லெஷ்மி/ அத்வைதமும் ஆட்டிஸமும்

அணிந்துரை

லியோகேனர் ஆட்டிஸத்தைக் கண்டுபிடிப்பதற்கு
முன் ஆட்டிஸம் இருந்ததா?
அது ஒரு நோயாகவோ அல்லது ஒரு குறைபாடாகவோ இல்லை. கண்டுபிடிக்கவோ அதற்கு ஒரு முத்திரை குத்தவோ சீர்திருத்தவோ சிகிச்சை அளிக்கவோ தேவைப்படவில்லை.
மாறாக, மிகவும் பண்பட்ட போற்றத்தக்க உயர்ந்த குணங்களுடைய மனித இ னமாக இருந்தது என்று சொல்லுவேன்.
ஒரு ஆட்டிஸ சிறுவனின் அப்பா (அவரும் ஆட்டிஸ நிலையாளர்தான்) சொன்னதை இங்கு நினைவுகூர்கிறேன். “ ஆட்டிஸம் என்பது பிறழ்ச்சி அல்ல அது மனித மனத்தின் வளர்ந்த உன்னதமான நிலை”.
என் குரு, 16வயது ஆட்டிஸ நிலையாளர் சந்திரகாந்த். பேசமுடியாது.ஆட்டிஸம் குறித்த அவனது விளக்கத்தை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
அதாவது, “பால்வெளியிலிருந்து (galaxy) கிளம்பிவந்த 3020 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு வந்து விண்கலம் உங்கள் வீட்டின் பின்புறம் இறங்கியிருப்பதாக கற்பனைசெய்து கொள்ளவும். திறவுகோல் இல்லாமல் நீங்கள் அதனைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.அதுதான் ஆட்டிஸம்”
“ஆட்டிஸம் என்பது கடவுள் துகளையும் (God particle) தாண்டியது. அதனை எப்படி விளக்க முடியும்?” என்று ‘புக்ஆஃப்ரிவிலேஷன்ஸ்” எனும் என்புத்தகத்தில் 7 வயது நிரஞ்ஜன் எழுதினான்.
“எப்படி மூங்கிலுக்குள் நுழையும் காற்று இசையாக வெளிவருகிறதோ அது போல கடந்த ஜென்மாவின் நினைவு இருக்கும் போது அது ஆட்டிஸமாக வெளிப்படுகிறது” என்று கவிதையாக விஷால் எழுதுகிறான்.
இசை மூலம் ஆட்டிஸத்திற்குள் பயணிக்கும் லெஷ்மி அனுபவம் பிரத்யேக மற்றும் தனிப்பட்ட வெளிப்பாடுகளை வெளிக் கொண்டுள்ளது.
பலரும் தொடாத ஆட்டிஸத்தின் உன்னதநிலையை அதன் நீள அகலத்தை, தத்துவார்த்தமாகவும் ஆன்மீகமாகவும் மிக அழகாக விளக்கியிருக்கிறார். இது முற்றிலும் உண்மை.
அவர் குறிப்பிட்டிருக்கும் ஜடபரதர், ஹஸ்தாமலகர் மட்டுமின்றி தற்காலத்தில் நடமாடும் சித்தர்களும் அவதூதர்களும் இதில் அடக்கம்.
ஒவ்வொரு பிறப்பும் அனுபவமே! முன் ஜென்மம், அந்தப் பிறப்பினால் ஏற்படும் கர்மவினையே இப்போது அனுபவிக்கப்படுகிறது, என்று ஹிந்துக்களால் நம்பப்படுகிறது.
இந்தப் பிறப்பு இறப்பிலிருந்து விடுபடுதல் நிர்வாணம் என்று கூறப்படுகிறது.
கீதையில், அர்ஜீனன் பகவான் கிருஷ்ணனிடம் கேட்கிறான். “தன்னை உணர்ந்த பிரம்ம ஞானிகள் எப்படி இருப்பார்கள்?”
‘அவர்கள் தாமரை இலை தண்ணீர் போல் வாழ்வார்கள். இன்ப, துன்பம் எதுவும் அவர்களை பாதிக்காது.” என்கிறார் அவர்.
“ஆட்டோ பயோகிராஃபிஆஃப் அ யோகி” எனும் ஸ்வாமி யோகானந்தா அவர்களின் புத்தகத்தில் சிலஞானிகளை அவர் வர்ணிக்கிறார்.
அவர்கள் அப்படியே ஆட்டிஸ நிலையாளர்களை ஒத்திருக்கிறார்கள்.
வலி, சுற்றுப்புறச்சூழல், சமுதாயத்திலிருந்து வித்தியாசமாக இருப்பது, புலன் புறத்தெரிவு (Extra sensory perception) கொண்டிருப்பது என ஆட்டிஸ நிலையாளர்களுக்கான அத்தனை குணங்களும் அவரிடையே காணப்படுகிறது.
