வாசு தேவன்/நாவல், சிறுகதையை வாசிப்பது வேறு

நாவல், சிறுகதையை வாசிப்பது வேறு. அதே புனைவை காட்சி மொழியில் பார்ப்பது வேறு அனுபவம். ஒரு சிறுகதையை இரண்டு மணி நேர திரைப்படமாகவும் எடுக்க முடியும். 500 பக்கம் நாவலையும் இரண்டு மணிநேர திரைப்படமாகவும் எடுக்க முடியும். இந்திய சீரியஸ் திரைப்பட வரலாற்றில் ஏகப்பட்ட சிறுகதைகள், நாவல்கள் அபாரமான திரைப்படங்களாக உருமாறியுள்ளன. இங்குதான் இயக்குநரின் மேதமை வெளிப்படும். சில திரைப்படங்களை குறிப்பிடுகிறேன். (அடைப்புக்குறிக்குள் மூலக்கதை ஆசிரியர் பெயர்). ஷியாம் பெனகலின் நிஷாந்த் (விஜய் டெண்டுல்கர்), மணி கவுலின் உஸ்கி ரொட்டி(மோகன் ராகேஷ்), குமார் சஹானியின் மாயா தர்பன் (நிர்மல் வர்மா), சத்யஜித் ரேவின் அப்பு டிரையாலஜி (விபூதி பூஷன் பண்டோபாத்யாயா), அரவிந்தனின் சிதம்பரம் (சி.வி.சீராமன்), மிருணாள் சென்னின் அண்டாரின்(மாண்டோ), ரித்விக் கடக்கின் அஜன்ட்ரிக்(சுபோத் கோஷ்), அடூர் கோபால கிருஷ்ணனின் மதிலுகள் (பஷீர்)….இந்தப் பட்டியல் நீளும். ஒரு படி மேலே போய், தாகூரின் dui bigha jomi என்ற கவிதையை பிமல் ராய் திரைப்படமாக எடுத்தார்.

அச்சில் வெளிவந்த புனைவுக்கும் அதை திரைமொழியாக வெளிவந்ததற்கும் உள்ள வித்தியாசத்தை சில‌ உதாரணங்களால் விளக்க முடியும்.

(1) பஞ்சாபி எழுத்தாளர் மோகன் ராகெஷ் இன் உஸ்கி ரொட்டி சிறுகதை நாலைந்து பக்கங்களில் அடங்கிவிடும்.பேருந்து ஓட்டுநர் சர்தாரின் மனைவி இரண்டு மைல் தொலைவில் இருக்கும் மரத்தடி கிராம பேருந்து நிலையத்திற்கு சென்று தினம் கணவருக்கு சமைத்த ரொட்டி உணவை தரவேண்டும். கணவன் மனைவியை பொருட்டாக மதிக்கவில்லை. அவளுடைய ஆசாபாசங்கள் கணவனுக்கு தெரியவில்லை. கணவன் குடிக்கிறான். சீட்டாடுகிறான். பேருந்து ஓட்டுகிறான். வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருகிறான். இறுதிக்காட்சியில் மனைவி கணவனக்காக உணவு கொடுக்க வேண்டி மரத்தடியில் ஒருநாள் முழுவதும் காத்திருக்கிறாள். கணவன் இரவில் வந்து உணவை பெற்றுக்கொள்வதோடு படம் முடிவடைகிறது.

2 மணி நேரம் ஓடும் படத்தில் மொத்த வசனம்/உரையாடலை இரண்டு பக்கத்திற்கு மேல் கிடையாது. ராப்ர்ட் ப்ரெஸ்ஸன் தாக்கத்தில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு சராசரி இந்திய குடும்ப பெண்ணின் அகப்போராட்டத்தை காட்சிப்படுத்தியுள்ளார். திரைப்படத்தின் அடிப்படை இலக்கணமான ” காட்சி மொழிக்கு’ முக்கியத்துவம் அளித்து வசனத்தை பின்னுக்கு தள்ளியுள்ளார். பெரும்பாலும் க்ளோசப் காட்சிகள். பொதுவில் முகத்திற்கு க்ளோசப் காட்சி வரும். இந்தப்படத்தில் கை,கால்,கழுத்து என உடல் அவயங்களை க்ளாசப்பில் காட்சிப்படுத்தி பெண்ணின் அகப்போராட்டத்தை காட்சிப்படுத்தியுள்ளார். மிக மிக மெதுவாக நகரும் படம். ஒரு நடுத்தர வர்க்க குடும்ப பெண் கணவனின் அன்புக்கும் நேசத்திற்கும் காத்திருக்கிறாள். இதைத்தான் மணிகவுல் “The film is about waiting; it is deliberately slow.” ஒரு எளிய கதையை அபாரமான திரைப்படமாக மாற்றியவர் மணி கவுல்.

