கணேஷ்ராம்/எஸ்கேப்

எஸ்கேப்

இன்னும் எவ்வளவு தூரம் போகணும் சத்தீஷ்?

நித்யாவைத் திரும்பிப் பார்க்காமலே சொன்னான் சதீஷ் “ஆக்சுவலி சானடோரியம் ஸ்டேஷன்ல இருந்து கரெக்டா ஒண்ணரை கிலோமீட்டர். இப்போ கால் கிலோமீட்டர் நடந்திருப்போம். நாலு எட்டு எடுத்து வெச்சோம்னா சிட்லபாக்கம் ஏரி வந்துடும். லெஃப்ட்ல பூரா ஒரே காம்பவுண்ட்.. ஃபுட் கார்ப்பரேஷன்.. இது தான் கொஞ்சம் கஷ்டமான ஸ்ட்ரெட்ச்.. வெயில் வேற மண்டையைப் பொளக்குது”
“உங்க ஊருக்கு பஸ்ஸே கிடையாதாப்பா?”
சதீஷ் நிஜமாகவே இப்போது கவலைப் பட்டான். நித்யா ரொம்ப தூரத்து சொந்தம். ரத்த சம்பந்தம் கிடையாது. அவள் அப்பாவுக்கு ப்ரைவேட் கம்பெனியில் நல்ல வேலை. அவர்கள் சென்னை வந்து பலகாலம் ஆகிவிட்டது. தசரதபுரத்தில் சல்லிசாகக் கிடைத்த போது வாங்கிப் போட்டு இப்போது பிரமாதமாக வீடுகட்டிக் கொண்டு வாழ்கிறார்கள்.

அவன் அப்பா பாங்க் ஆஃபீசர். வசதிக்கு இவர்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை. ஆனால், ராயப்பேட்டையில் அஜந்தா பின்புறம் அப்பாவின் நண்பர் ஒருவர் பிடிவாதம் பிடித்து வீடு ஒன்றை வாங்கச் சொன்ன போது அப்பா மறுத்து விட்டார். சென்னையில் வீடு எதற்கு என்று. அதற்கு பத்து ஆண்டுகள் கழித்துத் திடுமென்று கொஞ்சமாவது பெரிதாக வேண்டும் என்று மூன்று கிரவுண்ட்டுகள் வாங்கிப் போட்டு, போன வருடம் தான் வீடு கட்டிக் குடி வந்தது.

இதிலும் கான்ட்ராக்டர் கஜினி மாதிரி பதினேழு முறை வாய்தா வாங்கி அரைகுறையாக முடித்து, முடித்தவரை போதும் என்று வாசல் நிலைக்கதவு கூட இல்லாத நிலையில் குடி வந்தாகி விட்டது. ஐம்பதாயிரம் எஸ்டிமேட் போட்டு ஒண்ணரை லட்சம் எகிறி விட்டது அப்பாவுக்கு.

அவர் இதையெல்லாம் பொருட்படுத்துபவர் இல்லை.

தனக்கென்று எதையும் செய்து கொள்ள மாட்டாரே அன்றி மற்ற எதிலும் செலவை லட்சியம் செய்ய மாட்டார்.

எங்கள் ஊரில் இருக்கும் வீட்டை அம்மா ஆவுடையார் கோயில் திருப்பணி என்பாள். நாங்கள் அங்கு வாழ்ந்த பத்து வருடங்களில் அதில் கொத்தனார் வராத நாளே இல்லை. அதற்கு செய்த செலவில் பாதியை வைத்து குன்னியூர் பங்களாவை வாங்கி இருக்கலாம் என்பது அம்மாவின் ஆதங்கம். அது என்னமோ கட்டு வேலையிலும் தோட்ட வேலையிலும் அப்பாவுக்கு அதீத ஆனந்தம்.

“என்ன சத்தீஷ் பதிலே காணம்? பஸ்ஸே கிடையாதான்னு கேட்டேன்”

சதீஷூக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர்கள் தெருக்கோடியில் தான் பஸ் ஸ்டாண்டு. அது உண்மையில் ஒரு குளக்கரை. அதில் தான் ஒரேயொரு பஸ் வந்து போகும். வருஷத்துக்கு ஒண்ணு தான் வரும் என்பார் எதிர் வீட்டு தாத்தா. அவர் ஒரு ரிட்டையர்டு சப் ரிஜிஸ்ட்ரார். பாவம்.

இவர்கள் வீடு கட்டும் போது எதிர் சாரியில் அவர் வீடு மட்டும் தான் இருந்தது.