டாக்டர். தீபக் சோப்ரா தன் புத்தகத்தில், பன்முக ஆளுமைத்திறன் (Multiple personality) கொண்ட ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆளுமையில் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் அறியப்படுகிறது.
மற்றொரு ஆளுமையில் அது தெரிவதில்லை என்கிறார்.
குரு லாஹிரிமஹஸயா கங்கையில் குளித்து கரை ஏறும் போது அவரைக் கடந்தவர், அவரது பாதத்திலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்துபதறினார். “குருவே, தங்கள் காலில் கட்டுப் போட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.
அவரும் போட்டுக் கொண்டார். ஆனால் மற்றொரு காலில். அந்த அளவுக்கு சரீர உணர்வின்றி இருந்தார் அவர்.
“பஜனையில் இருக்கும் போது, இடுப்பில் இருக்கும் துணிநழுவுவது குறித்து எனக்கு, வெட்கமோ அவமானமோ இல்லை” என்று ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸர் கூறுகிறார்.
ஆட்டிஸம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து மறைந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித்ப்ளூஸ்டோன் தன் புத்தகத்தில் ஒருச ம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.
தெரபிவகுப்பில், ஒரு சிறுவனின் முதுகில் கனமான பந்தினை அவனது அம்மா உருட்டித் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் தனது நடவடிக்கையை வர்ணித்துக் கொண்டே இருப்பாள். “நான் இப்போது, உன் பின்னங்காலில் பந்தை உருட்டுகிறேன்” என்பாள்.
அவனுக்கு, தன்னைத் தன் உடலுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாது. அவள் கை வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதும் அவள் வாய் சொல்வதை நிறுத்திவிட்டால், அழ ஆரம்பித்து விடுவான்..
“அம்மா, நீ எங்கே போய்விட்டாய்?” என்று கேட்டு அழ ஆரம்பித்து விடுவான்.
“எத்தனையோ மொழிகளை கடந்த பல பிறப்பில் கேட்டு வந்திருக்கிறேன். என்னுடைய தாய் மொழி என்ன?” என்று அனுதீப் கேட்டான்.
“விஷால் எப்போது விஷாலாக இருப்பான்?” என்று விஷால் கேட்கிறான்.
நாம் எப்படி அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது? நாம் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். நம் இஷ்ட தெய்வத்திடம் பயபக்தியுடன் செல்வது போல அவர்களை அணுக வேண்டும்.
இந்தக் கோளில் வசிக்க அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.
இருளிலிருந்து நம்மை வெளிச்சத்திற்குக் கொண்டு வர அவர்களை அனுமதிக்க வேண்டும்.
இந்த அற்புதமான புத்தகத்தைக் கொண்டு வந்த லெஷ்மி -க்கு என் வாழ்த்துக்கள்!

திருமதி. மைதிலி சாரி, M.Ed., Ed.S (USA) நிறுவனர்,
கமாண்டர் பவுண்டேஷன்
சென்னை

One Comment on “லெஷ்மி/ அத்வைதமும் ஆட்டிஸமும்”

Comments are closed.