சுகன்யா சம்பத்குமார்/வலி மிகுந்த புன்னகை

காயத்ரி தன் நாட்டிய நிகழ்ச்சிக்கு தயார் ஆனாள் .அவள் நடனத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது . அவள் நாட்டியமும் அரங்கேறியது . என்ன ஒரு அழகான முகபாவம் ,அருமையான அபிநயம் , அவள் வசீகரிக்கும் அழகாலும் நடனத்தாலும் அனைவரையும் கட்டி போட்டிருந்தாள் . நாட்டிய நிகழ்ச்சி முடிந்தபின் காயத்ரியை கௌரவிக்க மேடைக்கு அழைத்தார் , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் . அவளுக்கு மாலை மரியாதையெல்லாம் செய்துவிட்டு , அவளை புகழ்ந்து பேசினார் ஒருங்கிணைபாளர் அனந்து .அப்பொழுது அவர் “காயத்ரி மிகவும் அருமையான நடனக்கலைஞர் , அவருக்கு அமைந்த குடும்பமும் அவர் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர் “ என்றார் . (உடனே அவளுக்கு சில விஷயங்கள் ஞாபகம் வந்தது , “காயத்ரி உன் கையால் தோசை சுட்டு கொடுத்தால் தான் அன்றிரவு எனக்கு பசி அடங்குகிறது என்று கூறும் மாமனார் , காயத்ரி உன் நாட்டிய நிகழ்ச்சிக்கு போகும் முன்னே , எங்களுக்கு சமையல் செய்துவிட்டு பாத்திரத்தையும் கழுவிவிட்டு உன் ஒப்பனையை செய்து கொள் என சொல்லும் மாமியார் , வீட்டு வேலைகளை முடித்து விட்டு உன் ஆசை நாட்டியத்திற்கு தயார் ஆகு “ எனக்கூறும் கணவன் , முதலில் பெண்களுக்கு முக்கியம் அவர்கள் குடும்பம் தான் , வீட்டில் உள்ள எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு சென்றால் தான் உனக்கு வெளியில் மதிப்பும் மரியாதையும் கிட்டும் என்று கூறும் அம்மா , தான் வீட்டிற்கு போய் தான் தன் 5 வயது மகளுக்கு உணவு ஊட்ட வேண்டும் என்ற கட்டாயம் அதுவரை யாரும் அக்குழந்தையை கண்டுகொள்ள கூட மாட்டார்கள் என்று , இதை எல்லாம் நினைத்த போது ) ஒருங்கிணைப்பாளரின் பாராட்டுக்கு அனைவரும் கை தட்டிய போது , படக்கென்று சுதாரித்தாள் . அவளையும் மீறி அவள் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் , மனதிற்குள் மற்றுமோர் எண்ணம் “அனைவரும் வீட்டையும் பார்த்துக்கொண்டு நடனத்தையும் மேற்கொள்கிறோம் என்றால் நம்புவார்களா ? ஏன் ஒரு வேலைக்காரி வைத்துக்கொள்ளலாமே என்றல்லவா கூறுவார்கள் , ஆனால் எனக்கு மட்டுமே தெரியும் , என் வீட்டில் என் ஆசையான நடனத்தை நான் தொடர வேண்டும் என்றால் , வீட்டில் வேலைக்காரியாகவும் வெளியில் நாட்டிய நாயகியாகவும் விளங்கவே தனக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று . யாருக்கும் தெரியாமல் கண்ணை துடைத்துக்கொண்டு வீடு திரும்பினாள் , கையில் பதக்கத்துடனும் , சான்றிதழுடனும் நுழைய அவள் வீட்டாரோ , வீட்டின் உள்ளே நுழையும் போதே சமையலுக்கான காய் கறிகளை மேசை மேல் எடுத்து வைத்திருந்தனர் , அருகில் தொடப்பக்கட்டை , தோய்க்க வேண்டிய துணி ஒரு புறம் தேய்க்க வேண்டிய பாத்திரம் ஒரு புறம் என்று அவள் வேலைகளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். தன் ஒப்பனையை களைத்து வேறு உடை மாற்றிகொன்டு , காய் கறிகளை நறுக்க ஆரம்பித்தாள் . அப்பொழுது அவள் ஒருங்கிணைப்பாளர் கூறிய இந்த வாக்கியத்தை நினைத்து ஒரு வலி நிறைந்த புண்னகையை பூத்தாள் அவருக்கு அமைந்த குடும்பம் அவர் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர் ……