சிவா/இதான் மிச்சம்

“வந்தவுடனே போய்டலாம்டா, ஒரு சின்னவேலைதான். சும்மா அரைமணி கூட ஆவாது” வாசலில் நின்று போனில் கெஞ்சிக்கொண்டிருந்தார் ரங்கசாமி.
அவர் குழைந்து குழைந்து பேசுவதையே கோபமாகவும் வருத்தமாகவும் பார்த்துக்கொண்டிருந்தார் கமலா.
தோல்விக்களை முகத்தில் படர உள்ளே வந்தவர், இடுப்பில் கைவைத்து முறைத்துக்கொண்டிருந்த கமலாவை பார்த்தவுடன், முகத்தில் படர விட்ட போலிப்புகையின் இளிப்பை எளிதாக கண்டுபிடித்துவிட்டார் கமலா.
“என்ன சொன்னான் உங்க அருமை புத்திரன்?”
“வந்து… அவனுக்கு வேலை அதிகமா இருக்காம் கமலா. அதான் வரமுடியலையாம். யாராவது ஆள் பாத்து அனுப்பறேன் சொன்னான்”
“எது? இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை வேலையாமா?”
” மீட்டிங் சொன்னான்”
” காலைல ஆறுமணிக்கேவா மீட்டிங்?”
” அதா… அதுதான் இப்போ செல்போன்ல யே மீட்டிங் போடறாங்க ல்ல”
“ஓ… அப்போ நிஜமாதான் மீட்டிங்கா”
“நீயென்ன, இப்படிலாம் கேட்கற. பொய்யா சொல்றேன்”
“வயசான காலத்தில செவனேன்னு இருக்காம என்னாபா காலைலயே உசிர வாங்கற…நொய் நொய்னு பேசாம போனை வை…தூங்கணும்” என கொஞ்சம் கட்டைக் குரலாய் கமலா சொல்ல திடுக்கிட்டு நிமிர்ந்தார் ரங்கசாமி.
புருவம் உயர்த்தி “இதானே சொன்னான்? வார்த்தை மாறாம?” என்று கமலா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் உள்ளறை சென்று அன்றைய பேப்பரை புரட்ட ஆரம்பித்தார் ரங்கசாமி.
இவர்களின் ஒரே மகன் செந்தில். கல்யாணம் ஆகி மிக தாமதமாக பிறந்த செல்ல மகன். தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடி வளர்த்தனர். கமலா மட்டும் கொஞ்சம் கண்டிப்பாக இருப்பார். மகனிடம் அதிர்ந்துகூட பேசமாட்டார்ரங்கசாமி.
அவனும் மிக பாசக்காரனாகதான் இருந்தான். எல்லாம் அவனது கல்யாணம் வரை.
இருந்த நகை பணம் சேமிப்பு எல்லாம் சேர்த்து கல்யாணம் செய்துவைத்தார் ரங்கசாமி . ஒரே மாதத்தில் இடம் பற்றவில்லையென குருவி பக்கத்து தெருவுக்கு தனிக்கூடு போய்விட்டது. இத்தனைக்கும் மருமகள் கவிதா நல்ல ஒல்லி.
போனதும் இல்லாமல் இவர்களிடம் ஏதோ ஜென்மபகை போல விலகியே இருந்த அவர்கள், கவிதா வீட்டுடன் ஒட்டி உறவால் அதிகம் செய்துகொண்டார்கள். அதிலிருந்தே கமலா எண்ணி எண்ணி தான் பேசுவார். அதிகம் பாசம் காட்டிக்கொள்ளமாட்டார். ரங்கசாமி தான் “
நல்லாருந்தா போதும்” என போய் போய் மொக்குபட்டு வருவார்.
“தம்பி… பாத்து வெட்டு. கை பத்திரம்”
என்று கமலா அந்த பக்கத்து வீட்டு தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தார். ரங்கசாமியின் தோல்வியை அடுத்து பக்கத்து வீட்டு சாந்தியின் மகனை உதவ கேட்டு கூட்டி வந்திருந்தார் கமலா.
நல்ல கனமான வாழைத்தார் அது. வீட்டை ஒட்டி இருந்த சிறு இடத்தில் கொய்யா, முருங்கை, மாதுளை அதோடு சில பூச்செடிகள் என வளர்த்து வந்தனர்.
