சோ. சிவபாத சுந்தரம் /சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. விநோத வழக்கு

திருவெண்ணெய்நல்லூரிலே சொல்லி வைத்தாற் போல் சில பெரிய மனிதர்கள் கூடிப் பஞ்சாயத்து வைத்தார்கள். அவர்கள் முன்னிலையில் கிழவேதியர் தமது வழக்கை எடுத்துரைத்து, “முதியோர்களே! இந்தப் பையன் பெயர் ஆரூரன். இவன் பாட்டனார் பெயரும் ஆரூரன். அவன், தானும் தன் சந்ததியாரும் எனக்கு அடிமையென்று உறுதிப்பத்திரம் எழுதிக் கொடுத்திருந்தான். அந்த ஓலையைக் காட்டி இவனிடம் நீ எனக்கு அடிமையென்றவுடன், இவன் அநியாயமாக ஓலையைப் பறித்துக் கிழித்தெறிந்து விட்டான். இது முறையா என்று நீங்கள்தான் தீர்ப்புக் கூறவேண்டும்” என்று முறையிட்டார். இந்த வார்த்தைகளைக் கேட்ட முதியவர்கள் ஆச்சரிய மடைந்து, “அந்தணனுக்கு அந்தணன் அடிமையாவது நாங்கள் இதுவரை கேள்விப்படாத செய்தியாச்சே. நீர் சொல்வதில் ஏதாவது உண்மையுண்டா?” என்று கேட்டனர். வேதியர் உடனே, “நான் வீணாக உங்கள் முன்னால் பொய் வழக்கு ஏதும் கொண்டு வரவில்லை. இவன் பறித்துக் கிழித்த ஓலை இவன் பாட்டன், தானும் தன் சந்ததியும் எனக்கு அடிமையென்று எழுதித்தந்த அடிமைப் பத்திரம் என்பது உண்மை. அந்தப் பத்திரத்தைத்தான் இந்தப் பையன் கிழித்தெறிந்தான். இங்குள்ளவர்கள் எல்லாரும் பார்த்தார்கள், கேட்டுப் பாருங்கள்” என்றார். பஞ்சாயத்தாருக்குச் சந்தேகம் தோன்றியது. அவர்கள் பிரதிவாதியாகிய ஆரூரன் என்ற சுந்தரரைப் பார்த்து, “உமது பாட்டனார் தன்னையும் தன் சந்ததியையும் சேர்த்து அடிமை செய்வதற்கு இசைந்து எழுதிக் கொடுத்த ஓலை என்று இவர் சொல்கிறார். அதை நீர் அவசரப்பட்டுக் கிழித்து விட்டதால் அது உமக்குச் சாதகமாக முடியாது. நீர் என்ன சொல்ல விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அதற்குச் சுந்தரர், “நீங்களெல்லோரும் ஆகம சாஸ்திரங்களைக் கற்றறிந்தவர்கள். நான் ஆதி சைவ அந்தணன் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்க இந்தப் பிராமணர் தமக்கு நான் அடிமையென்று சாதித்தால் எப்படி நம்புவது? நடைமுறைக்கு மாறான ஒரு மாயைதான் இது. இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்?” என்றார்.
