தனிப்பாடல் திரட்டு/புலவர் அ.மாணிக்கம்

27. பனை மரத்துண்டு தளர்க்குமாறு பாடுதல்

 திங்கள் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்,

 மங்கைக்கு அறுகிட வந்துநின் றார்மணப் பந்தலிலே

சங்குஒக்க வெண்குருத்து ஈன்றுபச் சோலை சலசலத்து

நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து

பங்குக்கு மூன்று பழம்தர வேண்டும் பனந்துண்டமே.

முழுமதியைப் போன்ற குடையுடைய சேரமன்னனும் பாண்டிய மன்னனும் சோழமன்னனும் திருமணப் பந்தலிலே மணமகளிர்களாசிய அங்கவை சங்கவையர்க்கு அட்சதை இட்டு வாழ்த்துவதற்காக வந்துள்ளனர். ஆதலால் பனை மரத் துண்டே, நீ சங்கைப் போன்று வெண்மையான குருத்தை விட்டுச் சலசல என்று ஓசையிடும் பச்சை ஓலை தழைக்கப் பெற்று நுங்குகள் முதிர்ந்த கண்களையுடையவனவாய் அடிப் பகுதியில் கருநிறம் கொண்டு நுனியில் சிவப்பு நிறம் பெற்ற பழங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று தருவாயாக.

என் குறிப்பு

குறுநில மன்னன் பாரி. அவனுடைய புதல்விகள் அங்கவை, சங்கவை. அவர்களுடைய திருமணத்தை ஔவை எடுத்துச் செய்கிறார். பாரி இல்லாதத் தருணத்தில். ஔவையின் அழைப்புக்கிணங்க சேர, சோழ, பாண்டியர் மூவரும் திருமணத்திற்கு வருகை தந்து சிறப்பு செய்கிறார்கள். அவர்கள் வருகையைப் போற்றி ஔவையின் பாடல்.