மீண்டும் ஒரு கோப்பை தேநீர்

அதங்கோடு அனிஷ்குமார்

 

எனக்குத் தெரியும்

நீங்கள் 

என்னோடு கைகுலுக்குவீர்கள் 

மனதுள் எழும்

ஆயிரம் கேள்விகளை 

மறைத்துக் கொண்டு 

ஒரு 

புன்னகையை

செய்து வைத்துவிட்டுப் 

போவீர்கள் 

என் 

கண்களுக்கு நேரே பேச

துணிவற்று துளாவும் கண்களில்

வந்து வந்து போகும் 

நீங்கள் 

எனக்கிழைத்த துரோகங்கள்  

பெருவாதைகளை 

உள்ளடக்கிக் கொண்டு 

நீங்கள் 

நீட்டும் 

ஒரு கோப்பை தேநீரில் 

ஒளிந்திருக்கும் 

ஓராயிரம் 

பாம்புக் குட்டிகளை ரசித்தபடியே 

உறிஞ்சும்படி

நிர்பந்திக்கப்படுகிறேன் 

மீண்டும் ஒரு கைகுலுக்கல் 

மீண்டும் ஒரு புன்னகை 

மீண்டுமொரு பார்வை

மீண்டும் ஒரு கோப்பை தேநீர்  

இருத்தலின் 

பக்கங்களை வாசித்தபடியே

வாழ்வதாய் 

கதைத்துத் திரிகிறேன்.