சுகன்யா சம்பத்குமார்/பசுமையான நட்பு

முனுசாமி எப்பொழுதும் போல் அன்று விடியற்காலை எழுந்து வாழை தாரை அடுக்கி கொண்டிருந்தார் . அவர் மனைவி சின்னத்தாயி “என்னங்க , காலையிலேயே எழுந்து என்ன அடுக்கிகிட்டு இருக்கீங்க ? என்று கேட்டதற்கு ,”அது ஒன்னும் இல்ல டி , என் பால்ய சிநேகிதன் தங்கதுரை தன் மகளுக்கு அடுத்த ஊரில் நாளை திருமணம் வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன் , அதனால் இந்த வாழைத்தாரில் இருந்து நல்லதாக ஒன்றை கொடுத்துவிட்டு அவனை பார்த்துவிட்டு வர வேண்டும் என்று ஆசையாக உள்ளது “ என்றார் . அவர் மனைவி “உங்களுக்கு நம் நிலைமை கொஞ்சமாவது புரிகிறதா , நாமே அஞ்சுக்கும் பத்துக்கும் திண்டாடிக் கொண்டிருக்கிறோம் , இந்த நிலைமையில் அவரை சென்று பார்ப்பதே கடினம் , அவர் செல்வத்திலும் சரி செல்வாக்கிலும் சரி உச்சத்தில் இருக்கிறார் .அவர் உங்களை முதலில் அவர் வீட்டு கல்யாணத்திற்கு கூப்பிடவே இல்லை ,உங்கள் பரிசையும் அவர் விரும்ப போவதில்லை .உங்களை உதாசீனம் செய்து தான் வெளியில் துரத்தப்போகிறார் . உங்களுக்கு அங்கே போட்டுகொண்டு போக நல்ல சட்டை கூட இல்லை , “ என்று புலம்பிவிட்டு வெளியில் சென்றாள் . இதையெல்லாம் கேட்டுவிட்டு மிகுந்த வருத்தத்துடனும் கண்ணீரோடும் உள்ளே சென்றார் முனுசாமி. அவருக்குள் ஆயிரம் குழப்பம் .சிறு வயதில் தன்னுடன் படித்த உயிர் நண்பன் தங்கதுரை , அவனும் விவசாயி தான் , ஆனால் சம்பாதித்த பணத்தை தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் சேர்க்க தெரிந்தவன் , தன்னை போல்’அவன் பணத்தை விரயம் செய்யாததால் , அவன் இன்று நல்ல நிலைமையில் உள்ளான் . அவன் பல முறை அறிவுறுத்தியும் , நாம் அவன் சொல் பேச்சு கேளாமல் , இப்படி வாழ்க்கையை கோட்டை விட்டோமே என்று மிகவும் வேதனைப்பட்டார் .சுமார் 10 வருடத்திற்கு முன்பு தங்கதுரை முனுசாமி வீட்டிற்கு வந்து குறைந்த விலையில் ஒரு நிலம் வந்துள்ளதாகவும் அதை நீ வாங்கிக்கொண்டால் உன் பிற காலத்திற்கு உதவியாக இருக்கும் என்று அறிவுறுத்தியபோது , அன்று இருந்த பகட்டான வாழ்க்கையின் மோகத்தால் , அவனை அவமானப்படுத்தி அனுப்பினோம் , இன்று நாம் வாங்க மறுத்த அந்த நிலத்தை தான் வாங்கிக்கொண்டும் சிறிது சிறிதாக முன்னேறி இன்று நல்ல நிலைமையில் உள்ளான் .அன்று சென்ற அவன் இன்று வரை நம்மை வந்து சந்திக்கவே இல்லை . நாம் செய்த தவறால் ஒரு நல்ல நட்பை இழந்து தவிக்கிறோம் என்று வருத்தப்பட்டார் .இதையெல்லாம் நினைத்து கொண்டு மனவேதனையுடன் தூங்கிவிட்டார் .