சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாதசுந்தரம்

  1. திருவடியே சிவலோகம்

திருவெண்ணெய்நல்லூரில் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரர் ‘வன்தொண்டர்’ ஆகி, இறைவனின் நெருங்கிய தோழமையைப் பெற்று, செந்தமிழ்ப் பாமாலை பாடப் புறப்பட்டார். காலம் காலமாகவே நமது நாட்டில் இறைவனுக்குக் கோயில்கள் அமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. சாதாரணமாக ஒரு மரத்தடியில் குடிசை போட்டு இறைவன் வடிவத்தை அங்கு வைத்தார்கள். மண்ணாலும் சுதையாலும் மரத்தாலும் கோயில் கட்டினார்கள். பின்னர் கல்லைக் குடைந்து குகைக் கோயில் சமைத்தார்கள். அதன் பின்னர் கற்றளி என்ற கருங்கல் கோயில்களையும் கட்டினார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திலேதான் கற்றளி என்ற கற்கோயில்கள் கட்ட ஆரம்பித்த நிலையென்று சரித்திரத்தில் படிக்கிறோம். ஆனால் சுதையாலும் மண்ணாலும் மரத்தாலும் கட்டிய கோயில்கள் பல அதற்கு முன்னரே இருந்தன. சுந்தரமூர்த்தி ஒவ்வொரு கோயிலாகத் தரிசித்து, அங்கங்குள்ள மூர்த்தியை வணங்கி, தேவாரம் சூடி அருச்சித்தார். திருவெண்ணெய்நல்லூரிலிருந்து திரும்பி வந்து தமது பிறப்பிடமாகிய திருநாவலூரைத் தரிசித்து விட்டு, மேலே திருத்துறையூரில் ஒரு பதிகம் பாடிக்கொண்டு, தில்லையை நோக்கி நடந்தார். போகும் வழியில் பெண்ணையாற்றைக் கடந்து திருவதிகை என்ற ஸ்தலத்தின் எல்லைக்கு வந்தபோது அஸ்தமன வேளையாகி விட்டது. திருவதிகை திருநாவுக்கரசு நாயனார் என்ற அப்பர் சுவாமிகளோடு தொடர்பு கொண்ட புண்ணிய ஸ்தலம். அத்தகைய மகத்துவம் பொருந்திய பூமியில் தாம் கால் மிதிப்பது தகாது என்று அஞ்சிய சுந்தரர், பக்கத்திலிருந்த ஒரு மடத்திலே போய்த் தங்கினார். அந்த மடம் சித்தவடமடம் என்று சொல்லப்படுகிறது.

சித்தவடமடத்தில் போய் சுந்தரர் தம்முடன் தொடர்ந்து வரும் அடியார் கூட்டத்தோடு அன்றிராப் பொழுதைக் கழிக்கத் துயில்
கொள்ளலானார். சிறிது நேரம் சென்றபின் யாரோ ஒரு கிழ சந்நியாசியும் அந்த மடத்திலே வந்து படுத்தவர், சுந்தரர் தலை மாட்டில் காலை நீட்டி அடிக்கடி அவர் தலையைத் தம் காலால் உதைத்துக் கொண்டிருந்தார். திடீரென விழித்துக்கொண்ட சுந்தரர், “யாரப்பா நீ? உன் கால் என் தலைமேல் இருக்கிறதே. பார்த்துப் படுக்கக் கூடாதா?” என்று கண்டித்தார். சந்நியாசி அடக்கமாகவே, “கோபித்துக் கொள்ள வேண்டாம். அறியாமல் நடந்துவிட்டது. வயசான காலத்தில் களைப்பு மிகுதியால் ஒன்றும் தெரியவில்லை” என்று சொல்லிக்கொண்டு கால்களை இழுத்து மடக்கிப் படுத்தார். சுந்தரரும் வேறு திசையில் தலையை வைத்து உறங்கத் தொடங்கினார். சற்று நேரம் கழித்து மறுபடியும் அவர் தலைமீது அந்தத் துறவியின் கால் உதைக்கத் தொடங்கியது. சுந்தரருக்கு அசாத்திய கோபம் வந்து விட்டது. “என்னய்யா நான் சொல்லச் சொல்ல நீ பாட்டுக்கு உதைக்கிறாய்??” என்று சீறி விழுந்தார். துறவி மெதுவாக எழுந்து நின்றார். புன்னகை புரிந்தார். “நான் யாரென்று இன்னுமா நீ தெரிந்து கொள்ளவில்லை?” என்று கேட்டவர் அப்படியே மாயமாய் மறைந்தார்.

சுந்தரர் தேகம் முழுவதும் புல்லரிக்கத் தொடங்கிவிட்டது. இறைவனின் சோதனை எப்படியெப்படியெல்லாம் நடக்கிறது! “என்னையாட்கொண்ட பெருமான் இங்கே வந்து எனக்குத் திருவடி தீட்சை தந்த பெருமையை நான் என்னென்று சொல்வேன்?” என்று நினைந்து, திருவதிகையில் எழுந்தருளியிருக்கும் வீரட்டானேசு வரரைத் துதித்துப் பாடினார்:
எம்மான்தன் னடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை இறைப் போதும் இகழ்வன் போலியானே.

