சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாத சுந்தரம்

  1. “நம்ம சுந்தரம்!?”

இரவு ஏழு மணியிருக்கும் நாங்கள் திருநாவலூர் போய்ச் சேரும்போது. அங்கு சப்ரிஜிஸ்திரார் உத்தியோகம் பார்த்த நண்பர் ராஜு, ஏற்கெனவே எமது வரவை அறிவித்திருந்தோமாகையால், எங்களுக்காகக் காத்திருந்தார். அவரோடு உள்ளூர் நண்பர்கள் சிலரும் இருந்தனர். காமெரா, டேப் ரிகார்டர் முதலிய உபகரணங்கள் சகிதம் நாங்கள் தடபுடலாகப் போயிறங்கியவுடன் அந்தச் சின்னஞ் சிறிய ஊர் மக்கள் அதிசயப் பார்வையுடன் சூழ்ந்து கொண்டனர். ஊரைப்பற்றிப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தபோது, கோயிற் குருக்களும் தர்மகர்த்தாக்கள் முதலியோரும் வந்து சேர்ந்து கொண்டனர். இது நண்பர் ராஜுவின் முன்னேற்பாடுகள் என்று தெரிந்தது. குருக்கள் எங்களைப் பார்த்து, “அர்த்தஜாமப் பூஜையின் போது சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, நாளைக் காலையில் கோயிலைச் சுற்றிப் பார்க்க வசதியாயிருக்கும். எதிர்பாராத விதமாக இன்று நீங்கள் வந்த சமயம் ஊருக்குள் மின்சார இணைப்பு தடைப் பட்டுவிட்டது” என்றார். ஆம், அன்று நாங்கள் போய்ச் சேர்ந்தபோது மின்விளக்குகள் எரியவில்லை. அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் தான் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
திருநாமநல்லூர் என்றுதான் ஊரவர்கள் வழங்குவார்கள். எழுத்திலும் அப்படித்தான் வெகுகாலமாக வழங்கி வந்தது. தமிழுக்காக உழைத்த திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் இந்த ஊரில் ஒருவித அபிமானங்கொண்டு, திருநாவலூர் என்ற பழைமையான திருப்பெயரையே பத்திரங்களிலும் தபால் முதலிய உத்தியோகத் துறைகளிலும் உபயோகிக்க வேண்டுமென்று பிரசாரம் • செய்தபின், இப்போது திருநாவலூர் என்ற பெயர் வழக்கில் வந்து விட்டது என்று விளக்கினார் மணியக்காரர் ராமகிருஷ்ணப்பிள்ளை. (விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்ப்பேட்டை செல்லும் பெரிய சாலையில் பரிக்கல் என்ற இடத்திலிருந்து கிழக்கே பண்ருட்டிக்குச் செல்லும் பாதையிலுள்ளது திருநாவலூர்.) சாதாரண விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் ராமகிருஷ்ணப்பிள்ளை சமயத் துறையிலும் பெரியபுராணக் கதைகளிலும் ஈடுபாடுள்ளவராகக் காணப்பட்டார். “ஒரு காலத்தில் இந்தக் கோயில் நல்ல நிலையில் தானிருந்தது. ஆனால் இப்போது ரொம்ப ஏழைமை நிலையை அடைந்து விட்டது. தருமபுரம் போன்ற மடங்கள் இதற்கு ஒன்றும் செய்வதாகக் காணவில்லை” என்றார் அவர்.
சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த ஊராச்சே. விசேஷமாக ஏதாவது உற்சவமுண்டா என்று கேட்டேன். மணியக்காரர் குரல் நெகிழ்ந்தது. “ஏதோ எங்களாலியன்றளவு நம்ம சுந்தரத்தைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறோம்” என்றார்.
எனக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது. “நம்ம சுந்தரம்” என்று அந்த ஊர் மக்கள் எத்தனை உரிமையோடு அழைக்கிறார்கள்! பல ஆண்டுகளுக்கு முன் நான் மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் என்ற நூல் எழுத யாத்திரை செய்தபோது அறந்தாங்கியிலிருந்து ஆவுடையார் கோயிலுக்கு என்னை ஏற்றிச் சென்ற வண்டிக்காரக் கிழவர் கருப்பையாபிள்ளையும் மாணிக்கவாசகரை “நம்ம மாணிக்கம்தானே!” என்று சொந்தம் கொண்டாடியது எனது ஞாபகத்துக்கு வந்தது.
