சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாதசுந்தரம்

  1. மாப்பிள்ளை அழைப்பு

மாப்பிள்ளை அழைப்பு நடந்து கொண்டிருக்கிறது.
புத்தூர் வாசிகளுக்கு அன்று ஒரு பெருமை மிக்க நாள். அந்தணச் சிறுவன்தான், ஆனால் ராஜா வீட்டில் வளர்ந்த பிள்ளை, இந்தச் சின்னஞ்சிறு கிராமத்துப் பெண்ணை மணக்க வருகிறான் என்றால் கேட்க வேண்டுமா? ‘சகலவித ஆடை ஆபரணங்களோடு வெள்ளைக் குதிரையின் மீது கம்பீரமாக வீற்றிருந்து, வாத்ய கோஷம் முழங்க, பாலிகையும் பூவும் பழவர்க்கங்களும் நிறைந்த வெள்ளித் தட்டுகளை ஏந்திய சுமங்கலிப் பெண்கள் பின்தொடர, குடை கொடி ஆலவட்டம் முதலிய விருதுகள் சகிதம் வரும் ஊர்வலத்தைக் கண்டு களிக்க வந்த மக்கள் வெள்ளத்தை அந்தச் சிறிய புத்தூர் அணை கொள்ள முடியாமல் தவித்தது. ஆனால் பெண் வீட்டுக்காரர் முன் எச்சரிக்கையாக அக்கிரகாரத் தெருவுக்கு வெளிப்புறத்திலேயே பெரிய மணப்பந்தர் அமைத்து அலங்கரித்து வைத்திருந்தார்கள்.
ஊர்வலம் பந்தரை நெருங்குகிறது. வெண்பரியிலிருந்து இறங்கிய மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். பந்தரினுள்ளே மண வினைக்கு வேண்டிய சகல ஏற்பாடுகளையும் வைதிகர்கள் விதிமுறைப்படி செய்து வைத்துக் காத்திருக்கிறார்கள். வேத கோஷம் முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, மாப்பிள்ளை வலக்கால் எடுத்து வைத்து மணப்பந்தருக்குள் நுழைகிறார். அந்தச் சமயம் பார்த்து எங்கிருந்தோ வந்து எதிர்கொள்கிறார் ஓர் ஒற்றைப் பிராமணர்!
படு கிழம். பஞ்சத்தில் வாடிய உடல். கக்கத்தில் மடிசஞ்சி. கையில் ஒரு பழங்குடை. இந்த வேஷத்தில் வந்த அந்தப் பிராமணர் மிகுந்த கஷ்டப்பட்டுக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பந்தருக்குள் நுழைந்து, “எல்லாரும் கொஞ்சம் நில்லுங்கோ. நான் சொல்லப் போவதைக் கேளுங்கோ” என்று தமது தேய்ந்த குரலை உயர்த்திக் கத்தினார். இந்த அபசகுனத்தைப் பார்த்த எல்லாரும் திகைப்படைந் தனராயினும், ஒரு சிலர் சமாளித்துக் கொண்டு, “வரணும் வரணும் பெரியவாள்! உங்கள் ஆசீர்வாதம் தான் முதல்லே” என்று பக்குவமாய் வரவேற்றார்கள். அந்தக் கிழவர் ஆசீர்வதிக்கவா வந்தார்? அடிமை கொள்ள வந்தவர், “இந்தக் கல்யாணம் நடக்க முடியாது. இப்பிள்ளையாண்டான் எனக்கு அடிமை. நிறுத்துங்கள் கல்யாணத்தை!” என்று போட்டார் ஒரு போடு.
