வு. இப்படி மாறி மாறி அம்மாவுக்கு வாங்கிய சேலையைப் பற்றியும் இவனது மன ஏக்கங்களையும் காட்டி அவனது விரக்தி நிலையைக் காட்டுகிறார் ஆசிரியர்.

பொருட் காட்சி விட்டு வெளியே வந்து விட்டான்.

அங்கே ஒரு இடத்தில் ஒரு கிழப் பிணம். அனாதைப் பிணம் அதை வைத்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண் . அதன் அருகே போய் ‘போயிட்டியே , என் கண்ணு, என் ராசாத்தி , ஒரு தடவை சிரியேன் . கூட வா , உன்னை இட்டுக்கிட்டுப் போயி நீ கேக்கிற கலர்லே , நம்பர்லே, ஸ்பெஷல் தறியில் செஞ்ச புடவை வாங்கித் தரேன். முந்தி மாதிரி ‘ ஐ டோன்ட் லைக் தீஸ் திங்க்ஸ் ‘ இன்னு சொல்லிறாதே ‘ என்று தன் கற்பனை மனைவி ஜானகி இறந்து விட்டதாக நினைத்து புலம்பி விட்டு , அந்தப் புடவையை அந்தப் பிணத்தின் மேல் போட்டு விட்டுப் போகிறான் ‘ என்று முடிகிறது கதை.

வித்தியாசமான கதை. நான் முதலில் சொன்னது போல் ஒரு நியூ வேவ் படம் பார்ப்பது போன்ற உணர்வு . அம்மாவுக்குப் புடவை வாங்க நினைத்து , வாங்கி விட்டாலும் கூட அவனது அலை பாயும் நினைப்பு விலைமாது , கற்பனை மனைவி , ரெகார்ட் டான்ஸ் என்று அவனது உடல் உணர்வுகளில் தடுமாறி கடைசியில் அவற்றில் இருந்து விடுபட முடியாமல், இந்த உணர்வுகள் கலந்த இந்த சேலையை அந்தப் பிணத்திற்கே போட்டு விட்டுப் போவதாக முடிக்கிறார் ஆசிரியர்.

எழுத்தாளர் இயக்குனர் அல்லவா. காமிராப் பார்வை பார்த்து எழுதி இருக்கிறார் கதையை. கதை முழுக்க, அவனது எண்ணங்கள் . அந்த எண்ணங்களின் வருணனைகள் படங்களாக மாறி நம் கண் முன் விரியும் போது ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான எண்ணங்கள் , விம்மலும் விகாரமும் ஆக மாறி நம் மனத்தைத் தாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி .

——————————-