ராமகிருஷ்ணப்பிள்ளை சொல்ல ஆரம்பித்தார்: ஆடிப் பூரத்தில் இங்குள்ள அம்பாளுக்கு விசேஷ உற்சவம் முடிந்தவுடன், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி ஆகிய நாட்களில் சுந்தரருக்கு உற்சவங் களுண்டு. அவர் வாழ்க்கை வரலாற்றோடு சம்பந்தமான பரவை கல்யாணம், சங்கிலிநாச்சியார் கல்யாணம், முதலைவாய்ப் பிள்ளையை மீட்டுக் கொடுத்த அற்புதம், சேரமான் பெருமாளோடு திருக்கைலாயம் சென்ற காட்சி- இவையெல்லாம் சிறப்பாக இந்த உற்சவங்களில் காண்பிக்கப்படும்.
“பல ஆண்டுகளுக்கு முன்னர் திருநாவலூரிலிருந்த சுந்தர மூர்த்தி விக்கிரகத்தை திருவாரூருக்குத் தமது காதலி பரவையாரைப் பார்க்கச் செல்வதாகப் பாவித்து, விசேஷ வைபவத்தோடு கொண்டு போய் வருவது வழக்கமாயிருந்தது. ஆனால் இதில் சில தகராறுகள் காரணமாக அந்த வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது” என்று சொன்னார் ராமகிருஷ்ணப்பிள்ளை.
என்ன தகராறு என்று கேட்டதற்கு அவர் சொன்னார்: “திருவாரூரிலுள்ளவர்கள் ஒருமுறை எங்கள் சுவாமியைத் திருப்பி அனுப்பாமல் நிறுத்திவைத்துவிட்டார்கள். எங்களூர்ச் செம்படவர்கள் இரவோடிரவாக அந்த விக்கிரகத்தை எடுத்து வந்து விட்டார்கள். சிவனுக்குக் காவல்காரர் என்ற பொருளில் இவர்களுக்கு “சிவன் படையர்” என்றுதான் பெயர். அது செம்படவர் என்று திரிந்து விட்டது. இன்றைக்கும் இவர்களுக்குப் பரிவட்டம் கட்டி, சுவாமி எழுந்தருளப் பண்ணும்போது தூக்கிச் செல்லும் கைங்கரியம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
அர்த்தஜாமப் பூஜையின்போது சுவாமி தரிசனம் செய்தோம். சுவாமியின் பெயர் பக்தஜனேஸ்வரர், நாவலேசுவரர். அம்பாள் பெயர் மனோன்மணி, சுந்தராம்பிகை. வெளிப் பிராகாரத்தில் அம்மனுக்குத் தனிக் கோயிலுண்டு. வரதராஜப்பெருமாளுக்கும் ஒரு தனிக் கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். உட்கோயிலுக்குப் பெயர் திருத்தொண்டீச்சுரம் என்று பழைய கல்வெட்டுகளில் காணப் படுகிறது. இங்குள்ள சுந்தரமூர்த்தி உற்சவ விக்கிரகம் பிரமாத அழகுள்ளது. அவரது இரு மனைவியரான பரவையும் சங்கிலியும் இருபக்கங்களிலும் ஒரே பீடத்தில் அமர்ந்திருக்கிற காட்சி ஒப்பற்றது. பரவையின் சரித்திரம் தெரிந்தவர்கள் அந்த உருவத்திலுள்ள திரிபங்க நிலையைக் கவனிக்காமலிருக்க முடியாது. சேரமான் பெருமாளுக்கும், பெற்றோர் சடையர் இசைஞானியருக்கும் சுந்தரரை வளர்த்த நரசிங்க முனையருக்கும் அழகான உற்சவ விக்கிரகங்கள் வைத்திருக்கிறார்கள். எங்களுக்காக நடந்த விசேஷ பூஜையின்போது நண்பர் ராஜு மிக உருக்கமாகவும் பண்ணோடும் சில தேவாரங்கள் பாடினார். அமைதியான அந்த வேளையில் தெய்வ சந்நிதியில் அவரது சுத்தமான சங்கீதம் மெய்ம்மறக்கச் செய்தது.