அடுத்த நாள் காலை மனசு கேட்காமல் தன்னிடம் இருந்த சட்டைகளுள் ஒரு நல்ல சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு இரண்டு மூன்று வாழைத்தார்களை தன் மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார் .அவர் மனைவி தெருமுனை வரை ஓடி வந்து அவரை திட்டிக்கொண்டிருந்தார் , அவர் , தன் மனைவியை திரும்பிப்பார்த்து , “இங்கே பார் , நாம் எதை செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப வரும் , அது நன்மையாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி .நான் அன்று அவனை அவமானப்படுத்தினேன் , இன்று எனக்கு அது திரும்ப கிடைத்தால் ,சந்தோஷமாக ஏற்பேன் . அவன் என் நண்பன் , எத்தனையோ முறை அவனை பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது ,முடியவில்லை , இன்று மன்னிப்பாவது கேட்டுவிட்டு வருகிறேன் .இதற்கு பிறகு அவன் என்னை சந்திக்கவில்லை என்றாலும் நான் கவலை படமாட்டேன் , நான் வருகிறேன் “ என்றான் . அவர் செல்லும் வழியில் நிறைய நினைவுகள் , ஒரு பக்கம் ஆருயிர் நண்பனை பல வருடம் கழித்து பார்க்க போகிறோம் ஆனால் மறுபக்கம் அவன் தன்னையும் தன் பரிசையும் ஏற்பானா என்ற அச்சம் , யோசித்துக்கொண்டே செல்கையில் மிதிவண்டியை ஒரு மரத்தின் மேல் மோதினார் .கீழே விழுந்ததில் ஒரே ஒரு வாழைத்தாரை தவிர மற்ற அனைத்தும் சகதியில் விழுந்தன . சட்டையும் கீழே விழுந்ததில் அழுக்காயிற்று , மற்றும் கிழிந்தும் விட்டது .கிழிந்த சட்டையை போட்டுகொண்டு அந்த திருமணத்திற்கு செல்ல கூச்சமாக இருந்தது . சரி பரவாயில்லை ,எத்தனையோ அவனமானப்பட்டுவிட்டோம் , இந்த சட்டையில்லாமல் போனால் தலையா முழுகிவிடப்போகிறது என்று நினைத்துக்கொண்டு , திருமண மண்டபத்தை அடைந்தார் .கொஞ்சம் கூச்சம் ,பயம் ,ஆசை என்று பலதரப்பட்ட உணர்வோடு உள்ளே நுழைந்தார் .அங்குள்ள அனைவரும் இவரின் தோற்றத்தை பார்த்து கேலி செய்து உள்ளே அனுமதிக்க மறுத்தனர் ,அவரை வெளியில் தள்ளிவிட்டனர் . இதை புகைப்பட கருவி மூலம் பார்த்துவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்தார் தங்கதுரை , கீழே விழுந்த முனுசாமியை கண்ணீரோடு தூக்கினர் , கீழே தள்ளியவர்களை வெளுத்து காட்டினார் .”முனுசாமி எப்படி இருக்க , உன்னை நான் நினைக்காத நாளில்லை ,உன்னை எத்தனையோ இடங்களில் தேடிவிட்டேன் , உன்னை தான் என் மகள் கல்யாணத்திற்கு முதலில் அழைக்க வேண்டும் என்று நினைத்தேன் , ஆனால் உன்னை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை , இப்பொழுது நீ எங்கு இருக்கிறாய் “என்று தன் பாச மழையை பொழிந்து தள்ளிவிட்டார் . முனுசாமி கண்ணீரோடு “என்னை மன்னித்துவிடு தங்கம் , உன்னை அவமானப்படுத்தியதால் எனக்கு உன்னை பார்க்கவே கூச்சமாக இருந்தது , என்னை நானே உன் கண் பார்வையிலிருந்து மறைந்து வாழ்ந்தேன் .” என்றார் . இப்பொழுது என் அருமை நண்பனின் மகளின் கல்யாணத்திற்கு என்னால் முடிந்த சிறு பரிசு என்று தான் கொண்டு வந்த வாழைத்தாரை கொடுத்தார் .