அப்பா/ஜி.செல்வா

சாதாரண காய்ச்சல், உடல் சோர்வு , உணவு எடுத்து கொள்வதில் விருப்பமின்மைக்காகக் கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள்,
சட்டென உடல் எடை கணிசமாக குறைய, அதற்கான பரிசோதனை, இறுதியில் டிசம்பர் 12 கிட்டத்தட்ட நான்காவது கட்டத்தில் கேன்சர் நோய் என உறுதியானது.

மூன்று மாதங்களுக்கு முன்பு சிகிச்சை கொடுக்கும் போது குறைந்தது இன்னும் பத்து வருடங்களாவது உயிர் வாழ வைத்து விட வேண்டும் என மனசு உறுதி கொண்டது. ‌

டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இன்னும் பத்து மாதங்களாவது உடற் தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம் என உறுதியான மனநிலை..

ஆனால்,
பத்து நாட்கள் கூடக் காப்பாற்ற இயலாத நிலை – நோயின் தீவிரத்தில் கண்ணெதிரில் அப்பாவின் உயிர் நழுவிச் சென்று விட்டது.

நினைத்த விசயத்தை உறுதியாக முடிக்க முடியும் என்ற எண்ணத்தையே அப்பாவின் மரணம் நிலைகுலைய வைத்து விட்டது.

The Hindu ஆங்கிலம் நாளிதழ் நினைவு தெரிந்த நாளிலிருந்து அறிமுகம். காரணம் அப்பா தினசரி விடியற்காலை The Hindu நாளிதழ் வீடுகளுக்கு விநியோகம் செய்தார். ட்ரெடில் மிஷின் மூலம் பிரின்டிங் செய்வதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.
எல்லா விதமான உடல் உழைப்பு வேலைகளிலும் ஈடுபட்டு, குறைந்த ஊதியம் பெற்று வீட்டில் புலம்புவதைக் கேட்டே வளர்ந்தேன்.

பன்னிரண்டாம் வகுப்பு வரை காலையில் எழுந்தவுடன் அப்பாவின் சோற்றுப் பையில் உள்ள டிபன் பாக்ஸில் எனக்காக வாங்கி வந்துள்ள பிஸ்கட், கேக் என ஏதாவது ஒன்றை சாப்பிட்டு விட்டுத் தான் அன்றைய நாள் தொடங்கி இருக்கிறது.

பிறந்த நாளின் முந்தைய நள்ளிரவில் புதிய துணியை வாங்கி வருவார். சொல்லி வைத்தது போல அந்த உடை எனது உடலுக்குச் சிறியதாக இருக்கும். வீட்டில் சண்டை நடக்கும். அடுத்த ஆண்டில் இன்னும் பெரிய சைசில் உடை இருக்கும், நான் வளர்ந்து நிற்பேன். வயசைச் சொல்லி ரெடிமேட் கடையில் துணி வாங்கியது தான் காரணம்.

எத்தனை செருப்புகள் வாங்கினாலும், அப்பா அவருக்கு வாங்கி வைத்திருந்த ரப்பர் செருப்பு தான் எனது கால்களுக்குப் பிடித்திருந்தது.

எல்லோரிடமும் அன்னியோன்யமாகப் பழகும் – உரிமையோடு உரையாடும் பண்பும், வெள்ளந்தி மனநிலையும் வாய்க்கப் பெற்றவர்.

தினசரி தினத்தந்தி வாசிப்பு, காது சரியாக கேட்காத நிலையிலும் எம்ஜிஆர் படங்களை மட்டும் ரசித்துப் பார்ப்பது; ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகனாக இருந்ததன் காரணமோ என்னவோ தெரியவில்லை உறுதியான அதிமுக அரசியல் நிலைப்பாட்டை வரித்து கொண்டார்.

எல்லா விதமான வறுமையும் பிள்ளையின் கல்வி மூலம் தீர்ந்துவிடும் என எதிர்பார்த்து இருந்தார்.