மறுநாட்காலை கோயில் அமைப்பைச் சுற்றிப் பார்த்தோம். சோழர் காலத்துக் கல்வெட்டுகள் பல இருக்கின்றன. தெற்குப் பிராகாரச் சுவரில் சண்டேசநாயனார் சரித்திரச் சிற்பம் காணப் படுகிறது. நவக்கிரகங்களுக்கு எதிரில் சூரிய விக்கிரகம் ஒன்று உள்ளது. கிரகங்களின் மத்தியிலுள்ள சூரிய விக்கிரகம் மற்றைய கோயில்களில் கிழக்கே பார்த்திருக்கும். ஆனால் இங்கே மேற்குப் பார்வையிலிருக்கிறது. கோயிலின் சந்நிதிக்கு எதிராக ஒரு சிறு கட்டிடம் சமீப காலத்தில் கட்டி வைத்துள்ளனர். ஒரு மடமாக உபயோகப்படுத்தப்படும் இக்கட்டிடம் இருக்கும் இடத்தில்தான் முன்னொரு காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரின் பெற்றோர் குடியிருந்தார்கள் என்று ஊரில் ஓர் ஐதிகம் வழங்குகிறது. சுந்தரர் வளர்ந்த நரசிங்கமுனையர் மாளிகை எங்கிருக்கலாம் என்ற பேச்சு வந்தபோது நண்பர் ராஜு சொன்னார்: “பக்கத்தில் இரண்டு மைல் தூரத்தில் சேந்தமங்கலம் என்ற ஓர் ஊர் இருக்கிறது. அங்கே பழைய ராஜாக்கள் ஆண்டதற்கு அடையாளமாக இடிந்து போன கோட்டை யொன்று காணப்படுகிறது. நரசிங்கமுனையர் என்ற அரசனும் ஒரு காலத்தில் இங்கிருந்துதான் அரசாட்சி செய்து வந்தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்” என்றார்.
இந்தச் செய்தி எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. சேந்தமங்கலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் எண்ணற்ற கோயில் திருப்பணிகள் செய்து அழியாப் புகழ் பெற்ற காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இங்கிருந்து ஆட்சி செலுத்தினான் என்று சரித்திரத்தில் படித்த ஞாபகம் வரவே அந்தச் சேந்தமங்கலத்தைப் பார்த்துவிட வேண்டுமென்று தீர்மானித்து விட்டோம்.
பரந்த நெல்வயல்களைத் தாண்டி, கச்சா ரோடு வழியாகச் சேந்தமங்கலம் கிராமத்தை யடைந்தோம். இப்போதும் அது கிராமம் தான். ஆனால் முன்னொரு காலத்தில் அது ராஜதானியாக இருந்த தென்பதற்கு அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன. பாழடைந்த பெருங்கோட்டை; அதைச் சுற்றிலும் கொத்தளம். அதற்கடுத்து அகழி. இந்தச் சின்னங்களெல்லாம் கோப்பெருஞ் சிங்கனும் அவனுக்கு முந்தியவர்களும் ஆட்சி செலுத்திய பெருநகரம் என்பதற்குச் சாட்சி சொல்லுகின்றன. கோட்டை வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால் சிதைவுற்ற கர்ப்பக்கிருகமும் அதனுள் ஒரு லிங்க மூர்த்தியும் இருக்கக் கண்டோம். அந்த நிலையிலும் ஒரு விளக்கேற்றிக் கர்ப்பூர தீபம் காண்பிக்க ஓர் அர்ச்சகர் இருக்கக் கண்டு மகிழ்ச்சி யடைந்தோம். நாங்கள் போய்ச் சேர்ந்த சமயத்தில் எங்கள் மோட்டார் வண்டியைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே சூழ்ந்துவிட்டது! வேடிக்கை பார்க்கச் சிறுவர்கள் மொய்த்துவிட்டனர். இந்த நெருக்கடியிலிருந்து எங்களைக் காப்பாற்ற வந்தார் ஒரு முதியவர். வெங்கடேசப் படையாச்சி என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். “பெரியவருக்கு இந்த ஊர்தானா?” என்று முகமனுக்காக ஒரு கேள்வியைப் போட்டு வைத்தேன். அவ்வளவுதான், கிழவர் ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து விட்டார். சேந்தமங்கலத்தின் பழம் பெருமை பற்றியும், மூன்றாவது ராஜராஜனைக் கோப்பெருஞ்சிங்கன் சிறை பிடித்து வைத்தது பற்றியும், வீரநரசிம்மன் உதவிக்கு வந்து ராஜராஜனை விடுவித்தது பற்றியும் கதைகதையாக அந்தக் கிராமவாசி சொன்ன விவரங்களைக் கேட்ட நாங்கள் ஆச்சரியப் பட்டோம். புராதன சரித்திரத்திலும் புதைபொருளாராய்ச்சித் துறையிலும் அதிக ஈடுபாடுகொண்ட நண்பர் சிட்டி அந்தக் கிழவனின் சரித்திர அறிவைக் கண்டு திகைத்துப்போனார்.