இவனும் இவன் அம்மாவும் முதல் தடவை சைக்கிள் ரிக்ஷாவில் தேடு தேடு என்று தேடி, கடைசியாக தெருவில் மெதுவாக போய்க்கொண்டு இருந்தவரிடம் இவன் தான் கேட்டான் “சார்.. எம்சி நகர் எங்க இருக்கு?”
“அந்தக் குருக்ஷேத்ரம் இதுதாண்டாப்பா.. உனக்கு எங்க போகணும்னு சொல்லு”
அப்புறம் பார்த்தால் அவர் எதிர் வீட்டுக் காரர்.

“ரெண்டு பஸ் இருக்கு நித்யா.. ஒண்ணு மினி பஸ்.. வீட்டு வாசல் வழியாப் போகும்.. இன்னொண்ணு இப்போ நாம நடக்கற ரோட்டுலதான் போகும். ஆனா அது ஒரு நாளைக்கு நாலு ட்ரிப்பு தான்.. அதுக்காக நின்னோம்னா வயசாயிடும்” என்று தன் ஹாஸ்யத்தில் திருப்தி கொண்டு புன்னகைத்தான்.

அவள் புன்னகைக்கவில்லை. முடியவில்லை போலும். வெயில் வேறு தகிக்கிறது.

அழகாக இருந்தாள். பேரழகெல்லாம் இல்லை. ஆனால் அந்த வயதிற்கான ஏதோவொரு ரசாயனம் சுரந்து அவனை ஈர்த்தது. அவளை ரகசியமாகவாவது பார்க்க முற்பட்டான். அவள் அதைப் பொருட்படுத்திய மாதிரி தெரியவில்லை.

“நாம தப்பு பண்ணிட்டோம் திவ்யா. குரோம்பேட்டைலயே எறங்கி இருக்கணும். அங்கேயிருந்து முக்கால் மணிக்கு ஒரு பஸ்ஸூ இருக்கு.. ஆனால் அதுல ஏற முடியாது.. குமரன் குன்றம் ஸ்டாப்பில் எறங்கி அஞ்சாறு நிமிஷத்துல வீடு வந்துடும்..”
“ப்ச்”
உண்மையில் அவள் உடையை உத்தேசித்தே அவளை அந்த வழியில் கொண்டு வரவில்லை. அவளே வெட்கப் படாதபோது இவன் எதற்காகவோ அநாவசியமாக வெட்கப்பட்டுச் சாகிறான். அவனுக்கு இன்னும் சென்னையின் நாகரீகம் பழகவில்லை.

பத்தடி போனதும் மறுபடியும் கேட்டாள் “எவ்வளவு தூரம்?”
அதோ தூரத்தில் தெரியுதே அதுதான் வரதராஜா தியேட்டர். போன மாசம் தான் திறந்தாங்க.

“நீ போயிருக்கியா?”
“ஒரேயொரு படம் போயிருக்கேன்.. எங்க வீட்ல அடிக்கடி பணத்துக்கெல்லாம் போக விட மாட்டாங்க.. இந்தத் தியேட்டர் புதுசா வந்ததுனால போகணும்னு நினைச்சுத் தனியா போனேன்”
“என்ன படம்?”
“எம்ஜிஆர் படம். நினைத்ததை முடிப்பவன்”
“ஐயையே”
சதீஷ் முகத்தில் ஈயாடவில்லை. வரதராஜாவில் இந்த மாதிரிப் படங்கள் தான் வருகின்றன என்று எப்படிச் சொல்வது?

இதற்கே இப்படி என்றால், இங்கிருந்து பிராட்வே போகும் ஒற்றை பஸ்ஸில் “மெட்ராஸூக்கு ரெண்டு டிக்கெட் கொடப்பா” என்று பயணிகள் கூசாமல் கேட்பதை நினைத்து எவ்வளவு நாள் ரகசியமாக அழுதிருக்கிறான்.

ஊர் முழுக்க மெட்ராஸ் போகிறோம் தம்பட்டம் அடித்து விட்டு, கடைசியில் வந்து அடைக்கலமான இடம் மெட்ராஸ் இல்லை என்றால் அது எவ்வளவு கொடுமை?

“நீ இந்த மாதிரி ஓல்ட் மூவீஸ் தான் பார்ப்பியா சதீஷ்?”

