சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ. சிவபாத சுந்தரம்

  1. தத்தா, நமர்!

திருவெண்ணெய்நல்லூரிலிருந்து புறப்பட்ட சுந்தரர் திருவதிகை என்ற தலத்தை நோக்கிக் கிழக்கே சென்றதாகக் கேள்விப்படுகிறோம். அவரைப் பின்பற்றிச் செல்வதற்கு முன்னால் மேற்கே பதினான்கு மைல் தூரத்திலுள்ள திருக்கோவலூர் என்ற தலத்தில் மெய்ப்பொருள் நாயனார் என்ற பெயருடையவர் ஆட்சி செய்தார் என்று நாம் சேக்கிழாரிடம் படித்திருப்பதால் அறுபத்து மூவரில் ஒருவராகிய அவரையும் தரிசித்துவிட்டுப் போகலாம் என்று வண்டியை அந்தத் திசையில் திருப்பச் சொன்னோம். எங்கள் யாத்திரையின் போது கார் ஓட்டி வந்த சாரதி ராதாகிருஷ்ணன் ஒரு பரம பக்தன். திருக்கோவலூரில் துறவு பூண்டிருந்த ஞானானந்தகிரி சுவாமி களிடத்தில் அளவிறந்த பத்தியுள்ள சீடன். நாங்கள் திருக்கோவலூர் போகிறோமென்றவுடன் அவர் உற்சாகத்தைச் சொல்லி முடியாது. ஆனந்த பரவசத்தோடு காரை ஓட்டினார்.
பெண்ணையாற்றின் தென்கரையிலிருக்கிறது திருக்கோவலூர். இது ஒரு காலத்தில் திருமுனைப்பாடி அல்லது மிலாட நாட்டுக்குத் தலைநகராயிருந்தது. முனையரையர் என்ற அரசர்கள் இங்கிருந்து ஆட்சி புரிந்தார்கள். சுந்தரமூர்த்தி நாயனாரை இளமைப் பருவத்தில் வளர்த்த நரசிங்க முனையரையரும் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவரே. இவர்களில் ஒருவர்தான் மெய்ப்பொருள் நாயனார். இவர் நிறைந்த சிவபக்தர். வேதாகமங்களிலே மிகுந்த பற்றுள்ளவராகையால் ஆகமஞானத்தில் சிறந்த கல்விமான்களுக்குச் சன்மானங் கொடுத்து ஆதரித்து வந்தார். இவரது ராஜ்யத்தைக் கைப்பற்றத் துணிந்த ஒரு பகையரசன், முத்தநாதன் என்பவன், தன் சேனையுடன் வந்து போரிட்டுத் தோற்றவன், தந்திரமாக மாறுவேடத்தில் வந்து அரசனைக் கொல்ல யத்தனித்த கதைதான் மெய்ப்பொருள் நாயனாரின் பெருமையை உணர்த்துகிறது.

