இன்று மாலை வாசித்த கவிதை.
ஆசிரியத் தோழியர்
ஆறு பேர்
பின்னிரவு மூன்று மணிக்கு
மகிழுந்தில்
பயணம்
காமாட்சியின் தேனாட்சி
நகருக்கு.
ஊரின் எல்லை தாண்டவில்லை
மூன்று முறை
என்னவரின் அழைப்பு.
கதவில் சாய்ந்து தூங்காதே.
போகும்
வழியில் ஓர் அடையாளம்
நினைவில் கொள்.
இருக்கை சன்னலோரம்
வானிலே
வெண்ணிலா ஊர்வலம்.
நிலவும்
நானும் பேசிய கதை
ஒன்றல்ல.
நாற்பதாண்டு நீர்வாசம்
முடித்து
வந்திருக்கும் வரதரைக் காண
வரிசை
தொட்ட போது மணி ஆறு.
நினைத்ததும் , நடந்ததும்
ஒன்றல்ல,
அங்குலம்
அங்குலமாக நகர்ந்து
கிடந்த கோலம்
கண்ட போது மாலை ஆறு.
வாடி வதங்கி வெளியில்
வந்து
உணவுண்டு, வீடு சேர
நள்ளிரவு
கடந்து விட்டது.
வாசலில் நின்றவரிடம்
சொல்லிச்
சென்றனர் தோழியர்.
மழை தூறிக் கொண்டிருந்தது.
சூடான
தேனீர்க்கோப்பை தந்தவரிடம்
நீங்கள்
வந்திருக்கலாம் என்றேன்.
நல்ல வேளை
தப்பித்தேன், சரியான
ஏற்பாடு
செய்யவில்லை என்று
சலித்திருப்பாய்.
என்றவர், விடு எல்லாம்
ஓர்
அனுபவம்தான் என்றார்
மந்திரப்
புன்னகை மாறாமல்.

