லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

2 . மனம் என்னும் மாயக் கண்ணாடி!

ஒரு ஜென் குரு தன் எளிமையான உபதேசங்களால் அந்த கிராம மக்களைத் திருத்தி நல் வழிப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய வரவால் அம்மக்களும் அமைதியுடன் வாழ்ந்து வந்தார்கள்.
இதனைக் கண்டு பொறுக்காத ஒருவன், அவரிடம் சென்று, “நீங்கள் என்ன பெரிய மஹானோ, என் கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு நீங்கள் போதனை செய்யலாம்’ என்றான்.
அவரும், அன்போடு அவனை அவரது குடிலுக்கு வரவேற்று உபசரித்து டீ தயாரித்து எடுத்து வந்தார்.
பின் கோப்பையை வைத்து அதில் டீ ஊற்றினார். நிரம்பி வழிந்தது. ஆனாலும் அவர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. வந்தவன் கோபமாகி, “ஐயா ஏன் மேலும் மேலும் ஊற்றுகிறீர்கள்?” என்றான்.
“ஐயா நீங்களும் கோப்பையும் ஒன்றுதான். முதலில் உள்ளே வெறுமையாக்குங்கள். பிறகு நிரப்பலாம்” என்றார் குரு.
தோராயமாக மனிதனுக்கு, ஒரு நொடியில் 150 சிந்தனைகள் வந்து போவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
கால் இருக்கிறது என்பதால் நடந்து கொண்டே இருக்கிறோமா?
இல்லையே!
ஆனால், எண்ணங்கள் மட்டும் ஏன் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன?
பொதுவாகவே, நாம் கட்டாயச் சிந்தனையாளர்களாகத்தான் இருக்கிறோம். இது அதீதமாகப்போகும் போது, தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் சிலரைப் பார்க்கிறோம்.
அந்தக் குரலைக் கேட்க முடிவதில்லை என்று சொல்வார்கள்.
மனம் என்பது உணர்ச்சி வசப்படுவது, குழம்புவது. புத்தி தீர்மானிப்பது, தெளிவடைவது.
உதாரணத்திற்கு, நீங்கள் எதிர்பாராமல் வீட்டிற்கு பழைய நண்பர் திடீரென வந்துவிடுகிறார். “அடடா….. அவருக்கு குடுக்க ஸ்வீட் இல்லயே” என்று மனம் புலம்பும்.
அதுனாலென்ன, அவருக்கு ஜாமூன் ரொம்ப பிடிக்குமே. தயார் செய்து குடுத்து விடலாமே. அதற்குத் தேவையான பொருட்கள் இருக்கிறதே!” என்று புத்தி தீர்மானம் செய்யும்.
மனமும் புத்தியும் சேர்ந்த பகுதியே உள்ளம் ஆகும். மனம் என்பது எண்ணங்கள் மட்டும்தான்.
உதாரணமாக ஒரு சிலந்தியை நம் மனம் என்று வைத்துக் கொண்டால், அதன் இழைகள்தான் எண்ணங்கள்.

எப்படி வலை இல்லாமல் சிலந்தி இருக்காதோ அது போல எண்ணங்கள் இல்லாமல் மனம் இருக்காது. பலவிதமான எண்ணங்கள், உணர்ச்சிகள், நினைவுகள், கோபம், பொறாமை, ஆற்றாமை, புது யுக்திகள், காமம், மோகம், விருப்பு, வெறுப்பு என நல்ல மற்றும் மோசமான எண்ணக் கலவைதான் நம் மனம்.
எப்போதும் எண்ணிக் கொண்டே இருக்கும்.
என்ன எண்ணும். ஒன்று கடந்த காலத்தைக் குறித்து எண்ணும். அல்லது எதிர்காலத்தைக் குறித்து எண்ணும்.
இது இரண்டுக்கும் இடைப் பட்ட நிகழ் காலத்தைப் பெரும்பாலான மனம் தொடாது.
“நான்” என்ற எண்ணம் உதிக்கும் இடம் இதுவே.
ஒரு தாத்தா, தன் கடந்த கால போட்டோக்களைப் பேரக் குழந்தைகளுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
தன் சிறு வயது போட்டோவைக் காட்டி, யார் இது? என்றார் ஒரு குழந்தையிடம்.
அது” பாப்பா” என்றது.
“இல்லை. அது நான் என்றார்”.
அது மீண்டும், “பாப்பா” என்றது.
அந்த முதியவரின் அப்போது இருந்த நான் என்ற உணர்வும் இப்போதிருக்கும் நான் என்ற உணர்வும் ஒன்றுதானா? அப்படி என்றால், வயது முதிர்ந்து உடல்தான் மாறியுள்ளது.
அவரது உள்ளத்தில் “நான்” எனும் எண்ணம் மாறவே இல்லை என்றுதானே அர்த்தம்.
எண்ணங்களின் வலைப் பின்னலே மனம். அதில் தோன்றும் முதல் எண்ணம் “நான்” ஆகும்.
ஒரு குழந்தையின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை விளங்கும்.
பேச ஆரம்பிக்கும் போது, மழலையில் தன் பெயரைச் சொல்லிக் கொண்டு, “அஜய்க்கு பொம்மை வேணும், அனுவுக்கு சாக்லெட் வேணும்” என்று கேட்கும் குழந்தை. ஒன்றரை வயதிலிருந்து “எனக்கு வேணும்” என்று கேட்க ஆரம்பித்து விடும். “நான், எனது” தெரியத் தொடங்குவது அப்போதுதான்.
ஒரு மனிதனின், வாழ்வில் அச்சிறு வயதில் வர ஆரம்பித்த அந்த வார்த்தைகள்தான் அவன் வாழ் நாள் முழுவதும் அவனை ஆண்டு கொண்டிருக்கும்.
இன்னும் சொல்லப் போனால், “நான், எனது” என்ற இந்த இரண்டையும் தொலைத்து விட்டால் உனக்குத் துன்பமே இல்லை. எப்போதும் பேரானந்தமே என்கிறது உபநிஷத்.
இங்கு ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தன் உணர்வை, சுய ஸ்வரூபத்தை, நான் என்ற உணர்வை (consciousness) ஆராய்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவப் பேராசிரியர் (Dr.Evan Thompson) டாக்டர். இவான் தாம்ஸன், “நான்” எனும் உணர்வை, உபநிஷத்துக்கு முன் உபநிஷத்துக்குப் பின் என்று பிரிக்கலாம்” என்று கூறுகிறார்.
இப்படி எப்போதும் மாறாமல் ஒரே போல் நிலைத்து உண்மையாயிருக்கும் சத்திய நிலையே “நான்” எனும் இருப்பு நிலை. இதுவே ‘ஸத்’ ஆகும்.

One Comment on “லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்”

Comments are closed.