பள்ளி, கல்லூரிக் காலத்தில் (எனது) மாணவர் சங்கச் செயல்பாடுகள், கைது, போலீஸ் தடியடி, வெவ்வேறு கல்லூரிக்கு மாற்றம், ஒரு கட்டத்தில் முழுமையாக கட்சிப் பணி, காதல் திருமணம் என எல்லா நேரத்திலும் மவுனமாக உடன் நின்றவர்.

தனது உழைப்பில் வாழ வேண்டும் என உறுதியாக இருந்தவர். அதற்கேற்ப செக்யூரிட்டி பணி, விளம்பர நோட்டிஸ் கொடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார்.

கொரோனா தொற்றைக் காரணமாக வைத்து பிடிவாதமாக வீட்டிலேயே இருக்கும் சூழலை என்னுடைய இணையர் பாரதி உருவாக்க, ஏதாவது வேலை செய்து தீர வேண்டும் என அப்பா உறுதியாக இருக்க, வாத்து, முயல், கோழி என வீட்டில் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா தொற்றுக் காலம் முடிய, கோழிகள் மட்டுமே அவர் கட்டுப்பாட்டில்.
காலையில் காய்கறிக் கடைக்குச் சென்று அங்கே வெட்டித் தள்ளப்படும் காய்கறிகளை வாங்கி வந்து கோழிகளுக்கு ஊட்டாத குறையாகக் கொடுப்பார். சாப்பிடாத கோழிகளோடு சண்டை பிடிப்பார். கோழிகளும் அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு செயல்படுவதை வேடிக்கை பார்த்தது இன்பகரமானது.

கலைந்து கிடக்கும் வீட்டைச் சுத்தப்படுத்துவது, புத்தகங்களை அவ்வளவு நேர்த்தியாக அடுக்கி வைப்பது, அயர்ன் செய்வது போல் கையால் துணிகளை மடித்துக் கொடுப்பது, குறித்த கால இடைவெளியில் ஷேவிங் செய்து கொள்வது, எவ்வளவு அழுக்கு படும் வேலையில் ஈடுபட்டாலும் வேலை முடித்தவுடன் குளித்து சுத்தமாக இருப்பது, குளித்து முடித்தவுடன் கை கால் முகத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது இவை எல்லாம் அப்பாவின் வாடிக்கை.

வாரி அணைத்து கொஞ்சிக் கொண்டிருக்க வில்லை. ஆனால் எப்போதும் விட்டு விலகாத மனநிலை.

அம்மாவின் விருப்பத்துடன், தம்பியின் சம்மதத்தோடு அவரது
உடல் மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்கும்,
கண்கள் தேவைப்படும் நபர்களுக்கும் ஒப்படைக்கப்பட்டன.

நினைவுகள்
எப்போதும் எம்மோடு.

துயரில் உடன் நின்ற,
ஆறுதல் தெரிவித்த தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

(மார்க்சிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஜி.செல்வா முகநூல் பதிவிலிருந்து)

4 Comments on “அப்பா/ஜி.செல்வா”

  1. பத்து வயதில் அப்பாவை இழந்த எனக்கு தோழர் செல்வாவின் அப்பா பற்றிய நினைவுகளைப் படித்ததும் இந்த வயதிலும் (75) அப்பாவின் நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

    1. அப்பாவின் அன்பு அலாதியானது அளவிடற்க்கரியது அவர் இருக்கும் போது அவருடன் இன்னும் நெருக்கமாய் இருந்திருக்லாமே என்று இப்போது எப்போதும் தோன்றுகிறது இறுக்கமாய் மனம் கண்ணீர் கசிகிறது அப்பா அப்பா அப்பா

  2. 1991இல், நான் என் அப்பாவை இழந்தேன்.
    அவர் வயது மூப்பினால் இறந்தார் என்றாலும் இன்றும் என் அப்பாவை நினைத்தால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

  3. எல்லா அப்பாக்களும், தங்கள் கடமையை செவ்வனே செய்வதே குடும்பத்தின் மீதான பாசத்தின் வெளிப்பாடாக காட்டினார்கள். உங்கள் அப்பாவை போல!!

Comments are closed.