மெய்ப்பொருளார் சிவனடியாரிடம் பற்றுள்ளவரென்றும், விபூதி தரித்தவர்களுக்கு மரியாதை செய்பவரென்றும் தெரிந்ததால், முத்தநாதன் ஒருநாள் உடல் முழுவதும் விபூதி பூசி முழு ஞானி போல் வேடம் தரித்துக்கொண்டு, அரசன் மாளிகைக்கு வந்தான். வெளி வாயில் காப்பவன் வணக்கம் செலுத்தி உள்ளே அனுப்பினான். அரசன் பள்ளியறைக்கு வந்தபோது அங்கு நின்ற அபிமான காவலாளியாகிய தத்தன் என்பவன், “அரசர் தூங்கிக் கொண்டிருக்கிறார். அன்றியும், அரசியாரும் பக்கத்திலிருக்கிறார்கள். இப்பொழுது உள்ளே எவரும் செல்ல முடியாது” என்றான். ஆனால் முத்தநாதன், “நான் அவசியம் அரசனுக்கு ஆகமோபதேசம் செய்ய வந்திருப்பதால் தடுக்காதே” என்று சொல்லிவிட்டுத் தானாகவே உள் நுழைந்தான். சந்நியாசி ஒருவர் உள்ளே வருவதைக் கண்ட அரசி அரசனைத் தட்டி எழுப்ப, மெய்ப்பொருளார் கண் விழித்து, வந்தவரை வணங்கி, “சுவாமி! தேவரீர் இங்கு எழுந்தருளக் காரண மென்னவோ?” என்று கேட்டார். சந்நியாசி, “நமது சமயத்திலே இறைவன் அருளிய ஆகமங்களில் இதுவரையிலும் காணப்படாத ஓர் ஆகமத்தை உமக்குப் போதிக்கும்படி கொண்டு வந்திருக்கிறேன்” என்றார். அரசன் மனமகிழ்ந்து அதனைக் கேட்க, “பெண்கள் இருக்குமிடத்தில் குரு உபதேசம் செல்லாது. ஆகையால் அரசியார் இங்கிருக்கும்போது அதனைச் சொல்லலாகாது. நாம் இருவரும் தனிமையிலிருந்தால்தான் அது முடியும்” என்று சந்நியாசி சொன்னார். இதைக் கேட்ட அரசி தாமாகவே வேறிடத்துக்குச் சென்றதும், இதுதான் சமயமென்று கண்ட போலிச் சந்நியாசி முத்தநாதன், தான் கொண்டு வந்திருந்த புத்தகக் கட்டுப்போன்ற கட்டை அவிழ்த்து அதனுள் மறைத்து வைத்திருந்த கட்டாரியை எடுத்து அரசனைக் குத்தினான். ஏற்கெனவே கொஞ்சம் கடைக் கண் வைத்திருந்த வாயிற்காவலன் தத்தன் உள்ளே பாய்ந்து தன் கைவாளினால் முத்தநாதனை வெட்டப் போனான். அந்தச் சமயத்திலும் மெய்ப்பொருளார், “தத்தா! இவர் நம்மவர், சிவனடியார். தீங்கு செய்யாதே” என்று தடுத்து நிறுத்தினார். அத்துடன் நில்லாது, “இவருக்கு எவரும் எத்தகைய தீங்கும் செய்ய விடாது, பக்குவமாய் அழைத்துக்கொண்டு போய் ஊரைத் தாண்டி. அனுப்பிவை” என்றும் ஆக்ஞாபித்தார். அவ்வளவு தீவிர சிவபக்தியும் சிவச்சின்னமாகிய விபூதி மேல் பற்றுதலும் கொண்ட அரசன், மெய்ப்பொருள் நாயனார் என்று, அறுபத்து மூவரில் ஒருவராக இறைவனடி சேர்ந்தார். “வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில் பாடி வைத்தார்.

