என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி…!/ஆர்க்கே

தேக்கு முக்காலியிலேறி
பரண் துழாவுகையில்
அதன்
சிறு ஆட்ட நிலைக்கே
ஓடிவந்து
முட்டுக்கொடுப்பாய்..!

நடைப்பயிற்சி
நான் முடித்துவர
துடைத்துக்கொள்ள துவாலை
படிக்க பேப்பர்
குடிக்க காப்பி
அடுக்கிவரும் உன் கைகள்.

கூடவே நொடிப்பொழுதில்
கால் பெருவிரலால்
காலணி நிமிண்டி
செருப்புகளின் பின்புறக்கசடுகளை
சுங்கச் சோதனை செய்வாய்.

எனக்கெனவே துவங்கும்
உன் நாளின் சூரிய சந்திரர்கள்
உன் விழியிரண்டில் குடியேறி
துணைக்கோளாய்
என்னையே
சுற்றிச்சுற்றி வரும்
எப்போதும்…!

பின்கட்டு
வாசல் தோட்டம்
சமையலறை தலைவாசல்
இன்னபிற இடங்களில் நீ
புழங்கினாலும் உன்பெயரை
உச்சரித்த அடுத்தநொடி
“என்னன்னா..?” என
அருகிருப்பாய் அடுத்த நொடி…!

நெருக்க நிலைச் சமயங்களில்
உனக்கான என் செல்லப்பெயரை
சிற்றொலியாய் முணுமுணுத்தாலும்
சிலிர்ப்பு ஓட
இழைந்து கொள்வாய்..!

வியாதிகளின்
தீர்வு நோக்க
மருந்துக் குளிகைகள்
பிரியமான உணவுகளின்
முன்பின் பட்டியலிலானது
உன்னால்தானே…!

யௌவனத்தின் பிரவாகத்தில்
அன்றொரு நாள்
என் கரத்தை தயக்கமாய்
பிடித்த நீ
இப்போது
வயோதிகத்தின் உலர்ந்துவிட்ட
பட்டமரம்சுற்றிக் குளிர்வாய்
பசுமையாய்
துளிர்த்துப்
படர்ந்திருக்கிறாய் நிழற்கொடியாய்..!

வாழ்க்கைப் பிறந்தது
என் பிறப்பிலா..
அல்லது
என் வாழ்வில் வந்து
நீ இணைந்த அந்த நொடியிலா..
தெளிவறியா மூப்புநிலைக்
குழப்பத்தில் நான்…!

ஒரு நாள்
நெகிழ்ந்த தருணமொன்றில்
உனக்கேதும் செய்யவில்லையெனும்
குற்றநிலை முட்கள்
கானகமாய் குறுகுறுக்க
என்ன வரம் வேண்டும் கேள்
என்றேன்–
பெரிய கடவுள் போல..!

கண்ணில்
என் அன்றைய அவளாய்
இன்றும் மினுமினுத்தபடி
சொன்னாய்
“உங்களுக்கு அடுத்த நாள் போகணும்..
உங்களைப் பார்த்துக்கொள்ள
உங்களுக்கே முடியாது…
மற்றவரை எப்படி நம்புவேன் நான்?”

சட்டென வீசிய
என் வாழ்விருளின்
நடுநிசியிருட்டுக் காட்டில்
எப்படியுனை எடுத்து மறைந்தாய்..?

ஐயோ..!
என்னிடம்
சொல்லாமல் எதுவுமே
செய்ததேயில்லையே நீ-
உன் வரையில்..!

வார்த்தை தவறிவிட்டாய்
கண்ணம்மா..!
வாழ்க்கை துடிக்குதடி–
தரையிட்ட மீனாய்…!


…..!