லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

“நான்”யார் அறிவோமா?

1
இது என்ன கேள்வி?
என்னை எனக்குத் தெரியாதா?னு நீங்க கேள்வி
கேட்கலாம்.
மேற்கத்திய புகழ் பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வெயின் (Mark Twain) ‘உனக்கு தெரியாதுனு சொல்ற விஷயங்கள்னால உனக்குப் பிரச்சினைஇல்ல. உனக்குத் தெரியும் அப்படீங்கறதுனாலயே நீ பிரச்சினைக்குள்ள மாட்டிக் கொள்கிறாய்” அப்படீன்னு சொல்கிறார்.
அது இங்க ரொம்பப் பொருந்தும்.
எப்படி?
நான் யார்னு எனக்குத் தெரியும். அப்படீன்னு சொல்றதுதான் இங்க பிரச்சினையே!
உன்னை உடலிலிருந்து பிரித்தறிந்து கொண்டால் உனக்கு மோட்சம் உண்டு என்கிறது வேதாந்தம்.
உன் உண்மை நிலையை அறிந்து கொண்டால் உனக்கு வீடு பேறு என்கிறது உபநிஷத்.
அப்படி என்றால், நான் ராம் இல்லையா? தீப்தா இல்லையா? என் உடல், மனம், கேள்வி கேட்கும் நான் எல்லாம் பொய்யா? என்று கோபம் பொத்துக் கொண்டு வரலாம் உங்களுக்கு. பொறுமை! பொறுமை!
நாம் எல்லோரும் நம்மை, இந்த உடல் மற்றும் மனத்துடன் தொடர்பு படுத்திக் கொள்கிறோம். பெர்சனுடன் தொடர்பு படுத்துவதாலேயே பெர்ஸனாலிடி ஆயிற்று.
இந்த உடல் மற்றும் மனத்திற்குள் ராமுவோ தீபாவோ ராதாவோ உட்கார்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறோம்.
அதன் தாக்கம்தான் மேலே பார்த்த கேள்விகள்.
அப்போ நான் அது இல்லியா?
பெர்ஸன்(person) என்பது கிரேக்க வார்த்தையாகும். இதன் அர்த்தம் மாஸ்க், அதாவது முக மூடி ஆகும். பழங்காலத்தில் கிரேக்க நாடகங்களில், வரும் கதா பாத்திரங்கள், தங்கள் பாத்திரத்துக்கேற்ற முகமூ டியைப் போட்டுக் கொண்டு மேடை ஏறுவதுண்டு. அதில் இருக்கும் ஒரு பெரிய ஓட்டை வழியே வசனங்களைப் பேசுவார்கள். ஒலி வரும் ஓட்டை (sona) ஸோனா எனப்படும். மைக் இல்லாத அந்தக் காலத்தில் ஒலி பெருக்கியாய் இது செயல் பட்டது.
இந்த முகமூடி போட்ட மனிதனுடன் நாம் ஒவ்வொருவரும் நமை தொடர்பு படுத்திக் கொண்டு உண்மையை உணராமலிருக்கிறோம்.
ஒருவன் அவன் ஊரிலிருந்த ஒரு சாதுவிடம் சென்று, “ஸ்வாமி, எனக்கு தலை வலி அதிகமாக இருக்கிறது! என்றான்.
அதற்கு அவர், அப்படியா? வலியை உணருகிறாயா? என்றார்.
‘ஆம் ஸ்வாமி. வலி உயிர் போகிறது’ என்றான். உடனே அவர், ‘அப்படீன்னா, அதனை அனுபவிப்பது நீ இல்லை போகலாம்” என்று அனுப்பி விட்டார்
அவனை.
மறு நாள், அவ்வழியே மாடு மேய்த்துக் கொண்டு வந்தான் அவன். அவனைப் பார்த்த சாது,’ தலைவலி சரியாகி விட்டதா?” என்றார்.
“ஆம் ஸ்வாமி, இப்போ நிம்மதியா இருக்கேன்’ என்றான் அவன். ‘நிம்மதியை அனுபவிப்பதும் நீ இல்லை” என்று சொல்லிக் கொண்டே சென்று விட்டார் அவர். ஒன்றும் புரியாமல் அவர் போன பாதையைப் பார்த்தபடி நின்றான் அவன்.
இது என்ன ஒரே குழப்பமாக இருக்கே?
நியூயார்க்கில் உளவியலாளர்களின் மாநாடு நடந்தது. தலை சிறந்த உளவியலாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
“நான்” என்பது ஒருவரது இடுப்புக்கு மேல் புறத்திலா கீழ் புறத்திலா?” என்று கேள்வி எழுப்பப் பட்டது.
ஒட்டு மொத்தமாக அனைவரும் இடுப்புக்கு மேலே என்றனர்.
“சரி. நெஞ்சுக்கு மேலா நெஞ்சுக்குக் கீழா?” “நெஞ்சுக்கு மேல்” என்றனர்.
“சரி. கழுத்தில் கோடு போட்டால், மேலா கீழா?” “மேல்” என்றனர் அனைவரும்.
“தலையா? நெற்றிப் பொட்டிலா?” என்று கேள்வி எழுந்தது.
சிலர், நெற்றிப் பொட்டு என்றனர். சிலர் தலையில் என்றனர்.
“சரி, இதனைக் குறிப்பிட்டுச் சொல்வது யார்?” அங்கு மௌனமே பதிலாய் இருந்தது.
கை, கால், கண், மூக்கு, நாக்கு என்று காண்பிக்கலாம். ஆனால் “நான்” அப்படீங்கற தன் உணர்வை, தூய உணர்வை (consciousness) எதற்குள்ளும் வரைமுறைப் படுத்தி விட முடியாது.
ஆனால், உலகில் ஒட்டு மொத்தமாக அனைவரும், தெரிந்தோ தெரியாமலோ உணர்ந்தோ உணராமலோ, இனம், மொழி, நிறம், தேசம் பாகுபாடின்றி ஒரு செயலை ஒரே போல் செய்கிறோம். என்ன அது?
“நான்” என்று சொல்லிக் கொள்ளும் போது, நெஞ்சில் கை வைத்துக் கொள்கிறோம்.
தப்பித் தவறிக் கூட தலையிலோ காலிலோ கை வைத்துச் சொல்லிக் கொள்வதில்லை.
ஏன்? எப்படி? பின் வரும் அத்யாயங்களில்
பார்க்கலாம்.