கௌரிமா வாழ்க்கை வரலாறு/தனசேகரன் முத்தையா

கல்கத்தாவில் ஒருநாள் காலையில் கௌரிமா மாணவிகள் சிலரை அழைத்துக் கொண்டு கங்கைக்குக் குளிக்கச் சென்றார். அங்கே சென்றபோது நதியோட்டத்தில் சிறுமி ஒருத்தி அடித்துச் செல்லப்படுவதைக் கண்டார். கரையில் நின்றுகொண்டிருந்தவர்கள் புலம்பினார்களே தவிர. யாரும் அவளைக் காப்பாற்ற முன்வரவில்லை. இதைக் கண்ட கெளரிமா அவர்களைக் கோபித்துக் கொண்டதுடன் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு, ‘ஜெய் காளி!” என்றபடியே நதிக்குள் குதித்தார். ஆனால் கௌரிமாவிற்கு நீந்தத் தெரியாது. எனவே மாணவிகள் கூச்சல் போடத் தொடங்கினர். இதற்கிடையில் அங்கே நின்றுகொண்டிருந்த இருவர் தண்ணீருக்குள் குதித்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றி விட்டனர். அதிர்ஷ்டவசமாக கௌரிமா ஆழமான பகுதிக்குள் போய்விடும் முன்பே ஒருவழியாகக் கரையேறி விட்டார்.

கௌரிமாவின் நடவடிக்கைகள் சில சமயங்களில் முரட்டுத்தனமாகத் தோன்றினாலும் அவர் அன்பும் கனிவும் கொண்டவர். ஒருமுறை பணக்காரக் குடிகாரர் ஒருவர் அவரை வணங்கச் சென்றார். கெளரிமா அதை மறுத்து, “குடிகாரர்கள் என் காலைத் தொட்டு வணங்க அனுமதிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டார்.இதனால் அவமானப் பட்ட அந்த மனிதர், “நீங்களோ அனைவருக்கும் தாய். எனவே ஒரு குடிகாரனுக்கும் தாயாக இருக்க ஏன் மறுக்கிறீர்கள்?” என்று மன்றாடினார். அவரது பேச்சால் மனம் இளகிய கெளரிமா, “சரி, நீங்கள் குடிப்பதை விட்டுவிடுவதானால் நான் உங்களுக்குத் தாயாக இருப்பேன்” என்றார். “அப்படி என்றால் என்னை ஆசீர்வதியுங்கள் தாயே” என்று கூறிய அந்தக் குடிகாரர் கௌரிமாவின் கால்களில் விழுந்து வணங்கினார். அதன்பிறகு அவர் குடிப்பதை நிறுத்தி
விட்டார். அவர் தமது வாழ்க்கை முறையை நல்வழிக்கு மாற்றிக் கொண்டதுடன் பக்தராகவும் மாறிவிட்டார்.

ஆசிரமத்தையும் பள்ளியையும் ஆரம்பித்த பிறகும் கௌரிமா சுற்றுப் பயணம் செய்வதை நிறுத்தவில்லை. அத்தகைய பயணங்களின்போது பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து எத்தனையோ அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டார். அவர் அலகாபாத்தில் உள்ள திரிவேணியில் தவம் செய்துகொண்டிருந்தபோது, ஒருநாள் நிறைய நகை களை அணிந்துகொண்டு அழகான பெண்மணி ஒருத்தி அவரிடம் வந்து அழ ஆரம்பித்தார்.

“ஏன் அழுகிறாய்?” என்றார் கெளரிமா.

”எனக்கு ஏதாவது வழியிருக்கிறதா அம்மா?”

“என்ன நடந்தது? ஏன் இவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளாய்?”

அந்தப் பெண் தனது நெறி தவறிய வாழ்க்கையைச் சொல்லி ஆறுதல் தேட முயன்றார். மன அமைதியை வேண்டிதான் அவரிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.

கெளரிமா அவரிடம் பின்வருமாறு கூறினார்: “அமைதியைத் தேடிச் செல்லும் பாதை மிகவும் கடினமானது. உலக இன்பங்களை நுகர வேண்டும் என்ற ஆசையைத் துறக்காமல் அந்தப் பாதையில் பயணம் செய்ய முடியாது.உண்மையிலேயே உனக்கு அமைதியும் ஆனந்தமும்
வேண்டுமானால் இறைவனைக் கூப்பிடு. பின்னால் திரும்பிப் பார்க்காதே. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். அவற்றை மறந்துவிடு.”

கௌரிமாவின் உபதேசம் பெற்ற அந்தப் பெண்மணி தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் யமுனையில் தூக்கி எறிந்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் அவர் தனது நீண்ட தலைமுடியையும் வெட்டிவிட்டுச் சாதாரண உடை உடுத்தித் தவம் செய்வதற்காக ரிஷிகேஷ் சென்றுவிட்டார். பல வருடங்கள் கழித்து கௌரிமா அவரைச் சந்தித்தபோது
அவரது வாழ்வில் ஏற்பட்டிருந்த அற்புதமான மாற்றத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.

புத்தகம் :கடவுளுடன் வாழ்ந்தவர்கள் 2

பக்கம் :332,333,334

One Comment on “கௌரிமா வாழ்க்கை வரலாறு/தனசேகரன் முத்தையா”

  1. மிக அருமையாக உள்ளது.
    சமூகத்தை சீர் செய்ய சில தெய்வ சக்தி வாய்ந்தவர்களால் தான் முடியும்.
    கௌரி மா அப்படிப்பட்டவர்.
    தாய்மை புனிதமானது.

Comments are closed.