சரண்யா ரவிக்குமார்/கலை

கண்ணன் அவள் கண் இமைகளை மெல்ல இழுத்தான். இமைகள் தலை முடியை விட மிகக் கருப்பாகவும், அலங்காரம் செய்து கொள்ளும் நகத்தை விட நீளமாகவும் இருந்தது. அவள் கண் விழி மேகத்தைப் போல் தூய்மையான வெள்ளை நிறத்திலும் , காண்போருக்கு அவள் மேல் நொடியில் காதல் வந்துவிடும் அளவிற்கு அழகிலும் இருந்தது.. அந்த அழகிய கண்களில் கண்ணீரின்றி ஒரு சோகம் மட்டும் காத்துக் கொண்டிருந்தது. அந்த கண்களுக்கு உயிர் கொடுக்க அவள் முகம், கண்ணம் மற்றும் இதழ்களைத் தனது விரல்களால் உரசினான், அவனை அறியாமல் ஒரு புன்னகை அவன் மனதில் ஏற்பட்டது. இவன் எவ்வளவு சீண்டியும், அந்த பெண் அசையக் கூட வில்லை. அவள் கண்களில் அவ்வளவு சோகம் ஆழ்ந்து இருந்தது.

எப்பொழுதும் போல் அவனின் கையொப்பத்தை வரைந்தான், தனிமையில் சோகத்துடன் சிந்தனை செய்யும் பெண்ணின் ஓவியத்தில்.

இது போல் பல ஓவியங்கள் குவிக்கப்பட்ட தனது அறைக்குச் சென்று இந்த பெண்ணின் ஓவியத்தையும் வைத்தான். அந்த அரை சில நாட்களிலே தான் நிரம்பி விடுவேன் என்பது போல் சொல்வதாக அவனுக்குத் தோன்றியது. தனது கூச்சத்தனமான சுபாவம், அவனை அந்த அறைக்குள் கட்டி போடுவதை நன்கு தெரிந்தவன் கண்ணன் . கனத்த மனதுடன் வெளியே வந்தான்.

ஒரு இருபது வயது வாலிபன் அவன் வீட்டிற்குள் வந்தான். “அண்ணா , என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றான்.

“வாடா ஷாம். ஒன்றும் இல்லடா. இப்பதான் ஒரு ஓவியத்தை வரைந்தேன் “ என்று சொல்லி , தான் வரைந்த பெண் ஓவியத்தைச் சுட்டிக் காட்டினான்.

“அய்யோ செமையா இருக்குனா. இத மட்டும் இன்ஸ்டாகிராம் , பேஸ்புக்கை போட்டிங்கனா, உங்களை எவளோ பேர் பாலோ பண்ணுவாங்க தெரியுமா “ என்றான் ஷாம்.

“விடுடா..அப்பறம் பாத்துக்கலாம்.” என்றான் கண்ணன். தனது கூச்ச சுபாவத்தை வெளிக்காட்ட முடியாமல்.

“இன்னும் எவ்ளோ நாள் இதையே சொல்லுவீங்க. எத்தனை பேர் அப்படியெல்லாம் பிரபலம் ஆகறாங்க தெரியுமா, ஏன் இதையே வியாபாரமா பண்றவங்களும் ஜாஸ்தி” என்றான் ஷாம்.

“அதெல்லாம் இருக்கட்டும். நீ வந்த விஷயத்தை சொல்லு “ என்றான் கண்ணன்.
ஷாம் சென்ற அரைமணி நேரத்தில், கண்ணனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நாட்டிய பெண் வரைய அவன் மனம் துள்ளியது.மனதில் நினைக்கும் உருவத்தை அப்படியே வரைவது தான் அவனின் கை வந்த கலை . கண்ணை மூடிவிட்டு ஒரு நிமிடம் நாட்டிய பெண்ணை தனது மனதில் வரைந்தான். ஒரு மணி நேரத்தில், கண்ணைத் திறந்தானா என்று தெரியவில்லை, ஆனால் அவன் முன் அழகிய சிலை போல் செதுக்கிய ஒரு ஓவியம் இருந்தது.