மாப்பிள்ளை சிரித்தார். ஆனால் பார்த்து நின்றவர்களோ பதறினார்கள். கிழவர் மிக்க நிதானத்துடன், “சிரிக்காதேடா தம்பி. இது வெறும் வேடிக்கையல்ல. கொஞ்சம் பொறு” என்று சொல்லிக் கொண்டே தமது மடிசஞ்சியை அவிழ்த்தார். அதிலிருந்து ஒரு பழுத்த ஓலையை எடுத்தார். “இதோ பார், உன் பாட்டனார் வழி வழி அடிமை என்று எழுதித் தந்த ஓலை இருக்கிறது. சபையோரே, நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அறிவித்தார். யாவரும் வாயடைத்து நின்றாலும் மாப்பிள்ளைக்கு ஆத்திரம் பொங்கியது. “யாரையா நீர்? அந்தணனுக்கு அந்தணன் அடிமையென்று சொல்ல உமக்கென்ன” பைத்தியமா?” என்று கடிந்தார்.
கிழவரோ இந்த வார்த்தைகளால் கோபமடையவில்லை. கொஞ்சமும் நிதானத்தை இழக்காமல் சொன்னார்: “துள்ளாதே தம்பீ. நான் பித்தனாயுமிருக்கலாம், பேயனாயுமிருக்கலாம். வேறு என்ன வசை பாடினாலும் நான் அதற்காக வெட்கப்படப் போவதில்லை. என்னைப் பற்றி நீ இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஏன் வீணாக வாதாடுகிறாய்? நீ என் அடிமை தான். இப்போதே வா என் பின்னால்” என்று கண்டிப்புடன் அழைத்தார் அந்தக் கிழவேதியர். இதென்ன வேடிக்கையா யிருக்கிறதென்று கருதிய மாப்பிள்ளை, கோபத்தை மறைத்துக் கொண்டு சாதுரியமாக, “எங்கே அந்த ஓலையைக் கொஞ்சம் கொடும், உண்மைதானா என்று பார்க்கலாம்” என்று நெருங்கினார். ஆனால் கிழவரோ சமர்த்தர். “சின்னப் பையன் நீ, உனக்கென்ன புரியுமென்று கேட்கிறாய்? சபையிலுள்ள பெரியவர்கள்தான் பார்த்துச் சொல்ல உரிமையுள்ளவர்கள். அவர்கள் தீர்ப்பளித்ததும் நீயாகவே வந்து எனக்கு அடிமைத் தொழில் செய்யப் போகிறாய்” என்றதும் மாப்பிள்ளை தனது கௌரவம் பொருந்திய மணக்கோலத் தையும் மறந்து, திடீரெனக் கிழவர் மேற் பாய்ந்தார். ஓலையைப் பறித்தார். கிழித்தெறிந்தார். அந்தணக் கிழவர் நடுக்கமுற்று, “அந்தோ! கேள்வி முறையில்லையா? இந்தப் பிள்ளையாண்டான் செயலைப்பார்த்தீர்களா?” என்று கூக்குரலிட்டபடி மாப்பிள்ளையின் கைகளைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டார்.
மணப்பந்தரிற் கூடியிருந்தவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மாப்பிள்ளை வீட்டார் கொதித்தனர். பெண் வீட்டார் கண்கலங்கினர். இடையிலிருந்த சில பெரியவர்கள் ஓடிச் சென்று கிழவரையும் பிள்ளையையும் கைகலக்க விடாமல் பிரித்து விட்டு, அந்தண முதியவரைப் பார்த்து, “இதென்ன ஸ்வாமி, வழக்க மில்லாத வழக்காயிருக்கிறது! நாங்கள் கேள்விப்படாத ஒரு வழக்கம். நீர் எங்கே இருப்பது?” என்று கேட்டனர்.