திருக்கோவலூர் வீரட்டானம் என்ற சிவஸ்தலத்திலே மெய்ப்பொருள் நாயனாருக்கு ஒரு சந்நிதியிருக்கிறது. திருக்கோவலூர் மிகப் புராதனமான இடம். இது கீழூர் மேலூர் என்ற இரு பகுதிகளையுடையது. மேலூர் புகழ் பெற்ற வைஷ்ணவ ஸ்தலம். திரிவிக்கிரமர் அல்லது உலகளந்த பெருமாள் கோயில் மிகப்பெரியது. இங்குதான் முன்னொருகால் முதல் மூவர் என்று வணங்கப்படும் வைஷ்ணவ ஆழ்வார்கள் சந்தித்ததாக ஒரு கதையுண்டு. ஒருநாள் இரவு திருக்கோவலூருக்கு வந்த பக்தர்களில் ஒருவர் மழை காரணமாக ஒரு வீட்டுத் தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்றார். வீட்டுச் சொந்தக்காரர் இதைக் கண்டு, அவரை உள்ளே அழைத்து, “இதோ திண்ணையில் ஒருவர் படுக்க இடமிருக்கிறது. இங்கேயே படுத்திருந்து காலையில் போகலாம்” என்று சொன்னார். யாத்திரிகர் நல்லதென்று திண்ணையில் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து மற்றொரு யாத்திரிகரும் வந்து மழைக்கு ஒதுங்கி நின்று, “இங்கே ஒதுங்கக் கொஞ்சம் இடமுண்டா?” என்று கேட்டார். படுத்திருந்தவர் எழுந்து, “உள்ளே வாருங்கள். இங்கே ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்” என்று அழைத்தார். சற்று நேரம் கழித்து, இன்னொரு யாத்திரிகரும் வந்து ஒதுங்க இடம் கேட்டபோது முன்னிருந்த இருவரும், “இங்கே ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்று சொல்லி மூன்றாமவரையும் உள்ளே அனுமதித்தார்கள். இடமோ மிகவும் குறுகியது. மூவரும் ஒருவழியாக நெருக்கிக் கொண்டு நின்றபோது நான்காவதாக ஒருவர் வந்து நுழைந்தாராம். முதல் மூவரும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற வைஷ்ணவ குருபரம்பரையில் முதலாழ்வார்கள் என்று வைத்தெண்ணப்படுபவர்கள். நாலாவதாக வந்தவர்தான் இவர்களை ஆட்கொண்டருளிய பரம்பொருளாகிய திருமால் என்று கர்ணபரம்பரைக் கதையொன்றுண்டு. வில்லிபுத்தூரரின் புதல்வர் வரந்தருவார் இதையொரு அழகான பாட்டில் குறிப்பிடுகிறார்:

பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல்
பாவலர் பாதிநா ளிரவில்
மூவரும் நெருக்கி மொழிவிளக் கேற்றி
முகுந்தனைத் தொழுதநன் னாடு

கோவல் வீரட்டானம் என்ற மிகப் பழைமையான சிவஸ்தலம் கீழூர் என்ற பகுதியிலிருக்கிறது. பக்கத்திலே தெளிந்த நீருடன் பெண்ணையாறு ஓடுகிறது. நல்ல மத்தியான வெயிலில் ஆற்றுநீரில் கால்களை அலசி நடந்தபோது ஆற்றின் மத்தியில் ஒரு பெரிய குன்றையும் அதன்மேல் ஒரு சிறு கோயிலையும் கண்டோம். இந்தக் குன்று கபிலக்கல் அல்லது கபிலக்குன்று என வழங்கப்படுகிறது. அது ஒரு சுவையான சரித்திரத்தையே நமக்கு ஞாபகமூட்டுகிறது.
இந்தப் பிரதேசம் ஒரு காலத்தில் மலையமான் என்ற குறுநில மன்னர் பரம்பரையின் ஆட்சியிலிருந்தது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான மலையமான் திருமுடிக்காரி என்பவன் இந்தத் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். பறம்புமலை அரசனாகவும் முல்லைக் கொடிக்குத் தேர் ஈந்த வள்ளலாகவும் புகழ்பெற்ற பாரி மன்னனிடம் நெருங்கிய நட்புரிமை கொண்டிருந்த புலவர் கபிலர், பாரி இறந்தபோது அவனது இரு புதல்வியரையும் அழைத்துக் கொண்டு வந்து திருமுடிக்காரிக்கு மணஞ்செய்து வைத்தபின், இவ்வுலகில் பாரியின்றித் தனித்து வாழ விரும்பாமல், திருக்கோவலூரில் பெண்ணையாற்றின் நடுவிலுள்ள குன்றின் மீது தீ மூட்டி உயிர் நீத்தார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக திருக்கோவலூர் வீரட்டானேசுரர் கோயிற் கல்வெட்டொன்று பின்வருமாறு கூறுகிறது:

வன்கரை பொருது வருபுனல் பெண்ணை
தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது
மொய்வைத் தியலும் முத்தமிழ் நான்மைத்
தெய்வக் கவிதை செஞ்சொல் கபிலன்
மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலம்
பெண்ணை மலையற்கு உதவி
மினல் புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்
கனல் புகும் கபிலக்கல்

இந்தக் குன்றின்மீது இப்போது ஒரு சிறிய கோயிலும் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆற்றுக்கு வடகரையில் தேவாரப்பாடல் பெற்ற திருஅறையணி நல்லூர் என்ற சிவஸ்தலம் இருக்கிறது. திருக் கோவலூர் வீரட்டானக் கோயில் மிகப் புராதனமானது. தமிழ் நாட்டிலுள்ள அட்டவீரட்டம் என்று சொல்லப்படும் எட்டு விசேட ஸ்தலங்களில் இதுவு மொன்று. வீர ஸ்தானம் என்பது வீரட்டானம் என வழங்குகிறது. சிவபெருமான் நிகழ்த்திய சில வீர நிகழ்ச்சிகளுக்கு அடையாளமாக இந்த எட்டு வீரட்டானக் கோயில்களும் நிலவுகின்றன. கண்டியூரில் பிரமனின் தலையைக் கொய்தது; திருவதிகையில் திரிபுரத்தை யெரித்தது; திருப்பறியலூரில் தக்கனின் சிரசைக் கொய்தது; திருவிற்குடியில் சலந்தரன் என்ற அசுரனைக் கொன்றது; வழுவூரில் யானையை உரித்தது; திருக்குறுக்கையில் மன்மதனை எரித்தது; திருக்கடவூரில் யமனைச் சங்காரம் செய்தது; இங்கு திருக்கோவலூரில் அந்தகாசுரன் என்ற அசுரனைக் கொன்றதாகப் புராணமுள்ளது.
மத்தியான வேளையில் நாங்கள் இந்த ஸ்தலத்தை யடைந்ததால் உடனே உள்ளே போக முடியவில்லை. தென்னாட்டுக் கோயில்களில் பெரும்பான்மையும் மத்தியானம் பன்னிரண்டு மணியிலிருந்து பிற்பகல் நான்கு மணி வரையும் நடையைச் சாத்தி வைத்து விடுகிறார்கள். இதனால் என்னைப் போல் யாத்திரை செய்பவர் களுக்குச் சங்கடந்தான். இருந்தபோதிலும் நிர்வாக அதிகாரியைத் தேடிப்பிடித்து அவருடைய உதவியைக் கொண்டு வீரட்டானேசுரர் கோயிலுட் சென்று தரிசனம் செய்தோம். மேற்குப் பார்த்த சந்நிதி. மூலவர் ஏழு அடி உயரமுள்ள சுயம்புலிங்கம். சுவாமி பெயர் வீரட்டேசுரர்; அம்பாள் பிருஹந் நாயகி. இங்குள்ள உற்சவ மூர்த்தி தான் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி. இவருக்குப் பக்கத்தில் இருபுறமும் சுந்தரமூர்த்தி நாயனாரதும் மெய்ப்பொருள் நாயனாரதும் திருவுருவங்கள் இருக்கின்றன. இங்குள்ள கணபதி ஔவையாரால் வழிபாடு செய்யப்பட்டவர் என்று ஐதிகம். கபிலரைப் போலவே ஔவையாருக்கும் இந்தப் ‘பறம்புமலைப் பிரதேசத்தில் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இந்தக் கோயிலில் மாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஆறாம் நாள் அந்தகாசுரமூர்த்தி திருவீதியுலா வருவார் என்றும் சொன்னார்கள்.
