போர்ஹெஸ்/ஒரு குருட்டு மனிதன்



தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி


———
நான் எப்போதெல்லாம் கண்ணாடியில் முகம் பார்க்கிறேனோ
அப்போதெல்லாம்
எந்த முகம் திருப்பிப் பார்க்கிறது என்று எனக்குத் தெரியாது
எந்த பழைய முகம் அதன் பிம்பத்தை
மௌனத்திலும் ஏற்கனவே களைப்படைந்த கோபத்திலும்
நாடுகிறது என எனக்குத் தெரியாது.
எனது பார்வையற்றதன்மையால் மெதுவாகி
எனது கையால் எனது முகத்தின் புறவடிவை உணர்கிறேன்.
ஒளிக்கற்றை ஒன்று என்னுள்ளாக செல்கிறது.
நான் உனது முடியை உணர்ந்தறிந்தேன்
சாம்பல் நிறத்திலிருக்கிறது, அதே நேரத்தில் பொன்னாகவும்.
நான் மீண்டும் சொல்கிறேன்
பொருட்களின் முக்கியத்துவமில்லாத வெளிப்புற தோலைத் தவிர
நான் எதையும் இழந்துவிடவில்லை.
இந்த விவேகமான சொற்கள் மில்டனிடமிருந்து வருகின்றன
அவை உன்னதமானவை,
ஆனால் நான் எழுத்துக்களையும் ரோஜாக்களையும் பற்றியும் சிந்திக்கிறேன்
கூடவே என்னால் என்னுடைய அம்சங்களைப்
பார்க்க இயலுமென்றால் நான் யாரென நான் அறிவேன்
இந்த அருமந்த மதியத்தில்.