மாற்றி யோசி கதைகள்
ஆர்க்கே.

தீர்த்த யாத்திரையை காசியிலிருந்து துவக்கி இராமேஸ்வரம் வரை நடை பயணமாக போய்க் கொண்டிருந்தார் அந்த கடுந்தவரீச மகரிஷி. அவர் குணம் மட்டுமல்ல அவரின் நாமதேயமும் அதுதான்.
காசி யாத்திரையை இராமேஸ்வரத்தில் துவங்கி காசியில் திதி அளித்து கங்கா ஸ்நானம் முடித்து பிறகு மறுபடி காசியிலிருந்து கொண்டுவரும் கங்கையை சிவனுக்கு அபிஷேகம் செய்வித்து இராமேஸ்வர இராமநாத சுவாமி தரிசனம் செய்வதே ஐதீகம் என யார் சொல்வது அவரிடம். அவரோ பல காலம் இமய மலையில் பனிச் சிகரத்தில் அமர்ந்து கடுந்தவம் புரிந்து சிவனருளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஒரு கமண்டலம். ஒரு கைத்தண்டம். தியான நேரத்தில் அமர்ந்து கொள்ள ஒரு மான்தோல் ஆசனம். அவரின் மொத்த ஆஸ்தி விஸ்தீரணமும் அவ்வளவுதான். மற்றபடி அவர் கொஞ்சம் உக்கிர சீற்றக்காரர் என அவருக்கு சிற்றேவல் புரிந்த சில சிவனடியார்கள் பல சமயங்களில் சொல்லக்கேள்வி. ஆனால் அசாத்திய தவ வலிமை மிக்கவர் என்பதற்கு மறுபதில் மறுப்பு பதில் ஒன்றுகூட கிடையாது.
சித்தம்போக்கு சிவம் போக்கு போல எல்லா ஊர் வழியாகவும் கடந்து போனபடி இருந்தார் அவர். தங்கவும் உணவருந்தவும் சிரம பரிகாரம் செய்யவும் போகிற இடமெல்லாம் அன்ன சத்திரம், சாவடிகள். வணங்கி வரவேற்று உபசரித்து வழி அனுப்பி வைக்கும் சத்திர சாவடி பணியாளர்கள். பயணம் தடையில்லாமல் தொடர இது போதாதா?
ஒவ்வொரு ஊர்ச் சாமிகளையும் தரிசனம் செய்து பயணப்பட்டுக் கொண்டே இருந்தார் அந்த அருந்தவச்சாமி.
அடுத்த ஊருக்கு செல்கிற பாதையின் துவக்கத்தில் இந்த பஞ்சபுரி எனும் ஊரின் எல்லையில் மரத்தடியில் அவனைக் கண்டார். வறுமையும் பஞ்சமும் அவனிடம் ஒட்டி உறவாடி ஒன்றிக் கிடந்ததையும் கண்டார். அருகில் சென்று நிற்கையில் அவன் சிரமப்பட்டு எழுந்து தரை முழுவதும் தன் உடல்பட தொழுது அவரை வணங்கினான். வாழ்க்கை மிகக் கஷ்டமாயிருக்கிறது என அவன் முணுமுணுப்பது கேட்டது அவருக்கு.
எதிரே மர நிழலில் ஓடிக்கொண்டிருந்த முயலைப் பார்த்தார். அதை நோக்கி தன் வலது கை ஆட்காட்டி விரலை நீட்டினார். முயல் உடனே சொக்கத் தங்கமாக மாறியது.
எடுத்துக்கொள் உனக்குத்தான் என்பதுபோல இடக்கரத்தால் காட்டிவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் தன் பாதையில் போனார் மகரிஷி.
மூன்று மாதங்கள் கழித்து யாத்திரையின் திரும்பலில் அவர் வருகையில் ஞாபகமாக அந்த மரத்தடிக்கு வந்துபார்த்தபோது மறுபடியும் அதே நிலையில் அதே வறுமையின் பிடியில் சுருண்டுகிடந்தான் அவன். அவன் வணக்கத்தை ஏற்றுக் கொண்ட
கடுந்தவரீச மகரிஷி இம்முறை அங்கே மேய்ந்துகொண்டிருந்த குதிரையை நோக்கி தன் வலதுகர ஆட்காட்டி விரலை நீட்ட, தங்கக்குதிரை நின்றது அங்கே.
சலனமில்லாமல் அவனிடம் ஜாடை மட்டும் காட்டிவிட்டு நடை தொடர்ந்தார் மகரிஷி.
ஓராண்டு கடந்திருக்கலாம்.
ஒரு புஷ்கரத்தில் பங்குகொள்ள அந்த ஊர் வழியாக மறுபடி வர நேர்ந்தது அவருக்கு. அவன் கண் பார்வையிலேயே பட மாட்டான் வளமாகி வாழ்வில் மகிழ்வாயிருப்பான் என நம்பினார்.
ஒரு சாஷ்டாங்க நமஸ்காரத்திற்கு இதுவே தாராளம் என நினைத்தார்.
ஆனால் ஊர் எல்லையில் அதே இடத்தில் அதே பஞ்ச பாதிப்பில் அதே அவன்.
கொடுத்த தங்கத்தையெல்லாம் மதிப்பு தெரியாமல் குளத்தில் போட்டுவிட்டானா?
மகரிஷிக்கு உச்சந்தலையில் கோபச் சூரியன் தகித்தது.
அவனோ மறுபடி தாள் பணிந்து வணங்கினான். கிராதகன். என்ன ஒரு நடிப்பு. மகரிஷி நிதானித்தார்.
சற்று தூரத்தில் இருந்த பாறையை நோக்கி விரல் நீட்டினார். தங்கப்பாறை மினுமினுத்தது.
“ப்ச்” என முகச் சோகமானான் அந்த பஞ்சத்து அடிமை.
ஆற்றில் ஒரு யானை நீரருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தார். தன் விரலை நீட்டி வைக்க கரியநிற யானை மஞ்சள் தங்க யானையானது.
போதுமா என பெருமை பொங்க அவன் முகத்தைப்பார்த்தார் — தன் தவ வலிமையின் பலம் இது போன்ற வர அருளல்களால் குன்றிக்கொன்றே வருவதைப் பற்றி கவலைப்படாமல்.
என்ன மறுபடி ஒரு பனிச் சிகரத்தில் இன்னும் கொஞ்ச காலம் கூடுதலாக கடுந்தவம் இயற்றினால் போச்சு.
அவன் திருப்தியில்லாமல் முகத்தை தொங்கப் போட்டான் .
இம்முறை வார்த்தைகளில் வெடித்தார் அவர்.
” இன்னும் என்னதான்யா வேணும் உனக்கு?”
“சாமி! உங்க வலது கை சுட்டுவிரலைத் தாங்க சாமி!” என்றான் அவன் .
——-அன்புடன் ஆர்க்கே..!
