எஸ் . சண்முகம் கவிதை..

கூடாரத்திற்குள் எல்லோருடனும் அமர்ந்துள்ளேன்
ஒருபக்கம் சர்க்கஸ் கோமாளி
அடுத்த இருக்கை நெடுநேரமாக
அமர்வாரின்றி இருக்க

மிருகங்கள் மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக
பாய்ந்தோடுவதைக் கண்டு
கைதட்டலும் கரகோஷமும் எழும்போது
இடையில் சிலர் மட்டும்
எதிர்வினை செய்யாதிருப்பது போலுள்ளனர்

உயரத்திலிருந்து தொங்கும் கயிறுகளின் நடுவிலுள்ள கட்டைகளைப் பிடித்துக் கொண்டு
எதிரெதிர் திசையில் பறந்து திரும்புகின்றனர்
ஓரிருவர் கீழே விரித்திருக்கும் வலையில் விழுந்து
குட்டிக் கரணமடித்து எழுந்து
கையசைக்கின்றனர்

ராட்சத உலக உருண்டைக்குள்
வெவ்வேறு பாகைகளில் வேகமாக
இருசக்கர வாகனத்தை ஓட்டியவர்
அதற்கு சம்பந்தமில்லாதவரைப் போல
கரவொலியைக் கேளாதவர் போல் கடந்து போக

பார்வையாளர்களது குழந்தைகளின் விழிப்பரவசத்திற்கிடையில்
குள்ளர்களில் ஒருவர்
எனக்கருகிலிருந்த காலி இருக்கையில் அமர்ந்து கொண்டார்

கூண்டிற்குள்ளிருக்கும் வேங்கைகளின் உறுமல்
அதன் ஆட்டுவிப்போனின் சொடுக்கலில்
மேலும் அதிகரிக்க
மெல்ல அமரச் சென்றன
இருக்கைகளில் அமர்ந்துபின்
ஒவ்வொன்றாய் இருப்பிட கூண்டை நோக்கி நடக்கின்றன

இறுதியாக சர்க்கஸ் கலைஞர்களின் அணிவகுப்பில்
குள்ளர்களும் கோமாளிகளும் பார்வையாளர்களுக்கு கையசைத்த போது
நான் விசலடித்தேன்
சர்க்கஸ் பாவைகள் சுழற்றிய ரிப்பன்களின்
வண்ணங்கள் என்னுள் கிளர்கின்றன

அருகில் அமர்ந்திருந்த கோமாளியும் குள்ளனும்
இப்போது சர்க்கஸிற்குள் திரும்பவில்லை
என்னுடனே எழுந்து கூடாரத்தைவிட்டு வெளியே வந்தனர்

இதுவரை நான் அவர்களிடம் பேசவில்லை
வெளியே வந்த உணர்வைக் காட்டிலும்
உள்ளிருப்பதாகவே எண்ணினேன்

பேருந்து நிறுத்தத்தில் எனக்கான எண் பேருந்து வரும்வரையில்
இருக்கையில் அமர்ந்தேன் கோமாளியும் குள்ளனும்
உடனிருக்கின்றனர்

நான் சர்க்கஸ் கூடாரத்திற்குள் பார்த்தைப் போல்
அவர்கள் கூடாரமற்ற வெளியில்
எல்லோரையும் எல்லாவற்றையும்
பார்த்துவிட்டு
என்னிடம் கைக்குலுக்கினர்.


(எண்: 115)