மரப்பாச்சி பொம்மை

அராதா


இரண்டு நாட்களாக நடைப்பிணமாக எதையோ பறிகொடுத்தது போல காலத்தை கழித்துக் கொண்டிருந்தான், ராம். 


சிவன் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் யதேச்சையாக அவனுடைய நண்பன் குமார் முகசாடையால் கண்டு கொண்டு ராமை குசலம் விசாரித்தான். அப்படியே “என் வீடு பக்கத்துலதான் இருக்கு, எல்லோரையும் பார்த்துட்டு போகலாம், வா” என்று அழைத்தான்.

முதலில் வேண்டாம் என்று உதட்டளவில் அவன் சொன்னாலும், ஒரு மாறுதலுக்காக போய் வா என்று உள்ளம் சொல்லவே “சரி வரேன்” என்றான்.


வீட்டின் பொது அறையில், ஒரு பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்து ராம், “இவ உன்னோட குழந்தையா” என்று கேட்கவே, “என் பொண்ணு திவ்யா தாண்டா” என்றான் குமார். குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரியில இருந்தப்போ பார்த்தது என்று மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டான். 


குமார் ராமிடம், “நான் உனக்கு குடிக்க தண்ணியும் காபியும் போட்டுகிட்டு வரேன்” என்றான்.


மரப்பாச்சி பொம்மைகளோடு விளையாடி கொண்டிருந்த திவ்யாவிடம், “உன்னோட விளையாட்டுல, யார்யாரெல்லாம் இருக்காங்க?” என்று சிரித்தபடி கேட்டான், ராம்.


திவ்யா விளையாடிக் கொண்டே, “நான், அப்பா அம்மா, தாத்தா, பாட்டி என்று சொல்ல, அவனுக்கு ஏதோ உள்ளுக்குள்ளே தூக்கி வாரி போட்டது. உடனே வீட்டை விட்டு கிளம்பி  விறுவிறுவென்று நடந்து வீதிக்கு வந்து, வழியில் வந்த ஒரு ஆட்டோவை கை காட்டி நிறுத்தினான்.


“எங்க சார் போகனும்” என்று ஆட்டோக்காரன் கேட்க, உடனே ராம் “பூந்தமல்லியில இருக்கிற அன்பு முதியோர் இல்லம், போப்பா” என்றான்.