பஞ்சாயத்து முதியவர்கள் யோசித்துப் பார்த்தார்கள். வழக்கமில்லாத ஒரு வழக்கென்று அவர்கள் உணர்ந்த போதிலும், சுந்தரர் கிழவரிடமிருந்த ஒரு பத்திரத்தை அவசரப்பட்டுக் கிழித்தெறிந்து விட்டதால், இதில் ஏதோ விஷயமிருக்கிறது; ஆகையால் தீர விசாரித்து முடிவு சொல்ல வேண்டுமென்று எண்ணியவர்களாக, கிழவேதியரைப் பார்த்து, “நீர் இவர் உமக்கு அடிமையென்று சொல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த நாட்டு முறைப்படி ஒரு வழக்கை நிரூபிப்பதற்கு ஆட்சி, ஆவணம், காட்சியென்ற மூன்று வகையான சாட்சிகளில் ஒன்றாயினும் வேண்டும். ஆட்சியென்பது உலக வழக்கு. அப்படியொரு வழக்கம் இருப்பதாக நாம் அறிய மாட்டோமாகையால், அதைத் தவிர்த்து ஆவணமிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். ஆவணமென்பது எழுத்து மூலமான சாட்சி. அதுதான் உமது கட்சியென்று தெரிகிறது. அதை இந்தப் பிள்ளை கிழித்தெறிந்து விட்டான் என்று சொல்கிறீர். அப்படியானால் காட்சி என்ற மூன்றாவது சாட்சி தேவை. அதாவது, உமது பத்திரம் எழுதப்பட்ட சமயத்தில் நேரில் கண்டவர்கள் சாட்சி ஏதாவது உண்டா?” என்று கேட்டார்கள். கிழவேதியர் சாமானியர் அல்லர். பஞ்சாயத்துக்காரரைவிட அதிகம் தெரிந்த, அனுபவம் நிறைந்த மகா சமர்த்தர். அவர் சொன்னார், “நீங்கள் சொல்வது அத்தனையும் எனக்குத் தெரிந்த விஷயந்தான். உலக வழக்கில்லை என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். நேரில் கண்டவர்கள் தானும் இப்போது உயிரோடில்லை. நான் ஒருவன்தான் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எழுத்து மூலமான சாட்சி ஒன்றுதான் எனக்குண்டு. இந்தப் பிள்ளையாண்டான் கிழித்த ஓலை படியோலை. இப்படி ஏதாவது நடக்கும் என்று தெரிந்துதான் மூல ஓலையைக் காட்டாமல் நகல் ஓலையைக் காட்டினேன். மூல ஒலை என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அதுதான் எனக்கு முக்கிய சாட்சி” என்றார். இதைக் கேட்ட பஞ்சாயத்தார், “அப்படியானால் அதைக் காட்டும். அதன் உண்மையை நாங்கள் ஆராய்ந்து முடிவு சொல்கிறோம்” என்றனர். கிழவனார் சிறிது தயங்கினார். சுற்றும் முற்றும் பார்த்தார். மடிசஞ்சியை ஒருதரம் தடவிக்கொண்டு, சிறிது சந்தேகம் தொனிக்க, “இந்தப் பத்திரம்தான் எனக்கு ஆதாரம். இதையும் இவன் என் கையிலிருந்து பறித்துக் கிழித்துவிட்டால் என்ன செய்வது?” என்று ஒரு குட்டி நாடகம் ஆடினார். “அப்படி எதுவும் நடவாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று பஞ்சாயத்தார் உறுதி கொடுத்த பின், கிழவர் தமது மடிசஞ்சியிலிருந்து மற்றொரு ஓலைச் சுருளை எடுத்துக் கொடுத்தார். பஞ்சாயத்தாரின் கணக்கர் ஒருவர் அந்த ஓலையை வாங்கிப் பிரித்து அதிலிருந்த வாசகத்தைப் பின்வருமாறு யாவரும் கேட்கப் படித்துக் காண்பித்தார்:
“திருநாவலூரிலிருக்கின்ற ஆதிசைவனாகிய ஆரூரன் என்கின்ற நான், திருவெண்ணெய் நல்லூரிலிருக்கின்ற பித்தனுக்கு, நானும் என் சந்ததியாரும் வழிவழித் தொண்டு செய்வதற்கு உள்ளும் புறமும் ஒப்ப உடன்பட்டு எழுதிக் கொடுத்த அடிமைப் பத்திரம் இது.