தேவாரம் பாடிய மூவரைப் போலத் திருக்கோவலூரில் வாழ்ந்த மெய்ப்பொருள் நாயனாருக்கு இந்த ஊரில் என்ன சிறப்பு என்று விசாரித்தபோது உள்ளூர் ஆசிரியர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வழங்கிய பாடப்புத்தக மொன்றிலே இந்த நாயனார் சரித்திரமும் சேர்க்கப்பட்டிருந்தது என்று சொன்னார். மெய்ப்பொருள் நாயனார் சரித்திரத்திலே ஒரு முக்கிய அம்சம், அவர் கொல்லப்படும் சமயத்திலும் எதிரியின் சிவ வேடத்துக்கு மதிப்புக் கொடுத்து, அவனைத் துணிக்க வந்த தமது காவலாளியிடம், “தத்தா, இவர் நம்முடையவர். ஆகையால் கொல்லாதே” என்று சொல்லித் தடுத்த காட்சிதான். இந்தப் பெருமையான வார்த்தைகள் சேக்கிழார் 1. குன்றக்குடிக்கு அணித்தேதான் பறம்பு மலை உள்ளது.பெரியபுராணத்திலே, “தத்தா நமர் எனத் தடுத்து வீழ்ந்தார்” என்றுள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலில் இராஜேந்திரசோழன் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில், “தத்தா நமர் காண் என்ற மிலாடுடையாருக்கு” செப்புப் படிமஞ் செய்து வைத்த ஒரு செய்தி காணப்படுகிறது. மெய்ப்பொருள் நாயனாரது வரலாறு எத்தனையோ நூற்றாண்டுகளாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது.
திருக்கோவலூருக்குச் சென்ற நாங்கள் அந்தப் புனித ஸ்தலத்தில் எழுந்தருளியிருந்த ஞானானந்தகிரி சுவாமிகளின் தரிசனத்தையும் பெற்று மகிழ்ந்தோம். நானும் என்னுடன் வந்த எனது இணைபிரியா இலக்கிய நண்பர் “சிட்டி” சுந்தரராஜனும் சில விஷயங்களில் பிடிவாதமான கொள்கையுடையவர்கள். மடங்கள், சந்நியாசிகள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரிக்க மாட்டோம். திருக் கோவலூர் சுவாமிகளைப் பார்க்க எங்கள் கார் சாரதி ராதா கிருஷ்ணன்தான் துடித்துக் கொண்டிருந்தார். அவர் திருப்திக்காகவே நாங்களும் சுவாமிகளைத் தரிசிக்க இசைந்து புறப்பட்டோம். வழியிலே கடைத்தெருவில் ராதாகிருஷ்ணன் புஷ்பம் பழம் முதலிய பொருள்களை எமக்காகவும் வாங்கிச் சேமித்துக் கொண்டார். சற்று நேரத்தில் நகரின் வெளிப்புறத்தில் அமைதியுடன் நிலவும் ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆசிரமத்தையடைந்தோம், ‘ஆசிரமம் முழுவதும் சாந்தம் பரவி நின்றது. சுவாமிகளைத் தரிசிக்கவும் பாதபூஜை செய்யவும் பக்தர்கள் பலர் அங்கங்கே அமைதியாகக் காத்திருந்தனர். சடைத்துப் படர்ந்து வளர்ந்திருந்த ஒரு மாமரத்தின் நிழலிலே நாங்களும் காத்திருந்தோம். தரிசனம் கிடைக்க இரண்டு மூன்று மணியாகலாம் என்ற செய்தி கிடைத்ததும் எங்களுக்குக் கொஞ்சம் சங்கடமாயிருந்தது. எப்படியாவது சுவாமிகளைப் பார்த்துவிட்டுத்தான் போகவேண்டுமென்ற ராதாகிருஷ்ணன் வேண்டுகோளையும் மறுக்க முடியவில்லை. விரைவிலே சுந்தர மூர்த்தி நாயனாரைத் தேடித் திருவதிகைக்குப் போக வேண்டுமே யென்ற கவலையொரு பக்கம். இந்தச் சங்கடமான நிலைமையில் ராதாகிருஷ்ணன் சளைக்காமல் அங்கும் இங்கும் தாவினார். ஏற்கெனவே இவர் ஆசிரமத்துக்கு மிக நெருங்கிய அறிமுகம் பெற்றவர். எப்படியோ எங்கோ நுழைந்து போய்த் திரும்பி, “சுவாமிகள் இன்னும் ஐந்து