
80 ஆவது இணையகாலக் கவியரங்கம்
ஆலமரம் போல்
படர்ந்து வளரத் தான் ஆசை!
என்னுடைய கிளைகளை
எல்லாத் திக்குகளிலும்
வானை நோக்கியும்
பூமியை வணங்கியும்
அனுப்பத் தான் மனதில் ஆசை!
சிறியதோ பெரியதோ
கிளைகள் வளர்கின்றன!
இலைகள் தழைக்கின்றன!
மலர்களின் மொட்டுக்கள்
இலைகளின் துளிர்கள்
கனிகள் விதைகள் என்று
எனது குடும்பமும்
என்னை மகிழ்விக்கிறது!
இலைகள் காற்றில் அசைந்தாடி
இனிமையைப் பரப்புகின்றன!
நிழல் தரும் குடையாய்
நிறைவு பெறுகிறேன்!
மண்ணிலிருந்து முளைக்கும்
கோடாரிக் கரங்கள்
மீண்டும் மீண்டும் எனைத் தாக்கக்
கண்ணீரும் குருதியும் சிந்துகிறேன்!
ஆனாலும் அச்சமில்லை!
வெட்ட வெட்டத் தழைத்திடுவேன்!
வீரியம் கொண்ட விதைகளாய்
மண்ணில் வீழ்ந்திடுவேன்!
வேரூன்றி நின்றிடுவேன்!
கரங்களே நீங்கள் ஓயும் வரை
வெட்டி எறிந்திடுங்கள்!
மீண்டும் முளைத்திடுவேன்!
விதைகளாக வீறுகொண்டு எழுந்திடுவேன்!
வீழப் போவதில்லை நான்!
தோல்வி எனக்கில்லை!
