விருட்சம் நினைவுகள் 4

29.05.2018

அழகியசிங்கர்

            ஆத்மாநாமின் ’ழ’ பத்திரிகையுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. எப்படி என்ற கதையைச் சொல்கிறேன்.   1978ஆம் ஆண்டு ஆத்மாநாம் ’ழ’ என்ற சிற்றேட்டைக் கொண்டு வந்தார்.  கவிதைகள் மட்டும் உள்ள பத்திரிகை அது.  ஆத்மாநாம் ஆசிரியராக இருந்தாலும், அவருடைய நெருங்கிய நண்பர்களான ஞானக்கூத்தன், ஆர் ராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன், ஆனந்த், காளி-தாஸ் முதலிய நண்பர்கள்தான் அந்தப் பத்திரிகை வரக் காரணமானவர்கள்.

            ஒரு பத்திரிகை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு உதாரணம் ழ பத்திரிகை.  ஏன் அப்படிச் சொல்கிறேன்?  முதலில் ஒரு சிறுபத்திரிகை அகப்பக்கங்களுடன் வரக்கூடாது, இரண்டாவது மிகக் குறைவான பிரதிகளே அச்சடிக்க வேண்டும்.  சந்தாதாரர்களுக்கு மட்டுமே பத்திரிகை கொண்டு வரவேண்டும். தொடர்ந்து சிறு பத்திரிகையில் எழுதுவதற்குச் சிலர் முக்கிய காரணமாக இருக்க வேண்டும்.

            ழ பத்திரிகை அப்படித்தான் வந்தது.  அதில் தொடர்ந்து ஒருசிலர் எழுதிக்கொண்டு வந்தார்கள்.  உண்மையில் அவர்கள்தான் அந்தப் பத்திரிகைக்கு உயிர் கொடுத்துக்கொண்டு வந்தார்கள்.  இன்றைக்கு இலக்கிய உலகில் ஞானக்கூத்தன் என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும்.  ழ பத்தரிகை வந்தபோது எத்தனைப் பேர்களுக்கு ஆத்மாநாம் என்ற பெயர் தெரியும்?  அவர் எழுதிய கவிதைகளை அவர் காலத்தில் ரசித்துப் பாராட்டியவர்கள் எத்தனைப் பேர்கள்?  

            இன்றைக்கு படைப்புலகம் அப்படித்தான் இருக்கிறது.  நமக்கு யாராவது ஒரு படைப்பாளி பிடித்திருந்தால் நாம் தூக்கிக்கொண்டாடுவோம்.  என்னைப் பொறுத்தவரை ஆத்மாநாமுடன் இருந்த பலர் திறமையானவர்கள். யாராலும் கண்டு கொள்ளப்படாதவர்கள். ஆத்மாநாமின் தற்கொலை நடந்திருக்கக் கூடாது.  அது விதி. நடந்துவிட்டது.  திறமையான ஆத்மாநாமை அன்றைய சூழ்நிலை சரியாக உணரவில்லை.  நம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற  ஏக்கம் கூட அவரைக் கொன்றுவிட்டிருக்கும். அவருடைய பிறழ்வு மனநிலைக்குக் காரணம் உடனடியாக புகழ் கிடைக்கவில்லை என்பதுதான்.  

            உண்மையில் எழுதுபவர்கள் எல்லோரும் எழுதிமுடித்தவுடன் எழுத்தை விட்டு ஓடிப் போய்விடவேண்டும்.  பத்திரிகையில் பிரசுரம் செய்வது, பிரசுரம் செய்ததை யாராவது படிப்பார்களா என்று ஏங்குவது என்றெல்லாம் இருக்கக் கூடாது. 

            இந்த சிறிய இலக்கிய உலகில்தான் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொள்வது, ஒரு படைப்பாளியை மனதார பாராட்டாமல் இருக்கிறது என்பதெல்லாம் நடக்கிறது.  ஆத்மாநாம் காலத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரைப் பாராட்டினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

            இந்த உலகம் விசித்திரமானது.  படைப்பாளி என்பவன் சாதாரணமானவன்.  அவன் எழுதுவதால் அசாத்தியமான திறமையாளனாக அவனால் மாறிவிட முடியாது.  அவன் எழுதுகிறான்.  அவன் எழுத்து ஏதோ பத்திரிகையில் பிரசுரமாகிறது.  அந்தப் பிரசுரமான எழுத்தை யாரோ படிக்கிறார்கள்.  படிக்கிறவர்கள் பெரிய மனது பண்ணிப் பாராட்டுகிறார்கள்.  இப்படி யாராலும் கண்டுகொள்ளாமல் இருக்கிற படைப்புகள் சொல்லில் அடங்காமல் நம் முன் வீற்றிருக்கின்றன.  ஆத்மாநாம் காலத்தில் பத்திரிகையில் வருவதும் ஒரு படைப்பு புத்தகமாக வருவதும் மிக மிகக் கடினமாக இருந்தது.  

            ஆத்மாநாம் கவிதையை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

                        ஒரு தலைப்பிடாத கவிதையாய்

                        வாழ்க்கை

                        ஒரு நாள் இரண்டு நாள் என

                        தொடர்ந்து நாட்களை எண்ணினேன்

                        காலையைத் தொடர்ந்து மாலை

                        இரவாகும் காலப்புணர்ச்சியில்

                        பிரமித்து நின்றேன்

                        கடற்கரையில்             

 (இன்னும் வரும்)