போர்ஹெஸ்/கண்ணாடி


—-

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
———
குழந்தையாக இருந்தபோது நான் கண்ணாடி
இன்னொரு முகத்தைக் காட்டக்கூடுமோ என்று அஞ்சினேன்
அல்லது ஏதோ ஒரு பயங்கரத்தை கட்டாயமாக ஒளித்து
வைத்திருக்கக்கூடிய வெற்றிடமாயுள்ள
தனியொருவரைச் சுட்டாத, குருட்டு முகமூடி ஒன்றை
என்னைப் பார்க்க வைக்குமோ என சந்தேகதிற்கிடமில்லாமல்
நினைத்தேன்.
கண்ணாடியினுள் இருக்கும் மௌனமான காலத்தையும் நான் அஞ்சினேன். அது சாதாரண கால ஓட்டத்திலிருந்து,
மனித மணி நேரங்களிலிருந்து விலகி
அதனுடைய தெளிவற்ற கற்பனையான வெளியில்
புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உயிரிகள், நிறங்கள்,
அறியப்படாத வடிவங்கள் ஆகியவற்றை ஆழமாகப் பொதிந்து வைத்திருக்குமெனவும் நினைத்தேன்.
( நான் இதைப் பற்றி யாரிடமும் பேசியதில்லை. குழந்தைகள் கூச்ச சுபாவமுடையவர்கள்)
இப்போது நான் கண்ணாடி
எனது உண்மையான எனது ஆத்மாவின்
மறைக்கப்படாத முகத்தின் குணங்களை வெளிக்காட்டுமோ என அஞ்சுகிறேன்,
நிழல்களின் கன்றிப் போன காயங்கள் தாங்கிய
குற்ற உணர்வில் நீலமும் கறுப்புமாகிய
கடவுள் பார்க்கும் முகத்தை
ஒருவேளை மனிதர்களும் அதைப் பார்க்ககூடும்.