அழகிய பெண், அதே அழகிய கண்கள் ..இந்த கண்ணில் அமைதியான சிரிப்பு. அவள் உதட்டைப் பார்க்க வேண்டாம் அவன் வரைந்த பெண்ணின் கண்ணே அவளின் சந்தோஷத்தையும் , கதையும் சொல்லும். அந்த பெண்ணின் ஓவியத்தை வரைந்து முடித்த பின்னும் அவன், அந்த ஓவியத்தை பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஓவியத்திலிருந்த பெண் தன்னுடன் பேசுவது போல் அவனுக்கு ஒரு எண்ணம்.

அடுத்த நாள் , ஷாம் வீட்டிற்கு வந்தான். ஓவியத்தின் அழகைக் கண்டு மிக வியந்து , கண்ணன் மீது புகழ் பாடினான். கண்ணனையும் ஓவியத்தையும் கையோடு தனது ஆர்ட்ஸ் ஸ்கூலுக்கு அழைத்துச் சென்றான்.

ஆர்ட்ஸ் பள்ளியின் டைரக்டர் இந்த ஓவியத்தைக் கண்டு பிரமித்தார். அரை மணி நேரம் இருவரையும் காத்திருக்கச் சொன்னார். அந்த பள்ளியின் முதலாளியை வர வைப்பதாகக் கூறினார். ஷாமிற்கு எதுவும் புரியவில்லை, இந்த ஓவியத்தை வாங்க இந்த பள்ளியின் முதலாளி ஏன் வர வேண்டும் என்று.

ஒரு மணி நேரம் சென்றதால், இருவரும் மதிய உணவைப் பள்ளியில் முடித்தார்கள். ஷாம் அந்த கல்லூரி பற்றியும் , முதலாளி பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தான். அவருக்குக் கலையில் அதிக பிரியம் என்றும் , கலையின் காரணத்தினால் தனது மகளை இந்த பள்ளியிலேயே படிக்க வைத்தார் என்றும் சொன்னான். அவரின் மகள் அவனைப் போல் மிக அழகாக ஓவியம் வரைவார் என்றும் சொன்னார்.

இருவரையும் அழைத்தார்கள். அவர்கள் டைரக்டர் அறைக்கு ச் சென்றால் , அங்கே முதலாளியும், அவரது பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். கண்ணன் கூச்ச சுபாவம் , அந்த பெண்ணை கண் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் , அங்கே ஒரு பெண் இருந்ததால் யாரையுமே கண் நிமிர்ந்து பார்க்க வில்லை.

ஷாம் அங்கே நிற்கும் ஓவியத்தையும் , முதலாளி பெண்ணையும் பார்த்து “அண்ணா , நீ சூப்பர் அண்ணா . அங்க பாரு பாரு . என்று தன்னை மீறி சந்தோஷத்தில் துள்ளினான்”

“அங்கிருக்கும் அனைவரும் கண்ணன் முகத்தை உற்றுப் பார்த்தனர். அங்கே யாராலும் நம்ப முடியவில்லை அவர்கள் காணும் காட்சி உண்மையா , கனவா என்று.

கண்ணனின் முன் ஒரு ஐந்தடி உயர ஓவியம் இருந்தது. அவன் தினமும் கண்ணாடியில் பார்க்கும் அதே உருவம். அவனை அவனே தாழ்த்தி பேசும் அதே உருவம், ஒரு பெண்ணால் செதுக்கப் பட்ட அவனின் ஓவியம் அவன் கண் முன்னே அவனை மயக்கியது. அந்த கண்ணில் சந்தோஷமும் , பெருமிதமும் இருந்தது.

                                                                                               ( )