சுகன்யா சம்பத்குமார்/மனிதம்


குமரேசன் வயல் வேலையை முடித்துவிட்டு அவசர அவசரமாக வீடு திரும்பினான் . அவன் மனைவி பொண்ணுதாயையும் 6 வயது மகன் சோமுவையும் கூப்பிட்டு கொண்டு பக்கத்து ஊரில் நடைபெறவிருக்கும் திருவிழாவை காண கிளம்பினான் . மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் ஒரே மகனின் இந்த ஆசையாவது நிறைவேற்றுவதற்காக வேலை பார்க்கும் இடத்திலிருந்து கொஞ்சம் பணம் கடனாக பெற்று வந்தான் . வீட்டிற்கு வந்து அப்பா ஊருக்கு கிளம்ப சொன்னதும் , சோமுவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை .மூவரும் குமரேசனின் சைக்கிளில் புறப்பட்டனர் . அப்பொழுது போகும்போது குமரேசன் அவனுக்கு தெரிந்த ஒரு பாட்டை பாடிக்கொண்டே , ஓட்டினான் .அவர்கள் போகும் பாதையில் அழகிய ஆறு , காற்றில் அசைந்து ஆடிய மரங்கள் என்று எல்லாவற்றயும் பார்த்துக்கொண்டே சென்றார்கள் .பொண்ணுதாயும் நெடு நாட்களுக்கு பிறகு ஒரு திருவிழாவிற்கு செல்வதால் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தாள் , அவர்கள் உடுத்திய ஆடை பழையதாக இருந்தாலும் ,என்னமோ வானமே அவர்கள் கையில் கிடைத்ததுபோல் மகிழ்ச்சியாக பிரயாணித்தனர் . அடுத்த ஊரும் வந்தது , ஊரே திருவிழா கோலம் பூண்டிருந்தது . ஒரு இடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு , மூவரும் நடக்க ஆரம்பித்தனர் . அப்பொழுது சோமு அங்கு போடப்பட்டிருந்த கடைகளை பார்த்தான் . அவன் கேட்பதற்கு முன்னரே , அவன் அப்பா அவனை கூட்டி சென்று மிட்டாய் கடிகாரம் , கண் கண்ணாடி , பஞ்சு மிட்டாய் என்று ஏகப்பட்டது வாங்கி கொடுத்தார் . அவனும் மகிழ்ச்சியாக வாங்கி கொண்டான் . பிறகு திருவிழாவை பார்த்துவிட்டு கிளம்பும்போது பொம்மை கடையை பார்த்தான் சோமு . அவன் அப்பாவிடம் “அப்பா எனக்கு இந்த 5 பொம்மைகள் கூடிய டப்பாவை மட்டும் வாங்கி தருகிறீர்களா ? அதன் பிறகு உங்களிடம் எதையும் கேட்க மாட்டேன் “ என்றான் . சட்டை பையை மெதுவாக தடவி தடவி இருந்த அத்தனை ரூபாயையும் எடுத்து சோமு கேட்ட அந்த 5 பொம்மைகள் அடங்கிய டப்பாவை வாங்கினான் .” சோமுவிற்கு மிகுந்த சந்தோஷம் ,அவர்கள் இரவு சாப்பிடுவதற்காக வைத்திருந்த ரூபாயையும் சேர்த்து பொம்மை வாங்கியதால் ,பொன்னுத்தாயி குமரேசனை பார்த்து “என்னங்க , வீட்டிற்கு சீக்கிரமாக செல்வோம் , அங்கு பழைய சாதமும் சின்ன வெங்காயமும் வைத்திருக்கிறேன் , அதையே சாப்பிட்டு விட்டு உறங்கி விடுவோம் “ என்றாள் .