  • இப்படிக்கு ஆரூரன்”
    இந்த வாசகத்தைப் படிக்கக் கேட்டவுடன் சபையிலுள்ள அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டனர். ஓலையில் ஆரூரன் கையெழுத்தும் சாட்சிகள் கையெழுத்தும் காணப்பட்டன. பஞ்சாயத்தார், மேலும் உறுதிப்படுத்துவதற்காக, அந்தப் பத்திரத்தை வாங்கிப் பார்த்து, அதிலிடப்பட்டிருந்த கையெழுத்து ஆரூரர் பாட்டனார் எழுத்துத்தானா என்று தீர்மானிக்குமாறு சுந்தரரை அழைத்தனர். உடனே கிழவேதியர், இந்தச் சிறு பிள்ளைக்கு அவன் பாட்டனார் கையெழுத்து எப்படித் தெரியவரும்? நமது ஊரின் ஆவணக்காப்பு நிலையத்திலேயுள்ள ஓலைகள் பலவற்றினுள் ஆரூரன் கையெழுத்திட்ட ஓலைகள் இருக்கும். அவற்றையெடுத்து ஒப்பிட்டுப் பாருங்கள்” என்று வழி சொல்லிக் கொடுத்தார். அவ்வாறே வரவழைத்துப் பார்த்ததில் இரு எழுத்துக்களும் பொருந்தி யிருந்தன! அது மாத்திரமல்ல, சாட்சிக்குக் கையெழுத்துப் போட்டவர் களின் எழுத்தும் பொருந்தியிருக்கக் கண்டார்கள். கிழவனார் முகத்தில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தது. ஓலையைத் திருப்பி வாங்கிப் பத்திரமாய் மடிசஞ்சியில் அடக்கி வைத்துக் கொண்டார். கூடியிருந்த பஞ்சாயத்தாரை, இப்பொழுது என்ன சொல்கிறீர்கள் என்ற பாவனையில் நிமிர்ந்து பார்த்தார். பஞ்சாயத்தார் தமது தீர்ப்பையளித்தார்கள்: “வேதியர் கட்சி உண்மையானதென்று நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆரூரர் என்ற சுந்தரர் இவருக்கு அடிமையே” என்று சொல்லிவிட்டு, சுந்தரரைப் பார்த்து, “நீர் வேறு ஏதாவது சொல்லவேண்டியுள்ளதா?” என்று கேட்டனர். சுந்தரர் சொல்லவோ செய்யவோ ஒன்றும் தோன்றாதவராய், “அப்படி
    யானால், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தீர்ப்பில் நிரூபிக்கப் பட்ட ஒப்பந்தப்படி நடக்கக் கடவேன்” என்றார். சபையார் கொஞ்சம் யோசித்து, இதில் தம்மையுமறியாமல் ஏதோ மர்மம் இருக்கிறதென்று உணர்ந்து, கிழவரைப் பார்த்து, “பெரியோரே! உமது கட்சியை நீர் நிரூபித்துவிட்டீர், சரி. ஆனால், உமது ஊர் திருவெண்ணெய் நல்லூர்தான் என்று சொன்னீரே. உம்மை நாங்கள் இதுவரை அறிந்திருக்கவில்லையே. உமது வீடு எங்கேயிருக்கிறது என்று தெரியலாமா?” என்று கேட்டார்கள். கிழவர் உடனே, “இதுவரை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருப்பது ஆச்சரியம்தான். வாருங்கள் காட்டுகிறேன்” என்று சொல்லி எல்லாரையும் அழைத்துக் கொண்டு, திருவெண்ணெய்நல்லூரிலுள்ள அருள்துறை என்ற ஆலயத்தினுள் நுழைந்தவர்தான், திரும்பி வரவில்லை!
    இந்த அதிசயத்தைக் கண்டவர்கள் திகைத்தனர். என்ன அற்புதம் என்று மெய்ம்மறந்தனர். உடனே அசரீரி ஒன்று கேட்டது: “ஆரூரா, நீ முன்னே எமக்குத் தொண்டனாயிருந்தாய். பெண்கள் மேல் நீ இச்சை வைத்ததினால் நம்முடைய ஆக்ஞையினால் பூமியிலே பிறந்தாய். இப்பொழுது துன்பத்தைத் தருகின்ற சம்சாரபந்தம் உன்னைத் தொடராதபடி நாமே வலிய வந்து உன்னைத் தடுத்தாட் கொண்டோம்” என்றது அந்த அசரீரி.
