செல்விபிரகாஷ்/இன்னும் எத்தனையோ?வா காதல் செய்வோம்

கவிதையாய் இதயத்தில் தூரல்
மனதெல்லாம் சாரல்

பனித்துளியின் சிலிர்ப்புகளாய் சில சில்மிஷங்கள்

மோகச்சூரியனை விழுங்கி முத்தத்தில் ஒத்தடம் செய்யும் களிம்பாய் சில ஒத்திகைகள்.

ஓரப்பார்வையின் வரப்புகளில் கட்டப்படும் ஆத்மாவின் நங்கூரங்கள்

காதல் காட்டேரி வாய்பிளந்து விழித்திருக்க உறங்க மறந்து விழித்தபடி விழிகள்

யாருமில்லா தனியுலகம் அமைத்துக்
கொள்ளும் அதிசயம்

நினைவுகளை நெய்யாக்கி எரியவிட கனன்று வளரும் யாகம்

மெதுவானத் தீண்டலில் உலகையே உடைத்துப்போடும் உத்வேகம்

கிசுகிசுக்கும் மொழிகளில் இளைபாறும் இதயம்.

நிலாவை இழுத்து குடை பிடிக்கும் காதல் யாத்திரையில் மேகங்களாய் சில கனவுகளும்

இரு இதயம் பிழிந்து இன்பத்தேன் கலந்து மோகச்சூரணத்தில் குழைத்து செய்யப்பட்ட ஔடதம்

விழிகளை வாசலாக்கி இதயத்தை வீடாக்கி வித்தை காட்டும்விந்தை

இன்னும் என்னென்னதான் காதலோ?

கவிதை காத்துக்கிடக்க பட்டியலை நிறுத்தி “வா காதல் செய்வோம்”

   🌹