பெரு விஷ்ணுகுமார் /எழுதிய நபருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்…….

ஆனந்த விகடனில் பரோட்டா சூரியையும், கவிஞர். மனுஷ்யபுத்திரனையும் ஒன்றுசேர்த்து விகடனில் கவிதை(?) போல ஒன்று உருவாக்கப்பட்டதைக் கண்டேன். இதே விகடனில் சில நாட்களுக்கு முன்பாக நகுலனின் கவிதைகளையும் வடிவலுவின் வசனத்தைக் கொண்டு எழுதியிருந்தார்கள். எனது கணிப்பு சரியெனில் அடுத்தது இதில் வரவிருப்பவர் தேவதேவனோ அல்லது பிரமிளோ…..? ஏன் சிறுகதை ஆசிரியர்கள் கூட அடுத்தடுத்து இடம்பெறலாம்..

வரவர நகைச்சுவைக்கும் வன்முறைக்கும் வித்தியாசம் தெரியாமல் அதைப் பயன்படுத்துகிறோமோ என்றும் தோன்றாமலில்லை. சமூகத்திற்குத் தகாத ஒன்றை, ஒரு கலையின் அலட்சியப்போக்கினை அல்லது அதிகாரத்தின் தவறுகளைக் கேலி செய்வதென்பது ஜனநாயக சுதந்திரமாகும். அதில் அனைவருக்கும் உரிமையுண்டு. மேலும் தவறுகளைக் கேலி செய்வது அதைச் சம்பந்தப்பட்டவருக்கு சுட்டிக்காட்டுவதாக அர்த்தம் கொள்ளலாம். ஆனால் ஒன்றின் இயல்பை (அது கவிதையின் இயல்போ அல்லது மனிதரின் இயல்போ) வலிந்து கேலிக்குட்படுத்துவது ஒருவித வன்முறை என்றுதான் சொல்லவேண்டும். இதனால் ஆவதென்ன…? வேடிக்கைகளா…? நமது வேடிக்கைக்காக நம்மைச்சுற்றியுள்ள எதை வேண்டுமானாலும் பலி கொடுக்கத் தயங்கமாட்டோம் போல.

கவிதைகளிலும் கதைகளிலும் சில உத்திகள் காலத்திற்கேற்ப பலவீனமடைவது உண்மைதான். இதே நகுலனின் ராமச்சந்திரன் கவிதை இதே முகப்புத்தகத்தில் நகைச்சுவையாகப் பயன்படுத்தப்படுவதையும் கண்டிருக்கிறோம். ஆனால் நகுலனின் (அல்லது ஒரு கவிஞரின்) எல்லா கவிதைகளையும் அதன் இயல்பை நசித்து இப்படி பயன்படுத்துவது சரிதானா… அப்படிப் பார்த்தால் இவ்வுலகில் நமது நகைச்சுவைக்காக எதை வேண்டுமானாலும் கேலி செய்யலாம். எதை வேண்டுமானாலும் மலினப்படுத்தலாம்… அல்லவா…?

ஒரு படைப்பைக் குறித்து கடுமையான விமர்சனங்களை உருவாக்காமல் (உருவாக்கத் தெரியாமல்) வெறுமனே நகைப்புக்கு உட்படுத்துவது அதை எழுதியவருக்கே ஒருவகையான தாழ்வுணர்ச்சியையும் சந்தேகத்தையும்தான் உருவாக்கும். இதனால் பெற்றுக்கொள்ள ஒன்றுமில்லை. வேண்டுமெனில் சிரமப்பட்டு சிரிப்பை வரவழைத்துக்கொள்ளலாம்.

ஒட்டுமொத்தமாக இது நம்மிடம் வலுவடைந்திருக்கும் மேம்போக்கான தன்மையினையே சுட்டிக்காட்டுகிறது.

எழுதிய நபருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்…….

இது அவர்களால் எழுதப்பட்ட நகுலனின் கவிதை….
.
வழக்கம் போல்
என் குளியலறையில்
நான் என்னுடன்
இருந்தேன்.
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது.
‘’எவன்டா அது பொம்பளைங்க குளிக்கிற
எடத்துல. எடு வெளக்கமாத்த’’
என்று கத்தினேன்.
‘’வடிவு தான? நா உனக்காக சந்தைக்கு
போய் ப்ரைஸ் ஒன்னு வாங்கிட்டு
வந்திருக்கேன். வா” என்றான்.
எந்தச் சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான
யார்தான்
சொல்ல முடியும்?