அதற்கு “முனுசாமி ,இதை விட சிறந்த பரிசு இருக்க முடியாது ,உனக்கு நினைவிருக்கிறதா ?நீ தான் என் மகளை பிறந்தவுடன் எனக்கு அடுத்து முதலில் கையில் வாங்கினாய் , இன்று அவள் திருமணத்திற்கு உன் கையால் சிறந்த பரிசு கொண்டு வந்திருக்கிறாய் , இது அவளது பாக்கியம் “ என்றார் .உடனே தன் தம்பியை அழைத்து முனுசாமிக்கு தன்னை போலவே ஒரு சட்டையை எடுத்துக்கொடுத்து அவரை பளிச்சென்று சபை முன் நிறுத்தி ,திருமணத்தை அரங்கேற்றினர் .திருமணம் நல்லபடியாக முடிந்தது . தங்கதுரை தன் கையாலேயே சாப்பாடு பரிமாறினார் ,பிறகு தாம்பூலத்தையும் கொடுத்தார் .இந்த பையை வீட்டிற்கு சென்று அண்ணியுடன் சேர்ந்து பிரித்துப்பார் என்று கூறினார் .எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன் கிளம்பினார் முனுசாமி . வீட்டிற்கு சென்றவுடன் நடந்த அனைத்தையும் மனைவியிடம் கூறினார் . இருவரும் சேர்ந்து அந்த பையை பிரித்தனர் .கண்ணீரில் அந்த பையே நனைத்து விட்டது .அந்த பைக்குள் ரூ.1,00,000 மும் , முனுசாமி மனைவிக்கு பட்டுபுடவையும் ,மற்றும் 10 வருடத்திற்கு முன்பு இவரை வாங்க சொல்லி அறிவுறுத்திய அதே நிலத்தின் பத்திரமும் ,இருந்தது .அவர்களுக்கு மேலும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது , அந்த பத்திரம் முனுசாமி பெயரில் தானமாக எழுதப்பட்டு அவருடைய ஒப்புதலுக்கான விண்ணப்பதிற்கு காத்திருந்தந்து , அந்த எண்ணம் தங்கதுரைக்கு இன்று வரவில்லை , 10 வருடம் முன்பே தன் பெயரில் வாங்கிய நிலத்தை ,என்றைக்கு முனுசாமியை நேரில் பார்க்கிறாரோ அன்று உடனடியாக தானப்பத்திரத்தை எழுதி கையோடு அவர் பெயருக்கு மாற்றம் செய்து தர வேண்டும் என்று காத்திருந்தார் . அதன் படியே இன்று திருமணத்திற்கு வந்த முனுசாமிக்கு தாம்பூல பையோடு இதை கொடுக்க வேண்டும் என்பதற்காக தன் தம்பியின் உதவியோடு உடனடியாக தான பாத்திரத்தை எழுதியுள்ளார்.இதை பார்த்த முனுசாமியின் மனைவி “என்னங்க இப்பொழுது என்ன செய்ய போறீங்க” என்று கேட்டதற்கு , முனுசாமி கண்ணீரோடு , ஒரு முறை அவன் பேச்சை தட்டியதால் நிறைய இழந்தேன் இன்றைக்கும் அந்த தவறை செய்ய மாட்டேன் ,அவனுடன் சென்று இந்த தானபத்திரத்தை நாளைக்கே பதிவு செய்துவிட்டு அவனுக்கு என் மனமார்ந்த நன்றியை கூறிவிட்டு வருகிறேன் “என்றார் .தன் நண்பனை ஒரு நிமிடம் கிருஷ்ணராகவும் தன்னை குசேலராகவும் நினைத்தார் முனுசாமி , தன் பசுமையான நட்பின் மேன்மையை நினைத்து பூரித்தார் ……..