நாச்சியாள் சுகந்தி/பிழைக்கத் தெரியாதவனின் காதலி

பிழைக்கத் தெரியாதவனைக் காதலிப்பவளை
கிறுக்கென்று அழைப்பதில்
அடைமொழி கொள்வதில் பிழையொன்றும்
இல்லை உலகத்தீரே

பிழைக்கத் தெரியாதவனின் காதலிக்கு
ஒரு சாண் வயிறுக்கு
சுருங்கத் தெரியுமளவுக்கு
விரியத் தெரியாது

ஈறுதெரிய சிரிக்கும்
கள்ளம் கபடமற்ற சிரிப்பை
அமுதென அவ்வப்போது உண்பவளுக்கு
வயிறெதற்கு என்று கேட்டாலும் தவறில்லை தான்

பிழைக்கத் தெரியாதவனுக்கு
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது
போலவே வார்த்தைகளை அலங்கரித்தும் பேசத் தெரியாது
அதனாலேயே அவனால்
பணக்காகிதங்களை அள்ளத் தெரியாது
சமயங்களில் அவற்றை எண்ணவும் மாட்டான்

இப்படியான ஒருவனை காதலிப்பவளுக்கு
ஆடம்பரம் என்பது அலங்கரிக்கப்பட்ட வறுமை
வாழ்வென்பது அந்தந்த நிமிடத்தில் வாழ்தல்
காதலென்பது மனநிறைவு
ஆம்
அவளுக்கு காதலென்பது
ஒரு பலூனுக்கு சிரிக்கும்
குழந்தையின் மனநிறைவு

May be an image of 1 person