நிமிஷத்தில் பின்வாயிலுக்கு எழுந்தருளுவார்கள். அப்போது நாம் தரிசனம் செய்ய அனுமதி கிடைத்துவிட்டது” என்ற அற்புதமான செய்தியைக் கொண்டு வந்தார். அவர் சொன்னபடி சற்று நேரத்தில் அந்த மகானின் புண்ணிய தரிசனம் எமக்குக் கிடைத்தது. பழுத்த உடல். உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனி. பால் வடியும் குழந்தையின் முகம். உண்மையான ஞானியின் தீட்சண்யம் நிறைந்த கண்கள். சொரூபத்தையே நாங்கள் அங்கு கண்டு எம்மையுமறியாமல் விழுந்து நமஸ்கரித்தோம். சுவாமிகள் வாய் திறந்து, “தங்கிச் செல்லலாம்!” என்றார்கள். எங்களுக்குத் ‘திக் திக்’ என்றிருந்தது! ஏற்கெனவே ஒரு நேர அட்டவணையை வகுத்துக்கொண்டு யாத்திரையில் வந்த எங்களுக்கு அங்கே தங்கி மறுநாள் செல்வது பல ஏற்பாடுகளுக்கு இடைஞ்சல் செய்யுமாகையால், சுவாமிகளின் அன்புக் கட்டளையைக் கேட்டுத் திணறிவிட்டோம். மறுபடியும் அடியார் ராதாகிருஷ்ணனின் உதவியை நாடி, இந்தச் சங்கடத்தினின்றும் மீள வழி தேடினோம். முடிவில் சுவாமிகளிடம் எமது யாத்திரையின் நோக்கத்தையும் திட்டத்தையும் ராதாகிருஷ்ணன் மூலமாகவே தெரிவித்தவுடன் அந்த மகான் மழலைப் புன்னகையுடன் எங்கள் கையில் சில பழங்களைத் தந்து, “சென்று வரலாம்” என்று விடை கொடுத்தனுப்பினார்! ஒரு பெரியவரின் ஆசீர்வாதம் கிடைத்ததேயென்ற நிறைந்த மனத்துடன் அங்கிருந்து புறப்பட்டோம்.
தமிழ்நாட்டு ஐதிகத்திலே சித்தர்கள் என்ற மகாபுருஷர்கள் பரம்பரையென்று தொன்று தொட்டு வருவதாக ஒரு நம்பிக்கை யுண்டு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட பல சக்திகளை அவர்கள் பெற்றிருந்தார்கள் என்றும், இந்த மண்ணிலேதான் நடமாடினாலும் புறவுலக அறிவும் நடமாட்டமும் அவர்களிடமுள்ளன என்றும் கருதப்படுகிறது. பதினெண் சித்தர்களைப் பற்றித் தமிழிலக்கியங்கள் உள்ளன. அவர்கள் பாடல்கள் என்று சொல்லப்படும் மறைமுகக் கருத்துக்கள் கொண்ட பாடல்கள் வழங்குகின்றன. திருமூலர் திருமந்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. பிற் காலத்திலே பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர் முதலியவர் களின் பாடல்களையும் தமிழ்நாடு முழுவதும் கேட்டிருக்கிறது. சித்தர்கள் காயகல்பம் முதலிய சாதனைகளில் தேர்ச்சியடைந்தவர்கள் என்றும் பலநூறு ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழக் கற்றவர்கள் என்றும் சொல்வார்கள். திருமூலர் மூவாயிரம் ஆண்டு வாழ்ந்தார் என்று நம்பிக்கை நிலவுகிறது. திருக்கோவலூர் ஞானானந்தகிரி சுவாமிகளின் வயதைப் பற்றியும் எவரும் திட்டமாகச் சொல்ல முடியவில்லை. நாலைந்து தலைமுறையினருக்கு மேல் அவர்களை அறிந்துள்ளார்கள். சுவாமிகளை நாங்கள் தரிசித்த பின் சில மாதங்கள் கழித்து அவர்கள் சமாதியடைந்தார்கள். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் இம்மண்ணில் நடமாடினார்கள் என்று விஷயமறிந்த பல அறிஞர்கள் சொல்கிறார்கள். அதில் ஆச்சரியப் படுவதற்கில்லை. முழுமதி போன்ற அந்த முக விலாசத்தை மறக்க முடியாது. பல நூறு ஆண்டுகள் வளர்ச்சி பெற்ற பேரொளி அது.
