புவனா சந்திரசேகரன்/செயற்கையில் இயற்கை

82 ஆவது இணைய காலக் கவியரங்கம்!

என் வீட்டின் எதிரே ஒரு
செயற்கைத் தோட்டம்!
நெகிழித் தொட்டிகள்
போன்ஸாய் மரல்ங்கள்
குள்ளர் சாம்ராஜ்யம்
செயற்கை தலைவிரித்து
ஆடுகிறது
இலையில்லா மரக்கிளைகள்
குச்சி குச்சியாக
சதையில்லா எலும்புக்கூடுகள்
நட்ட நடுவில் ஒரு மரம்
திடீரென ஒருநாள்
ஒரே ஒரு மலர் மொட்டு
துளிர்த்தது!
வியந்து நின்றேன்!
அருகில் சென்றேன்!
என்னை இங்கிருந்து
அகற்றி விடு என்று
என்னிடம் கெஞ்சியது!
மூச்சு முட்டுகிறது!
என்னைக் காப்பாற்று
என்று அழுதது!
மனதில் கருணை சுரந்தது!
திருட்டுத்தனமாக மலரைப்
பறித்து ஒளித்து
எடுத்துச் சென்றேன்!
மண் குவளையில் இட்டு
மறந்துவிட்டேன்!
அடுத்த நாள் மலர் மலர்ந்து
ஒன்று இரண்டாக
மாறி மணம் வீசின!
அடுத்த நாள் இன்னும் இரண்டு!
தினந்தோறும் இரண்டிரண்டாக
மலர்கள் எண்ணிக்கையில் கூட
வீடு முழுவதும் மலர்கள்!
என் வீடு இன்று
மலர்களின் மாளிகை!
நீங்களும் வரலாம்
மணத்தை முகர!
மலர்களின் அழகை இரசிக்க!
மலர்களைக் கசக்க மட்டும்
விடமாட்டேன்!