    சுந்தரர் மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் பொழிய, அருள்துறை மூலஸ்தானக் கடவுளை விழுந்து நமஸ்கரித்து, “அடியேனை ஆட்கொண்ட பெருமானே! உன் கருணைதான் என்னே” என்று தேம்பி அழுதார். அசரீரி மேலும் கேட்டது: “நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வாதாடினாய். ஆகையால் நீ வன்றொண்டன் என்ற பெயரைப் பெறுவாய். நீ நமக்கு அன்போடு செய்யத்தக்க அருச்சனை, இன்னிசைத் தமிழ்ப்பாடலேயாம். ஆதலால் பாடிக்கொண்டே வாழ்ந்து திரும்பி நம்மிடம் வரக்கடவாய்” என்றார் இறைவன். சுந்தரர் உளம் நெகிழ்ந்துருகி, “ஒன்றும் அறியாத சிறியேனுக்கு நல்லறிவைப் புகட்டி உய்விக்க வேண்டும். அடி யேன் தேவரீருடைய அநந்த குணங்களில் எதைத்தான் அறியவல்லேன். என்ன சொல்லிப் பாடுவேன்?” என்றார். உடனே இறைவன் பதிலளித்தார். “நீ என்னை நன்றாக அறிவாய் நம்பி. சற்று முன்தான் நீ என்னைப் ‘பித்தன்’ என்றழைத்தாய். ஆகையால், பித்தனென்றே சொல்லிப்பாடு” என்றார், பிச்சமூர்த்தியாகிய பரம்பொருள். சுந்தரர் உளம் குளிர்ந்தது. அவர் நாவில் தண்டமிழ்க் கவிதை கடல்போல் பெருகியது. மடை திறந்து திருவாய் பாடியது:

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூருட் டுறையுள்
அத்தா வுனக் காளா இனி அல்லேன் எனலாமே

கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கு இறைவனுடைய திருவிளையாடல்கள் எத்தனையோ நடக்கும். என்னென்ன காட்சிகளோ தோன்றும். ஆனால் அவன் அருள் எல்லார்க்கும் கிட்டுமா? சுந்தரர் அவனால் ஆட்கொள்ளப்பெற்றார். ஆளுடைய நம்பியாகி, அந்த இடத்திலிருந்தே எங்கெல்லாம் இறைவன் கோயிலுண்டோ அங்கெல்லாம் சென்று செந்தமிழ்ப் பாசுரங்கள் இன்னிசையுடன் பாடிப் பரம்பொருளுக்கு அர்ப்பணம் செய்யப் புறப்பட்டார்.
ஆரூரனைப் பார்த்து இறைவன் அசரீரியாக, “நீ முன்னே எனக்குத் தொண்டனாயிருந்தாய்” என்று சொன்னதில் ஒரு தனிக் கதையிருக்கிறது.
சுந்தரர் தமது முற்பிறவியில் ஆலாலசுந்தரர் என்ற பெயரோடு சிவனது அடியார்களில் ஒருவராயிருந்தார். ஒருநாள் அவர் பூப் பறிப்பதற்காக நந்தவனத்துக்குச் சென்றபோது அநிந்திதை கமலினி என்ற இரு பெண்களைக் கண்டு அவர்கள் மேல் ஆசை கொண்டார். அந்தத் தெய்வ மாதர்களும் ஆலாலசுந்தரரால் கவரப்பெற்றார்கள். இதையுணர்ந்த இறைவன் சுந்தரரை அழைத்து, “நீ இங்கே இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியதில்லை. பூமியிலே மானிடனாய்ப் பிறந்து அங்கேயே இவர்களோடு இன்பமனுவிப்பாய்” என்று சொல்லிவிட்டார். ஆலாலசுந்தரர் பரிந்து வேண்டிக்கொண்டு, “அடியேன் மனிதப் பிறப்பை யெடுத்து மயங்கும் சமயத்தில் தேவரீரே வந்து என்னைத் தடுத்து ஆட்கொண்டருளவேண்டும்” என்று பிரார்த்தித்தார். இறைவனும் அதற்கிணங்கி ஆசீர்வதித்தார் என்பதும், அநிந்திதை கமலினி என்பவர்களே சங்கிலியாகவும் பரவையாகவும் பூமியில் அவதரித்துச் சுந்தரர் வாழ்க்கையில் பங்கு கொண்டனர் என்பதும் புராண வரலாறு.*
திருநாவலூரிலிருந்து ஒரு சில மைல் தூரம் கிழக்கே, கடலூர்- திருக்கோவலூர் முக்கிய சாலையிலுள்ளது திருவெண்ணெய் நல்லூர். சைவத்துக்கும் தமிழுக்கும் பெருமை தேடித்தந்த ஊர் திருவெண்ணெய்நல்லூர். மகாகவி கம்பனுக்கு ஆதரவளித்த வெண்ணெயூர்ச் சடையன் என்ற சடையப்ப வள்ளல் வாழ்ந்த இடம் இது. உறையூர், சேய்ஞலூர் போன்று, சோழருக்கு முடிசூட்டும் தகுதி பெற்ற வேளாளப் பெருமக்கள் வாழ்ந்த பெரும்பதி. உமாதேவியார் வெண்ணெயினால் கோட்டை கட்டி அதனிடையே பஞ்சாக்கினியை வளர்த்துத் தவம் புரிந்த காரணத்தினால் வெண்ணெய்நல்லூர் என்ற பெயர் பெற்றதாக ஒரு கதை. பதின்மூன்றாம் நூற்றாண்டிலே சிவஞான போதம் என்ற சைவ சித்தாந்த சாத்திர நூலைச் செய்த மெய்கண்ட தேவர் என்ற மகான் இங்கிருந்துதான் பரஞ்சோதி முனிவரின் ஆசி பெற்று அந்த நூலைச் செய்தார். அவர் சமாதி யடைந்த இடத்திலே இப்போது ஒரு மடம் கட்டி வைத்துள்ளார்கள். கோயிலுக்குள்ளேயும் மெய்கண்டாருக்கு ஒரு தனிச் சந்நிதி அமைத்து வைத்துள்ளார்கள்.
திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்கு அருள்துறை என்று பெயர். சுந்தரர் பாடலில் அவர் “நல்லூர் அருட்டுறை” என்றே குறிப்பிடுகிறார். கோயிலின் சுவர்களில் காணப்படும் கல்வெட்டுக் களில் தடுத்தாட்கொண்ட தேவர், ஆளுடைய நம்பி, வழக்கு வென்ற திருவம்பலம், ஆவணங்காட்டியாண்டான் என்பன போன்ற சொற்கள் காணப்படுகின்றன. இவை சுந்தரருடைய வரலாற்றோடு சம்பந்தப்பட்ட பொருள் நிறைந்த சொற்கள். கர்ணபரம்பரையாக வழங்கி வந்த செய்திகளை, சோழர் காலத்துச் சிற்பிகள் கல்லிலே எழுதி வைத்துவிட்டனர். இங்குள்ள சுவாமியின் பெயர் தடுத்தாட் கொண்ட தேவர் அல்லது கிருபாபுரீசுரர். வேற்கண்ணிநாயகி அல்லது மங்களாம்பிகை என்பது அம்பாள் பெயர். பங்குனியில் பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். இதில் ஒன்று, ஐந்து, ஏழாவது நாட்களில் தடுத்தாட்கொண்ட உற்சவம் நடக்கும். இக்கோயிலில் அர்த்தஜாமக் கட்டளை என்ற ஒரு விசேஷமுண்டு. இவ்வூரிலிருந்த ஒரு தனவந்தருக்கு நிரந்தரமாகத் தூங்க முடியாத ஒரு வியாதி இருந்ததாகவும், இதற்கு அவர் கிருபாபுரீசரை வணங்கி மங்களாம்பிகைக்கு விசேஷ அலங்காரம் செய்து பள்ளியறை ஊஞ்சலில் வைத்து, கிருபாபுரீசருக்கும் அலங்காரம் செய்து பாலமுது படைத்து பள்ளியறை நடை சாத்தி, மறுநாள் காலை விக்கிரகங் களை எடுத்து உரிய இடங்களில் சேர்க்க, ஒரு கட்டளை ஏற்படுத்தினார் என்றும், தனவந்தருக்கிருந்த நோய் நீங்கியதாகவும் சொல்வார்கள்.
கோயில் பிராகாரத்தின் வடகிழக்கில் நூற்றுக்கால் மண்டபம் என்று ஒன்றிருக்கிறது. இதுவே ‘வழக்கு வென்ற திருவம்பலம்’ என்றும் சொல்லப்படுகிறது. இங்குதான் இறைவன் சுந்தரர் மீது
தொடுத்த வழக்கு விசாரிக்கப்பட்டதாக ஐதிகம். இங்குள்ள கல்வெட்டிலே இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சி இருபத் தொன்பதாம் ஆண்டில், “வழக்கு வென்ற அம்பலம் கல்மண்டப மாகக் கட்டுவதற்குச் சில குடிகளின் வீடுகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு வேறு இடம் தந்ததாகச்” செய்தி காணப்படுகிறது. கிழக்குக் கோபுர வாயிலையொட்டி சுந்தரமூர்த்திக்கு ஒரு தனிச் சந்நிதி இருக்கிறது. இறைவன் அவரைத் தடுத்தாட் கொண்ட காட்சி, கோயில் விமானத்தில் சுதையில் வடிக்கப் பெற்றுள்ளது.
சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளின் முன்னர் மாணிக்கவாசகர் சம்பந்தமாக யாத்திரை செய்தபோது நான் திருவெண்ணெய் நல்லூரைத் தரிசித்திருக்கிறேன். மீண்டும் இப்போது அங்கு போன போது கோயில் மிகவும் சீர்கெட்டுப் போயிருப்பதைப் பார்த்து வருந்தினேன். ஒழுங்கான பராமரிப்பில்லை. முள்ளும் புதரும் வளர்ந்து பிராகாரம் எல்லாம் ஒரே காடு. சோழர் காலத்துச் சிற்பச் செல்வங்களில் ஒன்றாகிய திருவெண்ணெய்நல்லூரை இப்போது யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை.
திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறையை வணங்கிய சுந்தரர் அங்கிருந்தபடியே ஸ்தல யாத்திரையில் புறப்பட்டார் என்று சேக்கிழார் சொல்கிறார். அவருக்குப் பேசப்பட்ட சடங்கவி சிவாசாரியார் பெண் வேறு மணம் செய்யாமலே காலம் கழித்து இறந்து போனார் என்று தெரிகிறது. சுந்தரரின் தந்தை சடையனாரும் தாயார் இசைஞானியாரும், ஒரு தவக் குழந்தையைப் பெற்ற காரணத்தால் நாயனார் பதவியைப் பெற்றனர். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் அவர் மறவாமல் இவ்விருவரையும் தமது பாசுரத்தின் இறுதியில் வைத்து, “என்னவனும் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி” என்று பாராட்டுகின்றார். ஆகையால் தொண்டர் அறுபத்து மூவரில் இவர்களும் சேர்க்கப் பட்டுள்ளனர். சுந்தரரை வளர்த்தெடுத்த நரசிங்க முனையருக்கும் இந்த அறுபத்து மூவரில் ஓரிடம் கொடுக்கப்பட்டு நாயனார் பதவி கிடைத்திருக்கிறது. சுந்தரர் இவரை, “மெய்யடியன் நரசிங்க முனையரையற்கடியேன்” என்று பணிகின்றார். அவருடைய சிவபக்தியைப் பற்றி சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் ஒரு கதை சொல்கிறார்.
நரசிங்க முனையரையர் என்பது அவரது இயற்பெயர். அவர் திருமுனைப்பாடி நாட்டின் குறுநில மன்னர். முனையரையர் என்பது முனை நாட்டுக்கு அரசன் என்று பொருள். இவர் பல சிவாலயங் களுக்குச் சென்று திருவாதிரை நாளில் விசேட பூசை செய்து, அடியார்களுக்கு நூறு பொன் கொடுத்து அனுப்புவது வழக்கம். ஒருநாள் அவர் இவ்வாறு பொன் கொடுத்து அனுப்பும்பொழுது, தீய ஒழுக்கமுள்ள ஒருவர் தேகம் முழுவதும் விபூதி யணிந்து கொண்டு வந்து அடியார் கூட்டத்தில் ஒருவராக நின்றார். அவரைத் தெரிந்த மற்றவர்களெல்லோரும் வெறுத்து ஒதுங்கி நிற்கவும், நரசிங்க முனையர் அவரை வரவேற்று உபசரித்து, நூறு பொன்னல்ல, இருநூறு பொன் கொடுத்து அனுப்பினார்! சீலமில்லாதவராயினும் விபூதி யணிந்த மகிமைக்கு அவர் மரியாதை செலுத்தினார் என்பது காண்பிக்கப்பட்டது. அதனால் நரசிங்க முனையரையர் சிவகதி பெற்ற நாயனார்களில் ஒருவராயினார்.

One Comment on “சோ. சிவபாத சுந்தரம் /சேக்கிழார் அடிச்சுவட்டில்”

Comments are closed.