(2) ரவீந்திரநாத் தாகூர் எழுதிய குறுநாவல் Nastanirh வின் சத்யஜித் ரே கை வண்ணத்தில் ‘சாருலதா’ வாக மாறியது. 19-ம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியில் கொல்கத்தாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் கதை நகர்கிறது…சாருலதாவின் கணவன் பெரும் செல்வந்தன்…மேட்டுக்குடி அறிவுஜீவி…. சதா பத்திரிக்கை வியாபார சிந்தனை….மனைவி சாருலதா மேல் கவனம் செலுத்தாதவன். வீட்டில் கணவனே தனக்கு அன்னியமாக இருக்கிறான் என்பதை மிக நுட்பமாக ரே காட்சிப்படுத்தியிருப்பார்….மாதபி பைனாகுலரில் அருகில் இருக்கும் கணவனைப் பார்ப்பாள்….அதாவது தன் கணவன் அருகில் இருந்தாலும் மனதளவில் வெகு தூரத்தில் இருக்கிறான் என்பதை ரே மிக அழகாக காட்சியில் கொண்டுவந்திருப்பார்….(இதெல்லாம் நாவலில் இல்லை).தாம்பத்ய சுகம் இல்லாமல் கலை, இலக்கிய கனவுகளோடு இருக்கும் ஒரு பெண்ணின் அகப்போராட்டத்தை திரை மொழிக்கு மாற்றிய மேதை சத்யஜித் ரே.

(3) மீண்டும் ரே, தாகூரின் Ghare Baire நாவலை அதே தலைப்பில் இயக்கினார். இதில் ஒரு காட்சி மிக மெதுவாக நகரும். அடுப்படியிலிருந்து ஒரு பெண் முன் வாசலுக்கு வருவாள். இதை மிக நீளமாகவும், மெதுவாகவும் இயக்கினார். இப்படி எடுத்தற்க்கான காரணத்தை பின்னாளில் விளக்கினார். ஒரு பெண் அடுப்பங்கரையிலிருந்து வெளிவருவதற்கு 1000 ஆண்டுகள் ஆயின. அதை உணர்த்துவதற்கு நீளமான 10 நிமிட ஷாட்டை வைத்தேன் என்றார். மேதை!

உலகளவில் பல நாவல்கள் அபாரமான திரைப்படமாக வெளிவந்துள்ளன. போரிஸ் பாஸ்ட்டர்நெக்கின் டாக்டர் ஷிவாகோ நாவல் அதே பெயரில் ஓமர் ஷெரிஃப் நடிப்பில் டேவிட் லீன் இயக்கி வெளியிட்டார். கொர்த்தஸாரின் ப்ளோ அப் சிறுகதை அதே பெயரில் மைக்கெலாஞ்சிலோ ஆண்டியோனி இயக்கி வெளியிட்டார். மார்க்வெஸ் தன்னுடைய காவிய நாவல் One Hundred Years of Solitude ஐ திரைப்படமாக எடுக்க அனுமதி வழங்கவில்லை. ஹாலிவுட் மற்றும் சீரியஸ் இயக்குநர்கள் மில்லியன் டாலர்கள் கொடுக்க தயாராக இருந்தும் மறுத்துவிட்டார். காரணம் அவருடைய Love in the time of Cholera நாவல் திரைப்படமாக மாறியபோது அவருக்கு துளிக்கூட திருப்தியில்லை.

ஆக நாவல்/சிறுகதை/கவிதை வாசிப்பது வேறு. அதை திரைப்படமாக எடுப்பதற்கு பல திறமைகள் தேவை. காட்சி மொழியின் கற்பனை வளம், திரைக்கதை, வசனம், ஒலி கோர்ப்பு, இசை, எடிட்டிங், நடிகர்களின் உடல் மொழி, கேமேரா கோணம், ஒளி அமைப்பு பல விஷயங்களை தெரிந்தால்தான் ஒரு எளிய புனைவை அபாரமான திரைப்படமாக மாற்ற முடியும். ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு மொத்த அவயங்களையும் ஒப்புக்கொடுத்தாக வேண்டும். ஒரு பார்வையாளனை பங்கேற்ப்பாளனாக மாற்றுவதற்கு ஒரு மேதை இயக்குநரால் மட்டுமே முடியும்.

(புகைப்படத்தில்‍__ சாருலதா திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிகை பேரழகி மாதபி முகர்ஜி. இந்தப்படத்தில் எழுதிய தாகூரையும் இயக்கிய‌ ரேவையும் தன் நடிப்பால் சவாலுக்கு அழைத்தவர்)