“நான் இப்போது இங்கேதான் இருக்கிறேன். ஆனால் நான் குடியிருப்பது அதோ பக்கத்திலிருக்கிற திருவெண்ணெய் நல்லூராக்கும். அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? வழக்கமில்லாத வழக்கு என்று சொன்னீர்களே, இவன் என் கையிலிருந்த ஓலையைத் திருட்டுத்தனமாகப் பிடுங்கிக் கிழித்தெறிந்தபோதே என் கட்சி உண்மையென்பது நிரூபிக்கப்பட்டு விட்டதல்லவா?” என்றார். உடனே மாப்பிள்ளை இந்தக் கிழவர் வழக்காடுவதில் பழைய பெருச்சாளிதான் என்று தீர்மானித்துக்கொண்டு, “திருவெண்ணெய் நல்லூர்க்காரர் இந்தப் பேட்டையில் வந்து எதற்காக வாதாட வேண்டும்? எல்லை தாண்டி வழக்காடலாமா?” என்றார். கிழவர் உடனே மடக்கினார். “அதிகம் தெரிந்துவிட்டதாகக் கர்வம் கொள்ளாதே. நான் வெண்ணெய்நல்லூர்க்காரன்தான். ஆனால் நீ ஆரூரான் என்பதை மறந்துவிடாதே. உன் பாட்டன் வழியெல்லாம் அந்த ஊர்தான். ஆகையால் இங்கே புத்தூரில் நின்று நாம் வாதாட வேண்டா. வெண்ணெய்நல்லூரிலேயே போய் பஞ்சாயத்து வைத்து நமது வழக்கைத் தீர்த்துக் கொள்வோம், வா” என்றார்.
மாப்பிள்ளைக்கு ஒரே திகைப்பு. பைத்தியம் என்று பரிகாசம் செய்த இந்தக் கிழவரோ சட்டம் பேசும் பிடிவாதக்காரராயிருக்கிறார்! திருமணப் பந்தரிலே இப்படியொரு எதிர்பாராத தடை ஏற்பட்டதை நினைத்துக் கவலைப்பட்டார். இவரிடம் என்னதான் அற்புதக் கவர்ச்சி இருக்கிறதோ! அங்கு நின்ற அத்தனை பேரும் சும்மா நிற்கிறார்களே. இந்தப் பைத்தியத்தை அதன் வழியில் விட்டுத்தான் சாதுர்யமாகத் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த மாப்பிள்ளை, “சரிதான், அப்படியே வாரும், திருவெண்ணெய் நல்லூரில் இந்த வழக்கைத் தீர்த்துக் கொள்ளலாம்” என்று சொன்னார். எல்லோரும் ஒப்புக் கொண்டனர். கிழவனார் தமது தோளிலிருந்து நழுவிய உத்தரீயத்தைச் சரி செய்து கொண்டார். மடிசஞ்சியை ஒரு தரம் சோதித்துப் பார்த்தார். நிமிர்ந்து கைத்தடியை ஊன்றிக்கொண்டு பக்கத்திலுள்ள ஊராகிய திருவெண்ணெய் நல்லூரை நோக்கி நடந்தார். மாப்பிள்ளையும் மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.
*
*
இந்த அதிசயமான அடிமை வழக்கில் சம்பந்தப்பட்ட மாப்பிள்ளை வேறு யாருமல்லர். சைவ உலகம் போற்றிப் பாராட்டும் அறுபத்து மூன்று அடியார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார்தான். சுந்தரர் என்பது பிற்காலத்தில் யாரோ இட்ட பெயர். ஆரூரர் என்றுதான் பெற்றோர் பெயரிட்டழைத்தனர். இவருடைய தந்தையார் சடையர் என்பவர் திருநாவலூரில் கோயில் அர்ச்சகர். தாயார் இசைஞானியார் திருவாரூரைச் சேர்ந்த காரணத்தால் அந்த ஊர் ஸ்வாமியின் பெயராலேயே பிள்ளையை ஆரூரன் என்று அழைத்தார்கள்.