விஜயாலயன் காலத்திலிருந்து நானூறு ஆண்டுகள் ஒல்காப் பெருமையுடன் ஓங்கியிருந்த சோழ சாம்ராஜ்யம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே நலியத் தொடங்கியது. சேந்தமங்கலத்தில் அப்போது பல்லவ பரம்பரையைச் சேர்ந்த காடவர் கோப்பெருஞ்சிங்கன் சோழரின் ராஜப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான். சோழ மன்னன் மூன்றாம் ராஜராஜன் அப்போது சுந்தரபாண்டியனிடம் தோல்வி யுற்று அடிபணிந்து கப்பம் கட்டி வந்தான். இதை அனுகூலப்படுத்திக் கொண்டு கோப்பெருஞ்சிங்கன் சுந்தரபாண்டியனின் நட்பைப் பெற்று, அவனுடன் உடன்பாடு செய்துகொண்டு, ராஜராஜனைப் புறக்கணித்து, தானே தனியரசன் என்று சேந்தமங்கலத்திலிருந்து ராஜ்யாதிகாரம் செய்தான். சோழர் வசமிருந்த தொண்டை மண்டலத்தின் பெரும்பகுதியும் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சிக்குட் பட்டது. இந்தச் சமயத்தில் சோழ மன்னன் புதிதாகக் கிடைத்த போசளரின் வலிமையை நம்பி, சுந்தரபாண்டியனுக்குக் கொடுக்க வேண்டிய கப்பத்தைக் கொடுக்காது உதாசீனம் செய்தான். பாண்டியன் போர் தொடுத்தான். ஈடுகொடுக்க முடியாத சோழன் வடக்கு நோக்கிப் போசள நரசிம்மனை அடையலாம் என்று ஓடிச் சென்ற போது வலியிழந்து கோப்பெருஞ்சிங்கன் கையில் அகப்பட்டுச் சேந்தமங்கலத்தில் சிறை வைக்கப்பட்டான். இதையறிந்த போசள மன்னன் வீரநரசிம்மன் தனது சேனைத் தலைவர் இருவரையனுப்பிக் கோப்பெருஞ்சிங்கன் மீது போர் தொடுக்க ஏவினான். ஆனால் ராஜராஜனே கோப்பெருஞ்சிங்கனோடு சமாதானம் பேசித் தன்னை விடுவித்துக் கொண்டான் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கதையெல்லாம் கத்யகர்ணாமிர்தம் என்ற ஒரு பழைய நூலில் காணப்படுகிறது. கடலூரையடுத்துள்ள திருவேந்திபுரக் கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டிலும் மேற்சொன்ன சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது.
கோப்பெருஞ்சிங்கன் அரசாண்ட இடம்தான் இப்போது சேந்தமங்கலத்தில் இடிந்து போன கோட்டை கொத்தளங்களாகக் காணப்படுகிறது. அவன் அளவிறந்த சிவபக்தன். சிதம்பரம், திருவண்ணாமலை, விருத்தாசலம் முதலிய கோயில்களில் அவன் முயற்சியில் நடந்துள்ள சிற்ப வேலைப்பாடுகள் கொஞ்ச நஞ்ச மல்ல. “சகலபுவனச் சக்கரவர்த்தி அவனியாளப் பிறந்தான்
கோப்பெருஞ்சிங்கதேவன்” என்ற பெயர் சிதம்பரம் கோயில் சுவர் ஒன்றிலுள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. கோப்பெருங் சிங்கன், இசை, நாட்டியம் முதலிய நுண்கலைகளிலும் வல்லவன் என்று சொல்லப்படுகிறது. சிதம்பரம் கிழக்குக் கோபுரவாயிலி லுள்ள நடன சிற்பங்களைச் செதுக்கி வைக்கச் செய்து, நமது புராதனமான பரத நாட்டியத்தின் தாண்டவ லக்ஷணங்களை அழிய விடாமல் காப்பாற்றி வைத்த பெருமை கோப்பெருஞ்சிங்கனைச் சாரும்.