“தாமே வலிய வந்து எனது முடிமேற் பலமுறையும் திருவடி சூட்டிய தலைவனை அறியாது இறுமாப்படைந்து மதிக்காமல் ஏசி இகழ்ந்தேனே” என்று பாடிய தேவாரத்தில் அந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் சுந்தரர். திருவடி சூட்டும் பெருமை மிகப் பழுத்த ஞானிகளுக்குத்தான் கிடைக்கக்கூடிய பேறு. சைவசித்தாந்தக் கொள்கையின்படி இறைவன் திருப்பாதங்களில் பணிந்து சரண் அடைவது சிறந்த முத்தியின்பத்தின் அடையாளமாகும். ஞான மார்க்கத்தில் ஒருவர் பிரவேசித்து விட்டார் என்பதற்கு அறிகுறி.சோ. சிவபாத சுந்தரம்
31.
திருவடிப் பெருமையைப் பற்றித் திருமூலர் தமது திருமந்திரத்தில்
சொல்கிறார்:

திருவடியே சிவமாவது தேரிற்
திருவடியே சிவலோகம் சிந்திக்கிற்
திருவடியே செல்கதி அது செப்பிற்
திருவடியே தஞ்சம் உள் தெளிவோர்க்கே.

சித்தவடமடத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு புதிய உணர்ச்சியைத் தந்தது. இறைவனோடு நேருக்கு நேர் கலந்து கொண்ட அனுபவமும், இனிமேல் வரப் போகும் வாழ்க்கை யனுபவங்களும் எல்லாமே சாதாரண மக்கள் வாழ்க்கை அனுபவங்களாயில்லாமல் ஈஸ்வரனுக்கு அர்ப்பணமாகும் அனுபவங்களாயிருக்கப்போகின்றன. ஏசலும், பேசலும், இச்சித்தலும், வெறுத்தலும், பின்னால் நிகழவிருக்கும் காதல் வாழ்க்கையும், எல்லாமே ஈஸ்வரார்ப்பணம் என்ற நிலையைப் பெறுகின்றன. ஆகையால், திருவெண்ணெய்நல்லூரில் பித்தன் என்று ஏசியபின் தடுத்தாட்கொண்ட நிகழ்ச்சியைப் பார்க்கிலும் இங்கே சித்தவட மடத்து நிகழ்ச்சிதான் ஆரூரர் வாழ்க்கையில் முக்கியத் திருப்பம் என்று சொல்ல வேண்டும். பரிபக்குவம் என்ற ஞானத்தின் முழுமையைப் பெற்ற திருப்பம் இது.
*
*
*
திருக்கோவலூரிலிருந்து திருவதிகையை அடைந்த எங்களுக்கு இந்தச் சித்தவடமடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க எவ்வளவோ சிரமமாயிருந்தது. பழைய புராணங்களிலும் வரலாற்று நூல்களிலும் காணப்படும் இடப்பெயர்கள் காலகதியில் சில மறைந்தும், மற்றும் சில திரிந்தும் போய்விடுகின்றன. இந்தச் சித்தவடமடம் என்ற பெயரும் அப்படித்தான். திருவதிகைக்குப் பக்கத்தில்தான் எங்கேயோ ஒரு சின்னமாகவாவது இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் எத்தனையோ பேரிடம் விசாரித்துப் பார்த்தோம். எவராவது திருப்தியான பதில் சொல்லக் காணோம். கடைசியாக ஒரு வழிப்போக்கர், “புதுப்பேட்டைப் பக்கம் போய் விசாரித்துப் பாருங்கள். அங்கே வயதான குருக்கள் இருக்கிறார். ஒருவேளை அவருக்குத் தெரிந்திருக்கலாம்” என்று சொன்னார். திருவதிகைக்குப் பக்கத்திலுள்ளது புதுப்பேட்டை. அங்கே போய்க் குருக்கள் வீட்டை விசாரித்துக் கண்டுபிடித்தோம். மோட்டாரில் போயிறங்கிக் குருக்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னவுடன் வாசலுக்கு வந்த பெண்கள் அவ்வளவாக எங்கள் வருகையை வரவேற்றார்கள் என்று சொல்வதற்கில்லை! என்னவோ ஏதோ, எந்த அதிகாரிகளோ என்று சந்தேகப்பட்டார்கள். நல்ல வேளையாக உள்ளேயிருந்து ஓடி வந்த ஒரு சிறு பையன், “தாத்தா, தாத்தா! யாரோ வந்திருக்கா” என்று தாத்தா உள்ளேதான் இருக்கிறார் என்ற உண்மையை வெளிப்படுத்திவிட்டான். தாத்தாவும், உடை விஷயத்தில் எவ்வித முன்னேற்பாடு மில்லாமல், அரையில் கட்டிய சிறு முண்டோடு வந்து இன்முகத்துடன் “வாருங்கள்!” என்று வரவேற்றார். எழுபத் தைந்து வயது மதிக்கக்கூடிய பெரியவர். களை பொருந்தி முகம். பரம வைதிகச் சாயல். அவர் பேச்சிலிருந்து, நிறைந்த கல்விமான் என்பதைத் தெரிந்து கொண்டோம். ராஜாக் குருக்கள் என்று பெயர். உண்மையில் ராஜகுரு போல்தான் தோற்றமளித்தார். சிறந்த பண்பாடுள்ள மனிதர். சித்தவடமடம் பற்றிய எங்கள் பிரச்னையைச் சொன்னோம். அவர் சிறிதும் சந்தேகத்துக்கிடமில்லாமல், “சித்தவட மடமா? அது இங்கேதான் பக்கத்திலிருக்கிறது. முன்பொரு காலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் திருவடி சூட்டிய இடம். இப்போது அங்கே ஒரு ஈஸ்வரன் கோயிலிருக்கிறது. சோழர் காலமோ பாண்டியர் காலமோ என்று நிச்சயமாகத் தெரியாது. நித்திய பூஜை நடைபெற்று வருகிறது. நான்தான் அதைப் பார்த்துக்கொள்கிறேன், போய்ப் பார்த்து வரலாமா?” என்று மூச்சுவிடாமல் எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லிவிட்டார். தேடிய பூண்டு காலில் மிதிபட்டதுபோல், சித்தவடமடத்தைத் தேடியலைந்த எங்களுக்கு அது தானாகவே வந்து எதிர்ப்பட்டது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ராஜாக் குருக்களுக்கு நன்றி தெரிவித்து அவரையும் அழைத்துக் கொண்டு சித்தவடமடம் என்று சொல்லப்படும் இடத்துக்குச் சென்றோம். பழைய கோயில். அழகுபட அமைந்த நெடிய விமானம். குருக்கள் சொன்னது போல, பிற்காலச் சோழர் அல்லது பாண்டியர் காலத்து அமைப்பு என்று கருதலாம். விமானம் முழுவதும் பௌராணிகச் சிற்ப வடிவங்கள் மிக்க எழிலுடன் காணப்படுகின்றன. கோயிலுக்குச் சிதம்பரேஸ்வரம் என்று பெயர். பிற்காலத்தில் சித்தவத்தை மடம், சித்தாத்த மடம், சித்தாண்டி. மடம் என்றெல்லாம் திரிந்து பெயர் வழங்கியதாம். இப்போது இந்தப் பகுதி கோட்லம் பாக்கம் (கோடாலம்பாக்கம்) என்று உள்ளூர் மக்களால் வழங்கப் படுகிறது என்று அந்தப் பெரியவர் ராஜாக் குருக்கள் விளக்கினார்.