“இல்லேல்லே.. நாம வேர்ல்ட் கப்பு ஜெயிச்ச சந்தோஷத்தை எப்படியாவது கொண்டாடணும்னு தோணுச்சு.. அதுனால போனேன்”

இப்போது ஏரி நெருங்கி விட்டது. அநேகமாக வற்றி விட்டு வறண்டு தான் காணப்படுகிறது இப்போதெல்லாம். இப்படியே போனால் யாராவது ப்ளாட் போட்டு வீடு கட்டி விடுவார்கள்.
“சதீஷ்.. அதோ பாரு.. ஒரு ஆட்டோ வருது.. கண்டிப்பா காலியாத்தான் இருக்கும்.. என்னால கண்டிப்பா நடக்க முடியாது.. மொதக் காரியமா அதை நிறுத்து”

சதீஷூக்கு தூக்கி வாரிப் போட்டது. அவன் கால் சட்டைப் பையில் ஐந்து ரூபாய் அறுபத்து ஐந்து காசுகள் தான் வைத்து இருக்கிறான். நேற்று அம்மா கொடுத்திருந்த இருபது ரூபாயை நண்பர்களோடு வேட்டு விட்டு விட்டான். அதில் மிச்சம் தான் இது.
ஆட்டோக்காரனை வாசலில் நிறுத்தி விட்டு அம்மாவிடம் பஞ்சாயத்து பண்ண முடியாது. அதுவும் கொஞ்சம் சுமாராக இருக்கிற இளம் பெண் முன்னால்.

அதற்குள் ஆட்டோ அருகில் வந்து விட்டது.

நித்யா ரொம்பவும் சுவாதீனமாகக் கையைக் காட்டி நிறுத்தினாள்.

அதில் ஏற்கெனவே சவாரி இருக்க வேண்டுமே என்று சதீஷ் குலதொய்வத்தை வேண்டிக் கொண்டான்.

அது குலதெய்வமே ஆனாலும் தரித்திர ஜாதகங்களை அவ்வளவாக மதிக்கும் வழக்கம் கொண்டிராததால் ஆட்டோ காலியாகத் தான் இருந்தது.

“எங்கம்மா போகணும்”
“என்ன ஊரு சத்தீஷ்?”
இவளும் ஊரென்றே சொல்கிறாளே என்று வருத்தப் பட்டான் அவன்.
“எம் சி நகர்ங்க”
“அது எங்க இருக்குது?”
எதிர் வீட்டுக் கிழவர் மாதிரி அவனிடம் குருட்சேத்திரம் என்றெல்லாம் அடையாளம் சொல்ல முடியுமா என்ன?

“பஸ் ஸ்டாண்டு கிட்டங்க”

“யோவ்.. பஸ் ஸ்டாண்டு சுத்திப் பதினஞ்சு ஏரியா கீது.. வெங்கட்ராம நகரா?”
“இல்லீங்க.. அதுக்கெல்லாம் ரொம்ப முன்னாடி.. வரதராஜாவை ஒட்டி கொஞ்ச தூரம் போனா பஸ் ஸ்டாண்டு தாண்டி லெஃப்ட்”
“மங்கள விநாயகர் கோயிலாண்டயா?”
“அதுக்கு அடுத்த தெருங்க”
“சரியாப் போச்சு.. சரி சரி.. இருவது ரூவா கொடு”
“ஐயையோ”
“இன்னா ஐயையோ.. எம்மாந் தூரம் கீது.. பொட்டப் புள்ளிய வேற இஸ்துக்கினு போற.. யம்மாடி.. இந்த வெயிலுக்கு ஊடு போயி சேர்றதுக்குள்ள அண்டாவை அடுப்புல வெச்சா மாதிரிக் கனானங்கரேல்னு ஆயிடுவ.. இந்தப் பையன பாத்தாலே தெர்லே”
“அதெல்லாம் சரிதான்.. இருவது ரூவா ரொம்ப ஜாஸ்தி..”
“அப்போ எவ்வளவு தருவே?”
“அஞ்சு ரூவா தர்றேன்” என்றான் சதீஷ் லேசான பயத்துடன்.
“இன்னாது?”
அவன் உதடுகள் அதற்குள் கண்ட மேனிக்குக் கோணியிருந்தன.
“ஃபைவ் ருபீஸ்”
“நாம்பாட்டுல தேமேன்னு போய்க்கினு இருந்தேன்.. சொம்மாக் காட்டிக்கு ஊடால நிர்த்தி ரவுசு காட்றியா..கய்தே.. எறங்குனேன் கண்டி மூஞ்சி திரும்பிக்கும்” என்று பதிலுக்குக் காத்திராமல் சர்ரென்று போனான் அவன்.

அவள் வாயடைத்துப் போயிருந்தாள்.
“சாரி சத்தீஷ்”
“பரவாயில்லை நித்யா.. இவனுங்க கிட்டேயெல்லாம் வம்பு வெச்சுக்கக் கூடாது.. சமயத்துல மூஞ்சில கோடு போட்ருவாங்க”
“ஓ” என்றாள் அவள், இன்னமும் அழகாக இருந்தாள்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டான் அவன்.