குழந்தை ஆரூரன் மிக அழகாயிருப்பான். சுறுசுறுப்பும் குறும்பும் நிறைந்த பருவத்தில் ஒரு நாள் கோயில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அவ்வூர் ராஜா பார்த்துவிட்டான், அவ்வளவு தான். எப்படியாவது ஆரூரனை எடுத்துக் கொண்டு போய்த் தன் குழந்தையாக வளர்க்க வேண்டுமென்ற ஆசை பிறந்துவிட்டது அந்த அரசனுக்கு. கூட வந்த சேவகர் மூலமாகக் குருக்கள் வீட்டுக்குச் சொல்லியனுப்பினான். ஆனால், பெற்றவர்களுக்கு அது ஒரேயொரு தவக்கொழுந்து. எப்படி உடனே சம்மதிப்பார்கள்? தயங்கினார்கள். இருந்தும் அரசன் விருப்பத்தை மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டனர். அரசன் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்று குழந்தை ஆரூரனைத் தன் மகனாகப் பாவித்து அந்தணனுக்கும் அரசனுக்கும் வேண்டிய எல்லாக் கல்வியையும் போதிக்க ஏற்பாடு செய்து அருமையாக வளர்த்து வந்தான் என்று சேக்கிழார் தமது பெரிய புராணத்தின் மூலமாக நமக்குச் சொல்கிறார். இது நிகழ்ந்தது சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்- கி.பி. எட்டாம் நூற்றாண்டில் என்று சரித்திர ஆசிரியர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
சரித்திரத்தையும் புராணத்தையும் நாம் படித்திருந்தாலும், பன்னிரண்டு நூற்றாண்டுக் காலமாக மக்கள் மத்தியில் செவிவழிச் செய்திகளாக இந்தக் கதைகளெல்லாம் எப்படியெப்படிப் பல கிளைகள் விட்டு வளர்ந்தன; அந்தக் காலத்துச் சரித்திரச் சின்னங் களும் கோயில்களும் அடியார் மரபுகளும் எப்படியெப்படியெல்லாம் இன்று மாற்றமடைந்துள்ளன என்று நேரிலே கண்டறிவதற்காகப் புறப்பட்டுச் செய்த யாத்திரை அனுபவம்தான் நாம் சொல்லப் போகும் நீண்ட கதை.
சென்னை நகரத்தை யடுத்த குன்றத்தூரிலே பிறந்த புலவர் சேக்கிழார், சோழப் பேரரசன் அநபாயன் என்ற இரண்டாம் குலோத்துங்கனுக்கு மந்திரியாகத் திருவாரூரிலே கடமையாற்றினார். அரசன் வேண்டுகோளுக்கிணங்கி சிவனடியார்கள் அறுபத்துமூவரின் வரலாற்றைப் பாடுவதற்காக அந்தப் பெருமகன் தமிழ் நாட்டிலுள்ள சிவஸ்தலங்களையெல்லாம் நேரில் சென்று தரிசித்து, தாம் கண்டதையும் கேட்டதையும் வைத்துத் தமது அரும் பெரும் காப்பிய மாகிய பெரியபுராணம் என்ற திருத்தொண்டர் புராணத்தைப் பாடினார். அந்தச் சேக்கிழார் அடிச்சுவட்டில் சென்று, அவர் அனுபவத்தையும் அறுபத்துமூவர் அனுபவத்தையும் நாம் பெற வேண்டுமென்ற ஆசையால் தூண்டப்பெற்ற யாத்திரைதான் இது. இதில் நாம் முதலில் சேக்கிழாரின் கதாநாயகனாகிய சுந்தர மூர்த்தியைச் சந்தித்து, அவர் யாத்திரையில் நாமும் பின்தொடர்ந்து, மற்றைய அறுபத்திரண்டு சிவனடியார்களையும் சந்திப்போம். இடையிலே பல அரசர்களைப் பார்ப்போம். அவர்கள் கட்டி எழுப்பிய கோயில்களையும் வானளாவிய கோபுரங்களையும் சிற்பச் செல்வங்களையும் பார்த்து மகிழ்வோம்.
சே.அ-1

One Comment on “சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாதசுந்தரம்”

Comments are closed.