மீனாட்சி சுந்தரமூர்த்தி/அமைதி எங்கே?

இன்று மாலை வாசித்த கவிதை.

மாதம் மூன்று மழை
பெய்த
பூமியில் காலிக் குடங்களின்
மோதல்,

பசு மணியடித்து நீதி
கேட்க
மகனை தேர்க்காலிலிட்ட
நாட்டில்
நீதிதேவதை
கருப்புத் துணியில் கண்
மறைத்தது.

வஞ்சியரின் பெருமை பேசும்
மரபில்
மழலை கூட மாயமாகும்
அவலம்,

போர்க்களத்தில் வீரம் நாட்டிய
வேல் கம்பு
அரிவாள் வீதியெலாம்
சுற்றுவது,

நான்கைந்து வட்டங்களாய்
விரிந்திருந்த
உறவு, உனக்கு நான், எனக்கு
நீ என்றானது,

ஏழேழ் பிறவிக்கும் தொடரும்
எனும்
மணம் ,மாதங்களில்
வழக்காவது.

இயந்திர கதியில் இயங்கி
கைபேசியில்
குதூகலிப்பது.

உதிரத்தைப் பாலாக்கித்
தந்த
தாய்மை முதியோர் இல்லத்தில்
முடங்குவது.

இத்தனையும் ஆட்சி செய்யும்
வேளையில்
நமக்கு அமைதி எங்கே?.