என்றோ ஒரு நாள், தனக்காக தினமும் அடுப்படியில் அவதி படும் பொண்டாட்டிக்கு வெளியே உணவு வாங்கி தரலாம் என்று எண்ணி போது , பணம் இல்லையே என்று மிகவும் வருந்தினான் . அப்பொழுது பொன்னுத்தாயி அவன் கண்களை துடைத்துவிட்டு “வாங்க கிளம்பலாம் “ என்றாள் . குமரேசன் சைக்கிளை எடுக்க செல்லும்போது , சோமு திடீர் என்று ஓடினான் , அவன் எங்கே செல்கிறான் என்று அவர்கள் இருவரும் பின் தொடர்ந்தனர் . அங்கு வயதான தாத்தா மயக்கம் போட்ட நிலையில் படுத்திருந்தார் . அவரை போய் தூக்கி “தாத்தா என்ன ஆயிற்று ? என்று கேட்டான் சோமு , அதற்குள் குமரேசனோ அருகில் சிறிது நீர் வாங்கி அவருக்கு முகம் கழுவிவிட்டு , தண்ணீரை பருக செய்தான் . உடனே கேள்வி கேட்ட சோமுவை பார்த்து “ தம்பி சாப்பிட்டு 4 நாட்கள் ஆயிற்று , பசி தாங்க முடியவில்லை “ என்றார் .உடனே அருகிலிருந்த உணவகத்திற்கு சென்று அவருக்கு உணவு கேட்டான் சோமு . அங்குள்ள உணவகத்தின் முதலாளியோ , “தம்பி உணவு தருகிறேன் , ஆனால் காசு வேண்டுமே ? காசு இல்லாமல் எதையும் தருவதாக இல்லை , “ என்றார் .சோமுவோ படக்கென்று “அய்யா என்னிடம் இந்த பொம்மை உள்ளது இதை வைத்து கொண்டு எனக்கு ஒரு சாப்பாடு பொட்டலம் தாருங்கள் “ என்று கெஞ்சினான் . அதற்கு அந்த முதலாளியோ ,:” தம்பி பொம்மைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய போகிறேன் , எனக்கு காசு தான் வேண்டும் “ என்று கண்டிப்பாக கூறிவிட்டார் . சரி இதோ வருகிறேன் என்று முதலில் அப்பாவிடம் சென்று காசு கேட்டான் , அவர் என்ன கூறுவதென்று தெரியாமல் விழி பிதுங்கினார் , அவனிடம் , காசு தன்னிடம் இல்லை என்பதை நாசுக்காக கூறினார் . அதை அந்த சிறுவன் புரிந்து கொண்டு என்ன நினைத்தானோ தெரியவில்லை சட்டென்று பொம்மை கடைக்கே திரும்ப சென்று “அய்யா இந்த பொம்மையை திரும்ப பெற்றுக்கொண்டு எனக்கு காசு கொடுங்கள் “ என்றான் . பொம்மைக்கடை வியாபாரியோ “தம்பி நீ மிகவும் ஆசையாக வாங்கிய பொம்மை ஆயிற்றே , எதற்கு இப்பொழுது காசு கேட்கிறாய் ?” என்று கேட்டார் . சோமு நடந்தவற்றை கூறினான் , உடனே அவரும் நெகிழ்ந்துபோய் “தம்பி இந்தா உன் காசு “ என்று கொடுத்தார் . அதை எடுத்துக்கொண்டு போய் உணவகத்தின் முதலாளியிடம் கொடுத்தான் . “அய்யா இப்பொழுது உணவு கொடுங்கள் “ என்றான் . இதை அத்தனையும் பார்த்த உணவகத்தின் முதலாளி அவனை தூக்கி முத்தமிட்டு “என்னை மன்னித்துவிடு தம்பி , மனிதம் என்றால் என்ன என்று இந்த சிறு வயதில் நீ எனக்கு புரிய வைத்துவிட்டாய் , இந்தா இந்த உணவு பொட்டலத்தை வாங்கி கொள் . அந்த தாத்தாவிடம் கொடுத்துவிட்டு , நீ கொண்டு வந்த காசை வைத்து அந்த பொம்மையை மறுபடியும் பெற்று கொள் “ என்றார் . சோமு கிளம்பும் போது , “தம்பி ஊருக்கு கிளம்புவதற்கு முன்னர் , உன் அப்பா அம்மாவுடன் இங்கே வந்துவிட்டு செல் “ என்றார் உணவகத்தின் முதலாளி . அவனும் தாத்தாவிடம் உணவை கொடுத்துவிட்டு , பொம்மையை மறுபடியும் வாங்கிக்கொண்டு ,தன் அப்பா அம்மாவை உணவகத்திற்கு அழைத்து சென்றான் . உணவகத்திற்குள் உள்ளே நுழைந்ததும் முதலாளி சோமுவையும் அவன் அப்பா அம்மாவையும் உட்கார வைத்து மிக்க மரியாதையோடு அவரே விருந்து சாப்பாடு பரிமாறினார் . குமரேசனுக்கும் பொன்னுத்தாயிக்கும் இதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் ……….