பசியெடுக்க ஆரம்பித்தது எங்களுக்கு. போகுமிடமெல்லாம் சுத்தமான நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று விசாரித்த பின்தான் ஏதாவது ஹோட்டலுள் நுழைவது எங்கள் வழக்கம். அப்படி விசாரித்தபோது, “பட்டம்மாள் ஹோட்டலுக்குப் போங்கள். வீட்டுச் சமையல் மாதிரியிருக்கும்!” என்று யாரோ ஒருவர் சொல்லி வைத்தார். கடைவீதியில் அந்த ஹோட்டலைத் தேடிக் காரைச் செலுத்திக்கொண்டு போகையில், தெருவோரத்தில் குழாயடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பத்து வயதுச் சிறுமி யொருத்தி, சிரித்த முகத்துடன், “ஸார், ஹோட்டல் தேடுறீங்களா? வாங்கோ இங்கே, இதோ இருக்கு பட்டம்மாள் ஹோட்டல். படியேறி மாடிக்குப் போங்கோ. நல்ல சாப்பாடு. நெய் போடுவாங்க” என்று சிபார்சு செய்து வழிகாட்டினாள். அவளுக்கு நன்றி தெரிவித்து விட்டு, நாங்கள் அந்த ஹோட்டலை நோக்கிச் சென்று கைகால் அலம்பிச் சாப்பிட உட்கார்ந்தோம். ஏதோ பரிமாறினார்கள். ஆனால் நெய் இல்லை! சிறிது நேரத்தில் அந்தச் சிறுமியே நேரில் தோன்றினாள். அங்கே “டேபிள் கிளீன்” செய்யும் பெண் அவள் என்பது பின்புதான் தெரிய வந்தது. பக்கத்தில் அவள் எதிர்ப்பட்டபோது, “நெய் போடுவாங்க என்று சொன்னாயே, பரிமாறவில்லை” என்று கேட்டோம். பதிலுக்கு அவள் ஒரு சிறு புன்னகை வீசிவிட்டுச் சிட்டுப் போல் பறந்தாள். சாப்பாடு முடிந்தபின் அவளையழைத்து, “இந்தா உனது நெய்க் காசு” என்று சொல்லி அவள் கையில் ஒரு பத்துப் பைசா வைத்தோம். நாணிக் கோணி அதை வாங்கிக்கொண்டு, தன் பெயர் புஷ்பவதி என்பதையும் தெரிவித்து ஓடி விட்டாள். அந்தச் செல்வச் சிறுமியின் குறுகுறுத்த பிஞ்சு முகத்தை மறக்க முடியாது. நெடும் பயணம் செய்யும் போது இத்தகைய சிறிய அனுபவங்கள் நமது அலுப்பைத் தீர்த்து உள்ளத்திலே ஒரு புத்துணர்ச்சியைத் தருகின்றன.

சோ. சிவபாத சுந்தரம் /சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ. சிவபாத சுந்தரம்”

Comments are closed.