ஆசைக்கு ஒன்றிரண்டு பறிப்பார்கள். சிலநேரம் பக்கத்து காய்கடைக்கு கமலா கொடுத்து பதிலுக்கு காய்கறி யென வாங்குவார். மத்ததெல்லாம் தெருக்காரர்கள் எடுத்துக்கொள்ளவிட்டுவிடுவார்கள்.
எங்கிருந்தோ வந்து எப்படியோ முளைத்த வாழை இவ்வளவு பெரிய தார் போடும் என எதிர்பார்க்கவேயில்லை அவர்கள்.
போகும்போதும் வரும்போதும் பார்த்த காய்கடைக்காரர் நேற்று கமலாவிடம் சொன்னார்.
“நல்ல மொந்தம் தார்ம்மா. காய் பெருவெட்டா இருக்கு. அப்படியே குடுத்திடுங்க. முன்னூறு தரேன். அமாவாசை வேற வருது. ஒரு அம்பது ரூபா எனக்கும் லாபம் கிடைக்கும். நாளைக்கே வெட்டி குடுத்துடுங்க”
அதற்காகத்தான் மகனிடம் உதவி கேட்டு உம்மென்று ஆகியிருந்தார் ரங்கசாமி.
“நாளைக்கு நீயே கேட்டாலும் ஒரு காய் பத்து ரூபாய் சொல்வான். எப்படியும் அறுபது எழுபது காய் இருக்கும். முன்னூறு க்கு வாங்கி எழுநூறு க்கு விற்பான். பேசறது பாரு காந்தி பேரன் போல” என்றார் சாந்தி.
மகன் வெட்டுவதை வேடிக்கை பார்க்க வந்து கமலாவுடன் பேச்சு குடுத்தார்.
“நமக்கு என்னபா. அவன் வியாபாரி. அவன் தர்மம் அவனுக்கு”
மரம் நல்ல உயரம். வீட்டு சுவரில் ஏறி, ஓடுகளில் கால் வைக்காமல் பார்டரில் கால்பதித்து கவனமாக ஏறியிருந்தான் அந்த தம்பி.
ஒரு கயிறு கொண்டு அந்த தாரை கட்டி வீட்டு சுவரை ஒட்டி இருந்த கம்பியில் மொளுக்கு போட்டான். வெட்டிய வேகத்தில் தார் கீழே விழாமல் இருக்க.
சில வெட்டுக்களிலேயே தார் தனியானது. வாழை எப்போதும் மென்மைதான். அதொரு ரங்கசாமி போல.
வெட்டிய பின் தொங்கிய தாரை மெதுவாக கயிறு பிடித்து இறக்குவது தான் பெரும்பாடாக இருந்தது. சில உதிரிகள் மட்டும் சுவரில் பட்டு சிதறின.
இறக்கி வைத்துவிட்டு மெல்லிய புன்னகையுடன் நன்றி கூட எதிர்பாராமல் கிளம்பினான் சாந்தி மகன்.
ஒருவழியாக இறக்கிய தாரை ஆசையாய் தடவிபார்த்தார் கமலா.
“கமலா… நல்ல காய்பா. பஜ்ஜி போட்டா கூட அவ்ளோ பெரிசா போடலாம். இங்கேயே எனக்கு ஒரு சீப்பு கட்பண்ணி
தாயேன். கடைக்காரன் ஓவரா சொல்லுவான்” என ஆசையாக செல்விகேட்க,
“அட லூசு. ஒண்ணு என்னா ரெண்டு கூட எடுத்துக்கோ…ஒரு பிளேட் பஜ்ஜி எனக்கு…” என்று அவர்கள் சிரித்தபடியே பேசிக்கொண்டிருக்க,
சட்டென்று சட்டை கூட போடாமல் வாசலுக்கு வந்த ரங்கசாமி, அந்த தாரை எடுத்து சைக்கிள் கேரியரில் வைத்து தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
“ஏங்க ….என்ன பண்றீங்க” என்ற கமலாவுக்கு
“முதல்ல செந்தில் வீட்டுக்கு. அங்க மீதி தந்தா நமக்கு” என்ற குரல்தான் பதிலாக கிடைத்தது.
” இந்த மனுஷன் பண்ற வேலையை பாத்தியா” என்று கமலா சாந்தியிடம் சொல்ல,
கீழே கிடந்த உதிரி காய்கள் நான்கை எடுத்துவந்த சாந்தி இரண்டை கமலா கையில் திணித்து
“நமக்கு இதான்க்கா மிச்சம்” என்றார்.

2 Comments on “சிவா/இதான் மிச்சம்”

Comments are closed.