சித்தவடமடத்து சிதம்பரேஸ்வரரைத் தரிசித்து உளமார வணங்கினோம். எங்கள் யாத்திரை எவ்விதத் தடையுமின்றி நிறைவேற வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டோம். சுந்தரருக்குத் திருவடி சூட்டிய பெருமான் போலவே, வழி தெரியாது திகைத்த எங்களுக்கு வழிகாட்டியாக வந்த சிறந்த மனிதர் ராஜாக் குருக்களுக்கு எங்கள் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து விட்டுப் புறப்பட்டோம். அந்தக் குருக்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு நிறைவைத் தந்தது.

சுந்தரமூர்த்தி இங்கிருந்து தில்லைக்குப் போகிறார். அவரைப் பின்தொடர்ந்து நாமும் அங்கே போகலாம். ஆனால் திருவதிகைப் பக்கமுள்ள சித்தவடமடத்திலிருக்கும் நாம் திருநாவுக்கரசர் என்ற அப்பர் சுவாமிகளுக்கு மிகவும் சம்பந்தமுள்ள திருவதிகையைப் பார்க்காமல் போகமுடியாது. அதற்கு முன் அப்பர் அவதாரம் செய்த திருவாமூர் என்ற ஸ்தலமும் சமீபத்திலேதான் உள்ளது. ஆகையால் செந்தமிழிசையில் திருத்தாண்டகம் என்ற மகோன்னதமான பாமாலை புனைந்த நாவுக்கரசரையும் அவர் வரலாற்றையும் தொடர்ந்து பார்க்க வேண்டிய ஆசை ஏற்படுமல்லவா? அதற்குச் சந்தர்ப்பமும் வாய்ப்பாயிருக்கிறது. திருவாமூரில் அவர் பிறந்தார். பக்கத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூரில் சமண சந்நியாசியாக இருந்து தருமம் கேட்டார். பின்னர் வயிற்று நோயால் கஷ்டப் பட்டுத் திருவதிகை வந்து தமக்கையாரின் வேண்டுகோளின்படி சைவரானார். இறைவனருள் கிடைத்து தேவாரம் பாடி, ஸ்தல யாத்திரை செய்தார் என்ற செய்தியை நாம் கேட்கிறோம். ஆகையால், சுந்தரரைத் தில்லைக்குப் போகவிட்டு, இப்போது திருநாவுக்கரசரைச் சந்திக்கத் திருவாமூருக்குப் போவோம்.

சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ. சிவபாத சுந்தரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

2 Comments on “சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாதசுந்தரம்”

Comments are closed.