சேந்தமங்கலத்தில் சிலநேரம் வெங்கடேசப் படையாச்சியுடனும் மற்றவர்களுடனும் பேசிக்கொண்டிருந்தபோது படையாச்சியின் கதைமெருகை மறந்து போகாமலிருக்க நாங்கள் டேப் ரிகார்ட் செய்து கொண்டோம். கிழவருக்கு ஒரே ஆனந்தம். பேச்சு சூடு பிடித்துப் பல உபகதைகளையும் தமது கற்பனையில் வந்த தொடர்கதை களையும் பிரவாகமாக அளந்து விட்டார். சாளுக்கிய அரசன் வீரநரசிம்மனை “நரசிம்ம பல்லவன்” என்று சொன்னார். “அவனியாளப் பிறந்தான்” என்ற கல்வெட்டு வாசகத்தை வெங்கடேசப் படையாச்சி தமது சொந்த வாசகத்தில் “நானே உலகாளப் பிறந்தவன்” என்று வியாக்கியானப்படுத்திக் கொண்டு கதை சொன்னதை நினைத்துப் பார்க்கும்போது அந்தக் கிராமப்புறக் கிழவரின் அனுபவ ஞானத்தை மெச்ச வேண்டியிருக்கிறது. இந்தச் சம்பாஷணையின் போது கிழவர் வேறு பல தகவல்களையும் சொன்னார். சேந்தமங்கலக் கோட்டையிலும் பக்கத்தில் புதையுண்டு கிடக்கும் கட்டிடங்களிலுமிருந்து கருங்கற்களை எடுத்து அவற்றை உடைத்து ஜல்லியாக்கி அரசாங்கத்துக்குத் தெரியாமல் பெரிய வியாபாரம் செய்யும் சிலரைப் பற்றி விவரித்தார். நாங்கள் கிழவரின் பேச்சை ரிகார்ட் செய்கிறோமென்பதை அந்த வழியே சைக்கிளில் வந்து கொண்டிருந்த கிராமத்து நாகரிக இளைஞன் ஒருவன் கவனித்ததும், இடையில் வந்து குறுக்கிட்டு, “தாத்தா, உனக்கேன் இந்த வம்பு? தெரியாத விஷயங்களைச் சொல்லி மாட்டிக் கொள்ளாதே” என்று சொல்லித் தடுத்தான். அது கிழவருக்கு ஆத்திரத்தை மூட்டியது. அவர் திருப்பிப் பேச, கூட நின்றவர்கள் ஆரவாரிக்க, ஒரு பிரளயமே ஆகிவிடும் போலிருந்தது. சைக்கிள் வாலிபன் ஓசைப்படாமல் நழுவி விட்டான். கிழவர் வெங்கடேசப் படையாச்சி ஒரு கலைக்களஞ்சியம். எத்தனையோ அருமையான தகவல்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்ற பின்னர் நாங்கள் சேந்த மங்கலத்திடமும் படையாச்சியிடமும் விடை பெற்றுக்கொண்டு மறுபடியும் திருநாவலூருக்குத் திரும்பினோம்.
திருநாவலூரில் பிறந்த சுந்தரர் நரசிங்கமுனையர் என்ற அரசனால் வளர்க்கப்பட்டார் என்று முன்பு கண்டோம். அவருக்கு மணப்பருவம் வந்தபோது பக்கத்திலே புத்தூரில் வசித்த சடங்கவி சிவாசாரியார் என்ற அந்தணரின் பெண்ணை முறைப்படி பேசி, திருமண ஓலை அனுப்பி, மணநாளையும் நிச்சயித்தார்கள். நரசிங்கமுனையரும் சுந்தரரின் பெற்றோரும் எல்லா ஏற்பாடு களையும் செய்து மாப்பிள்ளையைப் புத்தூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போனதும் நடந்த கதையைத்தான் முதல் அத்தியாயத்தில் கேட்டோம். கிழவேதியர் வந்து தடுத்த இடத்தைத் ‘தடுத்தாட்கொண்ட ஊர்’ என்று சொல்வர்கள். இப்போது கிராமத்த வர்கள் தடுத்தாவூர் என்று சொல்கிறார்கள். திருநாவலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூருக்குப் போகும் வழியிலுள்ள ஒரு குக்கிராமம் இது. லிங்கம் வைத்த ஒரு குட்டிக் கோயில் மாத்திர முள்ளது.
சுந்தரருக்குப் பெண் பேசிய ஊர் புத்தூர் என்பது. முன்பு இதற்கு மணம் வந்த புத்தூர் என்று பெயர் இருந்தது. அது திரிந்து மணம் தவிர்த்த புத்தூர் என்று மாறியது. இப்போது அந்தப் பகுதி மக்கள் ‘மணமந்தபுத்தூர்’ என்று வழங்குகிறார்கள். இது தடுத்தாவூருக்கு வடமேற்கே சிறிது தூரத்திலுள்ளது.
திருவெண்ணெய் நல்லூருக்கு வா, வழக்குப் பேசலாம் என்று கிழவேதியர் சுந்தரரையும் மற்றவர்களையும் அழைத்துச் சென்றாரல்லவா? அங்கே நடந்த மற்றொரு நாடகத்தைப் பார்க்க நாமும் திருவெண்ணெய்நல்லூருக்குப் போவோம்.

சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாதசுந்தரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாத சுந்தரம்”

Comments are closed.