கோவை எழிலன்
இனிது பெற்றுகுமே
வறுமையில் வாடும் புலவர் மன்னனைக் இலக்கிய இன்பம் 10 பொன் அணிகலன்களைப் பெறுகிறார். அவரோடு வந்த அவரின் சுற்றத்தார் அவற்றை அணிய முற்படுகின்றனர். அவர்கள் அவற்றை முதல் முதலாகக் காண்பதால் எவ்வாறு அணிவது என்று தெரியாமல் விரலில் அணிய வேண்டிய மோதிரத்தைக் காதணியாகவும் காதணியை மோதிரமாகவும் இடையில் அணியும் மேகலையை கழுத்தணியாகவும் கழுத்தணியை மேகலையாகவும் அணிகின்றனர்.
இந்நிகழ்வு புலவருக்கு இராமனின் மனைவி சீதையை இராவணன் கவர்ந்து சென்ற போது அவளால் வீசப்பட்ட அணிகளை குரங்குகள் மாற்றி அணிந்ததை நினைவூட்டுகிறது. இந்த இராமாயணக் காட்சியை நினைவூட்டுவதன் புலவர் சங்க காலத்திலேயே இராமாயணக் கதை தமிழ்நாட்டில் புழங்கி வந்து இருப்பதை உறுதி செய்கிறார்.
ஊன்பொதி பசுங்குடையார் சோழன் இளஞ்சேட்சென்னியைப் பாடிய அந்த புறநானூற்றுப் பாடல் இங்கே
“இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக்குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும்
அரைக்கமை மரபின மிடற்றுயாக்குநரும்
மிடற்றமை மரபின அரைக்குயாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே”
